ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை 2 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
13 மனுக்களில் 12 மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், இன்று மீதமுள்ள மனு மீதான விசாரணை இடம்பெறுகின்றது.
இதனையடுத்து, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்களில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தாக்கல் செய்திருந்த மனு முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இரா.சம்பந்தன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கனக் – ஈஸ்வரன் மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமின்றி நான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் 19 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தின் 70 உறுப்புரைக்கமைய ஜனாதிபதியிடமிருந்து மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.