இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல்வாதிகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமது ஆட்சிக்காலம் முழுவதும் ஹிட்லர் போன்று செயற்பட்ட போதும் இந்திய மத்திய அரசு அமைதி காத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு உடனடியாக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவிற்கு விற்கப்படலாம். எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு அதிகாரத்திக் கொடுக்க முயற்சிப்பது, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இதில் உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.