1948 முதலே தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளனர் 2009 இல் இனப்படுகொலை உச்சம் பெற்றுவிட்டது – சட்டத்தரணி வேய்னி ஜோர்டாஸ் பகீர் பேட்டி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உரோம் சட்டத்தின் மூன்று சரத்துக்களின் கீழ் கோட்டா குழுவினருக்கு எதிராக வழக்கு மனந்திறக்கிறார் சட்டத்தரணி வேய்னி ஜோர்டாஸ்
சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட பல சிரேஷட இராணுவ அதிகாரிகள் மனிதகுல விரோத செயலுக்கு பொறுப்பானவர்கள். இவர்களை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை முக்கிய சட்ட சமர்ப்பணம் செய்யப்பட்டது.
சிறிலங்கா அரசின் இன அழிப்புப் போரால் பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் 200 தமிழர்கள் சார்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்ற குளோபல் றைற்ஸ் கொம்ப்ளைன்ஸ் எல்.எல்.பி அமைப்பால் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் இந்த சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறுவனமே மியான்மார் இன அழிப்பிற்கு எதிரான வழக்கினையும் முன்னகர்த்தி வெற்றிகண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பணத்தை கடந்த 28.10.2021 புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மேற்கொண்ட குளோபல் றைற்ஸ் கொம்ப்ளைன்ஸ் எல்.எல்.பி (Global Rights Compliance LLP (GRC) ) சட்டவல்லுனர் அமைப்பின் நிருவாக இயக்குனரும், மகாராணி சட்டத்தரணியுமாகிய வேய்னி ஜோர்டாஸ் (WAYNE JORDASH QC) அவர்கள் அங்கிருந்தவாறே இணைய வழியினூடாக உரிமை மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
கேள்வி: 15ஆவது சரத்து முறைப்பாடு (Article 15 Communication)என்பது எதுபற்றியது?
பதில்: இந்த முறைப்பாடானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவர் (Prosecutor of the Internatinal Criminal Court (ICC) ஏன் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த (சேர்ந்திருந்த) பின்வரும் நபர்களை புலனாய்வு செய்து, உரிய நேரத்தில் கைதுசெய்து, குற்றவிசாரணை செய்யவேண்டும் என்பதற்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது.
- கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலரும்.
- கமால் குணரட்ண, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவத் தளபதியும்.
- ஜகத் ஜெயசூரியா, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியும்.
- 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா பொலிஸின் (SLA)பொலிஸ்மாஅதிபர்களாகப் பதவி வகித்து வந்தவர்கள்.
- சிசிர மென்டிஸ், சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்காரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மாஅதிபா.;
- 2002ம் ஆண்டு முதல் சிறிலங்கா பொலிஸின் விசேட அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளாக செயற்பட்டவர்கள்.
சிறிலங்காவிலும், பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட (ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக) வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு(The crimes against humanity of deportation (through underlying acts of abductions, unlawful detentionThe and torture), deprivation of the right to return and persecution) மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான நியாயமான அடிப்படையைக் காட்டிலும் மேலதிகமான ஆதாரங்களை இந்த முறைப்பாட்டில் உள்ள விபரங்கள் வழங்குகின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான, மிகமோசமான ‘வெள்ளை வான் கடத்தல்கள் உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் நேரடியாக ஈடுபட்ட (குற்ற விசாரணைப்பிரிவு, பயங்கரவாக விசாரணைப் பிரிவு, விசேட அதிரடிப்படை உட்பட்ட) சிறிலங்கா பொலிஸ் மற்றும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் மீது மேற்குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அதிகாரத்தினைச் செலுத்தும் பதவிகளை வகித்திருந்தார்கள் என்பதனை இந்த ஆதாரங்கள் காட்டுகின்றன.
அவர்களது செயற்பாடுகள் மற்றும் செயற்பாடு தவிர்ப்புக்கள் மூலமாக இந்த மாபெரும் கொடூரங்கள் நடைபெறுவதற்கு இச்சந்தேகநபர்களே நேரடியாகப் பொறுப்பானவர்களாவர். இருந்தபோதிலும், இவர்களில் ஒருவர் கூட, இந்தக் குற்றங்களின் தீவிரத்தன்மை பாரதூரமானதாக இருந்தும், சிறிலங்காவில் குற்றவிசாரணைக்கோ அல்லது வழக்குவிசாரணைக்கோ உட்படுத்தப்படவில்லை.
சிறிலங்காவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தமிழர்கள் 200 பேர் இம் முறைப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். இவர்கள் யாரெனில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும் 2009 இல் அது முடிவுக்கு வந்தபின்னரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான உண்மையான தமிழ் ஆதரவாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் திட்டமிட்ட ரீதியில் கடத்தப்பட்டும் (உதாரணத்திற்கு வெள்ளைவான் கடத்தல்கள்), சட்டத்திற்குப் புறப்பாகத் தடுத்துவைக்கப்பட்டும் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்தவர்கள். தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களின் கொடூரத்தன்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேறி,பிரித்தானியாவில் புகலிடம் கோருவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்தத் தெரிவையும் விட்டுவைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, கோத்தபாய ராஜபக்சவாலும் கமால் குணரட்ணவாலும் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் திரும்பவும் தங்கள் சொந்த தாயகத்திற்கு திரும்பிச்செல்வதற்கான அவர்களது உரிமையினை அவர்களிடமிருந்து பறித்தொடுக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் மறுதலிக்கப்படுகின்றது. இந்த நபர்களும், ஒட்டுமொத்தமாக சிறிலங்கா அரசாங்கமும் ஆரம்பித்துள்ள கொள்கைகள் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த தாயகத்திற்கு செல்வதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ இல்லையே, அவர்கள் சிறிலங்காவுக்குத் திரும்பிச்சென்றால், அவர்கள் சித்திரவதை, காயங்கள் மற்றும் மரணத்தைச் சந்திக்கக்கூடிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளர்கள். சிறிலங்காவிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் தொல்லைப்படுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் மட்டுமன்றி, பிரித்தானியாவிலேயே அவர்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்புக்கள்,தொல்லைப்படுத்தல்கள், துன்புறுத்தல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்துக்கு ஆளாகிவருகின்றார்கள்.
கேள்வி: சிறிலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமச் சட்டடத்தில் (Rome Statute) அங்கத்துவம் வகிக்கவில்லை. இவ்வாறிருக்கையில்,பாதுகாப்புச் சபையின் பரிந்துரையில்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குநடத்துபவரால் பிரித்தானியாவில் வசிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சிறிலங்கா தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்கலாமா?
இந்த முறைப்பாட்டிலுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவர் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க முடியும். மியான்மார்ஃபங்களாதேஸ் நிலைமை தொடர்பில் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, அங்கத்துவ நாடென்றின் நிலப்பரப்பிற்குள் ‘பகுதியாக” இடம்பெற்ற குற்றச்செயல்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தன்னுடைய அதிகாரவரம்பினைப்; பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்னொரு வழியில் சொல்வதானால், குற்றச்செயலில் ஒரு சட்டப்பகுதியாவது அதன் அங்கத்துவ நாடொன்றில் நிலப்பரப்பில் நிகழுமேயானால், அக்குற்றச்செயலில் பெரும்பாலான பகுதி அங்கத்துவம் இல்லாத நாடொன்றில் நிலப்பரப்பில் நிகழ்ந்திருக்குமேயானால்கூட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தன்னுடைய அதிகாரவரம்பினை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
இம்முறைப்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் சிறிலங்காவிலேயே கடத்தப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இருந்தபோதில், அவர்கள் இறுதியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்துவ நாடாக இருக்கின்ற ஐக்கிய இராச்சியத்திற்கு நாடுகடத்தப்பட்டார்கள். நாடுகடத்தப்படுதல் ஒரு தொடர்ச்சியான குற்றச்செயலாகும், அதாவது குற்றம் இழைத்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படாதவரைக்கும் அக்குற்றம் தொடர்ந்து நடைபெறுகின்றது என்றே நாம் வாதிடுகின்றோம். இவ்விடயத்தில், நாடுகடத்தல் என்பது சிறைப்படுத்தல் என்ற மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயலை ஒத்ததே நாடுகடத்தலாகும். சிறைப்படுத்தல் குற்றமானது, பாதிக்கப்பட்ட ஒருவரை குற்றமிழைப்பவர் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கும் கணத்திலிருந்து ஆரம்பமாகி, பாதிக்கப்பட்டவர் விடுவிக்கப்படும் கணம் வரை தொடர்கின்றது. அதுபோலவே, பாதிக்கப்பட்டவர் அவருடைய தாயகப் பிரதேசத்திலிருந்து அகற்றப்படும் கணத்திலிருந்து நாடுகடத்தல் ஆரம்பமாகி, அவர் திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படும்வரை தொடர்கின்றது. எனவே,நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாதிக்கப்பட்ட இந்த 200 பேரதும் நாடுகடத்தல் குற்றமானது அவர்கள் சிறிலங்காவுக்கு பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படாமையினால், அவர்கள் அகதிகளாக வாழும் ஐக்கிய இராச்சியத்திலேயே தொடர்ந்தும் இடம்பெறுகின்றது என்றே நாம் வாதிடுகின்றோம்.
அதுமட்டுமன்றி, ஐக்கிய இராச்சிய நிலப்பரப்பிலேயே சிறிலங்கா அதிகாரிகளால் தொடர்ந்தும் துன்பப்படுத்தப்படுவதுடன்,திரும்பிச் செல்வதற்கான அவர்களது உரிமையையும் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கும் நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள் என்றே நாம் வாதிடுகின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஐக்கிய இராச்சிய நிலப்பரப்பிலும், அவர்களது குடும்பங்கள் சிறிலங்காவில் வைத்தும் சிறிலங்கா அதிகாரிகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கும் தொல்லைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவும், சிறிலங்காவுக்குத் திரும்பிச்செல்லும் பட்சத்தில் சித்திரவரைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதன் காரணமாகவும், ஐக்கிய இராச்சிய நிலப்பரப்பில் அகதிகளாக இருக்கையில் இப்பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் திரும்பிச் செல்வதற்கான உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் என்ற இன அடையாளத்தின் காரணமாக அல்லது அவர்களது அரசியல் நம்பிக்கைகள் காரணமாக (உதாரணத்திற்கு அவர்களது உண்மையான அல்லது சந்தேகிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடனான தொடர்பு அல்லது பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாடு),இவ்வுரிமைப்பறிப்பு நிகழ்வதானது இத்துன்புறுத்தல் தொடர்ந்து நடைபெறுகின்றது என்றே பொருள்படும். இதுவும்கூட அவர்கள் ஐக்கிய இராச்சிய நிலப்பரப்பில் இருக்கும் நேரத்தில் அவர்களது உரிமைப்பறிப்பினால் துன்பப்படுவதால ஐக்கிய இராச்சிய நிலப்பரப்பில் நிகழ்வதாகவே அர்த்தம் கொள்ளப்படும்.
மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில்,ஐ.நா பாதுகாப்புச் சபையின் பரிந்துரை இல்லாமலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவர் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க முடியும் என்றே நாம் வாதிடுகின்றோம். ஆயினும், அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன் அனுமதி வழங்கும் மன்றின் (Pre-Trial Chamber of the ICC) ஒப்புதல் தேவைப்படும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இம்முறைப்பாட்டில் உள்ள தகவல்கள் இவ் ஒப்புதலை அவர் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அடிப்படைகளைக் கொண்டுள்ளதென்று நாங்கள் நம்புகின்றோம்.
கேள்வி: பாதுகாப்புச் சபையின் பரிந்துரையில் நடைபெறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கும் 15ஆவது சரத்து முறைப்பாடுஃவழக்கு விசாரணை ஆரம்பிக்க முன் அனுமதி வழங்கும் மன்றின் ஒப்புதலுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரால் நடாத்தப்படும் விசாரணைக்கும் இடையிலுள்ள நடைமுறை வேறுபாடுகள் எவை?
நடைமுறை வேறுபாடு என்னவெனில், 15ஆவது சரத்து விசாரணைக்கு வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன் அனுமதி வழங்கும் மன்றின் ஒப்புதல் தேவை, மாறாக பாதுகாப்புச் சபையால் பரிந்துரைக்கப்படும்போது வழக்கு நடத்துபவர் விசாரணையை நேரடியாகவே ஆரம்பிக்கலாம். ஆனால் பல தொழிநுட்ப வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, பாதுகாப்புச் சபையானது தாம் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கும் நிலைமையின் பிராந்திய மற்றும் கால வரையறைகளை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, 2009ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளின் நிலைமைகளை நாங்கள் பார்க்கப்போகின்றோம் என்று அவர்கள் சொல்லாம். அவ்வாறாயின், இந்த வரையறைக்குள் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள்மீது மட்டுமே நீதிமன்றம் அதிகார வரம்பினைக் கொண்டிருக்கும் என்பதால், வழக்கு நடத்துபவர் தன்னுடைய விசாரணைகளில் இந்த அளவுகோல்களுக்கு அப்பால் செல்லமுடியாது. மறுவளத்தில், 15ஆவது சரத்தின் கீழ் நடைபெறும் விசாரணையில் தனக்கான விசாரணைக்கான பிராந்திய மற்றும் கால வரையறைகளை வழக்கு நடத்துபவரே தீர்மானித்துக் கொள்ளலாம். பின்னர் அவர் விசாரணை ஆரம்பிக்க முன் அனுமதி வழங்கும் மன்றின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம். கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்க முன் அனுமதி வழங்கும் மன்றமானது வழக்கு நடத்துபவரால் சொல்லப்பட்ட வரையறைகளை ஏற்க மறுக்க முடியும், அல்லது அவற்றை இன்னமும் சுருக்கிக்கொள்ளவோ அல்லது பெருப்பித்துக்கொள்வோகூட முடியும்.
கேள்வி: எந்தச் சர்வதேசக் குற்றங்களை உங்களது விண்ணப்பத்தில் நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள்?
எங்களது விண்ணப்பத்தில்; மனித குலத்திற்கு எதிரான மூன்று தனித்துவமான குற்றச்செயல்களை உள்ளடக்கியிருக்கின்றோம்: (i) உரோமச் சட்டத்தின் சரத்து7(1)(d) இன் கீழ் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுதல், (ii) சரத்து 7(1)(k) இன் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், (iii) சரத்து 7(1)(h) இன் கீழ் துன்புறுத்துதல். எங்களது சொந்த விசாரணைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவரப்பிற்குள் வரும் குற்றச்செயல்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களில் வெறும் உதாரணங்களே இவையாகும் என்பதும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். விசாரணை ஒன்று ஆரம்பித்ததும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் மேலும் பல குற்றச்செயல்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருப்பதை வழக்கு நடத்துபவர் கண்டுபிடிக்கலாம். எங்களது விண்ணப்பத்தில் மூன்று குற்றச்செயல்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கின்றோம் என்பதால், விசாரணையின் எல்லையினை விரிவுபடுத்திவிட முடியாது என்று அர்த்தமாகாது என்பதை சொல்லியாகவேண்டும்.
கேள்வி: விசாரணை ஒன்றைத் தொடங்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரை வற்புறுத்துவதில் இந்த பாதிக்கப்பட்ட 200 தமிழர்களுக்கும் உள்ள வாய்ப்புக்கள் என்ன?
இம்முறைப்பாட்டில் உள்ளடங்கியுள்ள தகவல்கள் ஏன் வழக்கு நடத்துபவர் விசாரணையைத் தொடங்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் போதுமாக தகவல்களைக் கொண்டுள்ளன என்று நாம் நம்புகின்றோம். சிறிலங்கா அதிகாரிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மனித குலத்;திற்கு எதிரான குற்றங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. சிறிலங்கா அரசாங்கத்தால் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்படும் பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தாக்குதல்களில் சூழ்நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன.
இக்குற்றச்செயல்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருகின்றனவா என்பதைத் தீர்மானிக்கவேண்டியதே தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். முன்னர் விளக்கியதுபோன்று,நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் அடிப்படையில், ஏன் விசாரிக்கப்பட வேண்டிய இம்மூன்று குற்றச்செயல்களும் பகுதியாகப் பிரித்தானியாவிலேயே இடம்பெறுகின்றன. அதனால் அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு வருகின்றன என்பதனை உறுதிப்படுத்துவதற்காக நம்பகரமான சில கருத்துக்களை முன்வைத்துள்ளோம். இப்போது பந்து வழக்கு நடத்துபவரின் கைகளிலேயே உள்ளது. அவரிடம் அதிகளவிலான முறைப்பாடுகள் உள்ளன என்பதையும், அவர் தன்னிடமுள்ள வழக்குகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்கின்றோம். எனினும், சிறிலங்காவிலுள்ள நிலைமையின் தீவிரத்தன்மையானது எங்களது முறைப்பாட்டைச் சிரத்தையுடன் பரிசீலித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் முன்வருவதற்குப் போதுமானதாக இருக்கும்.
கேள்வி: பிரித்தானியாவிலுள்ள பாதிக்கப்பட்ட 200 தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முறைப்பாடு விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை ஆரம்பிக்க முன்அனுமதி வழங்கும் மன்றமானது ஒப்புதல் வழங்குவதற்கான சாத்தியம் இருக்கின்றதா?
நீதிபதிகள் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பதைச் சரியாக எதிர்வுகூறுவது எப்போதுமே கடினம். ஆனால், நாங்கள் எங்களது முறைப்பாட்டில் கொடுத்துள்ள அதிகார வரம்புதொடர்பாக வாதங்கள் விசாரணை ஆரம்பிக்க முன்அனுமதி வழங்கும் மன்றத்தின் முன்னைய தீர்ப்பினை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. எனவே விசாரணையை ஆரம்பிப்பதற்கு ஒப்புதல் கேட்டு வழக்கு நடத்துபவர் மேற்கொள்ளும் விசாரணயை நீதிபதிகள் நிராகரித்தால் அது அவர்களது சொந்த முன்னைய தீர்ப்பையே மாற்றி எழுதவேண்டிய நிலைமையை ஏற்படுத்தும். இப்போது எமக்குள்ள பிரதான சவால் வழக்கு நடத்துபவரை நம்பவைப்பதுதான். அது நடந்ததும், விசாரணை ஆரம்பிக்க முன்அனுமதி வழங்கும் மன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை இலகுபடுத்துவதற்கு வழக்கு நடத்துபவருக்கு மேலதிகமாக ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கமுடியும்.
கேள்வி: சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்கள் இனப்படுகொலைதான் என்று வாதிடமுடியுமா?
1948ஆம் ஆண்டு முதலே தமிழர்களுக்கு எதிராக மெதுவான இனப்படுகொலையொன்று தொடர்ந்து நடந்துவருவதற்கான அறிகுறிகள் உள்ளன. இது உள்நாட்டுப் போரின் இறுதியில் 2009 இல் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட படுகொலைகளுடன் அதன் உச்சநிலையை எட்டியது. இருப்பினும், 2009 இறுதிப்போரின்போதும், அதனைத் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு மேலும் ஆதாரங்கள் தேவை. முழுமையானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான இராணுவ வெற்றி ஒன்றை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்பட்டால் தமிழர்களை அழிப்பதற்கு அரசாங்கம் விரும்பியது என்பதையே கிடைக்கின்ற ஆதாரங்கள் காட்டுகின்றன. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்று உறுதியாக நிறுவுவதற்கு இது மேலும் ஆராயப்பட்டு, விசாரிக்கப்படல் வேண்டும்.
நன்றி – உரிமை மின்னிதழ்