முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்தார்.
அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கிறார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்ததுதான். அரசியல் அமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும், அரசியல் அபிலாசைகளையும் கரைத்துவிடடோம்.
ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் எம்மைப் பயன்படுத்தி விட்டார்கள். இந்த அதிகாரப்போட்டியில் யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ, அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சிநிரல் இன்றி செயற்பட்டமையே இன்றைய எமது இந்த கையறு நிலைக்கு காரணமாகும். எது எப்படியோ நடந்தவை நடந்து முடிந்து விட்டது. இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந்தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இன முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் மனோநிலையை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டும். இனிமேல் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வழி வகுக்க வேண்டும்.
எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை உறுப்பு நாடுகளும், ஏனைய நாடுகளும் முன்வைக்க வேண்டும்.
இதன்மூலம் இறுதிக்கட்ட யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதன் மூலம், உண்மையான இன நல்லிணக்கத்தை கொண்டுவர முடியும்.
இல்லாவிட்டால், குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாப்பதற்கு போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இனமுரண்பாட்டை மேலும் சிக்கலுக்கு கொண்டு போக மாட்டார்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.