தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவ் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் எதிர்ப்பலையை தோற்றுவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சுமந்திரனின் கருத்துக்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் தமது விசனங்களை கட்சித் தலமையிடம் தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கட்சித் தலைமையிடம் தமது எதிர்ப்பை தெரிவித்துவருவதுடன் இதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு கட்சி உள்ளாகியுள்ளதாகவும் தற்போது சுமந்திரன் இவ்வாறு கருத்துக்களை கூறுவது கட்சியை மேலும் அதளபாதாளத்திற்கு தள்ளும் என்றும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இதேவேளை சுமந்திரனுக்கு சார்பாக செயற்படும் சில முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சில பிரதேச சபை உறுப்பினர்கள் தற்போதும் சுமந்திரனை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை இட்டு, கட்சிக்குள் இரு தலை நிலையை உருவாக்கியுள்ளனர்.
பார்த்து செய்வோம் என்றும், பாப்பம் தம்பி என்றும் இனியும் மௌனமாக இருப்பது கட்சியை பெரும் பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்றும் உடனடியாக சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தேவை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாவையிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தமது எதிர்ப்பை கட்சி தலைவர் மாவையிடம் தெரிவித்துள்ளது. அத்துடன் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் சுமந்திரனின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக சுமந்திரனுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தாம் இன்னமும் அந்த சிங்களத் தொலைக்காட்சி நேர்காணலை பார்க்கவில்லை என்றும் அதனை பார்த்தபிறகே ஏதேனும் செய்யலாம் என்றும் ஆதரவாளர்களே முறைப்பாடுகளை செய்திருப்பதாகவும் சுமந்திரன் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்.
தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், தமது இருப்பை பாதிக்கும் என்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.