திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர் என்ற மாணவனின் தாயார் உயிரிழந்துள்ளார்.
தனது மகனின் படுகொலைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நீதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாணவர் படுகொலை கடந்த 2006 ஜனவரி 2ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
அதாவது உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைகழகம் உள்ளிட்ட வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருந்த மாணவர்களே படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சுற்று வட்டத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் கொல்லப்பட்ட ரஜித்தர் என்ற மாணவனின் தந்தையான வைத்தியர் மனோகரனும் அவரது மனைவியும் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், இதற்கு இதுவரை காலமும் நீதி வழங்கப்படாத நிலையில் ரஜித்தரின் தாயார் காலமாகியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறித்த தாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பதின்நான்கு வருடங்களிற்கு முன் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித்தர் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச் செய்தி குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.
தம் சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்ட கால போராட்டங்களின் பின்னும் நீதியை காணாமல் இயற்கை எய்திய எம்மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனையை தருகின்றது.
தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை கண்டுகொள்ளாமல் திருமதி மனோகரன் அவர்கள் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இழப்பினால் துயருற்றுள்ள வைத்தியர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.