தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்கும் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றினை அடைவது அத்தியாவசியம் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் அத்தகைய தீர்வினை அடைய முடியாத பட்சத்தில் நாடு எதிர்கொக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாமற்போகும் எனவும் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடந்தேறியுள்ள நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை எனவும், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அமெரிக்க தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என தூதுவரை இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர், ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதனை அமெரிக்கா வலியுறுத்துவதாகவும், ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கு அவற்றை நடைமுறைப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.