செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் பெண்ணின் திருமண வயதை உயர்த்தினால் நாடகக் காதல் தடுக்கப்படும் என நினைப்பது அறியாமை | திலகவதி IPS பேட்டி

பெண்ணின் திருமண வயதை உயர்த்தினால் நாடகக் காதல் தடுக்கப்படும் என நினைப்பது அறியாமை | திலகவதி IPS பேட்டி

5 minutes read
Thilagavathi-IPS-interview-about-raising-legal-marriage-age-for-Women

“பாஜக எது செய்தாலும் சந்தேகத்தோடுதான் பார்ப்பேன். ஆனால், பெண்களின் திருமண வயதை உயர்த்துவதில் சந்தேகமே ஏற்படவில்லை. ஆணின் திருமண வயதிற்கு சமமாக பெண்ணிற்கும் 21 வயது என்று உயர்த்தும்போது யாரும் யாருக்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் அல்லர் என்ற சமநிலை வருவதால் மத்திய அரசின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன்” என்று அழுத்தமுடன் பேசுகிறார், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி. சமீபத்தில், மத்திய அரசு பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து அவரிடம் பேசினோம்…

பெண்ணின் திருமண வயது உயர்த்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

”அடிப்படையில், நம் சமூகத்தில் திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது ஆண்களைவிட ஐந்திலிருந்து 15 வயதுவரை பெண் இளையவளாக இருக்கும்படி பார்க்கிறார்கள். இப்படி ஏன் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றால், பெண்ணடிமைத்தனத்தின் வேர்களைத் தொடரத்தான். ஓடியாடி ஆணுக்கு சேவை செய்பவளாக… ஆணின் கண்ணுக்கு இளமையானவளாகவும் அழகானவளாகவும் தோற்றமளிப்பவளாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பெண்ணின் திருமண வயதை குறைத்து வைத்துள்ளார்கள். புரோக்கர்களிடம் சொல்லியனுப்பும்போதே வயது குறைவாக இருக்கவேண்டும் என்றுதானே சொல்லி அனுப்புகிறார்கள்? பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே வயதாக இருந்தால்கூட திருமணம் செய்து வைப்பதில்லை. வயதில் கொஞ்சம் சின்னவளாக இருக்க நினைக்கிறார்கள். அதற்குக் காரணம், ’ஆண் வயதில் பெரியவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அவன் சொல்வது சரியாகத்தான் இருக்கும்’ என்று பெண் கேட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். இல்லையேல் ஆணுக்கு திருமண வயது 21 என வைத்துவிட்டு பெண்ணுக்கு மட்டும் 18 வயதை ஏன் நிர்ணயிக்கவேண்டும்? உயரம், படிப்பு, அந்தஸ்த்து என அனைத்திலும் நாம் குறைந்தவள் என்ற எண்ணத்தை பெண்ணுக்கு உண்டாக்குவதே இவர்களின் நோக்கம்.

திருமண வயதை 18 லிருந்து 21 வயதாக உயர்த்தும்போது யார்? எப்படி? எந்தமாதிரியான மாப்பிள்ளை என்று முடிவு செய்வதற்கான தெளிவான மனநிலையில் பெண் இருப்பாள். பட்டப்படிப்பு முடித்துவிட்டு, பட்டமேற்படிப்பு படித்து பொருளாதார ரீதியாகவும் தன்காலில் நிற்பதற்குரியவளாக ஆகியிருப்பாள். கடந்த 3 ஆண்டுகளில் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களில்தான் அதிகம் விரும்பி திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்த மாதிரி திருமணம் செய்யும் இணையர்களுக்குள், அடுப்படி வேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற சமத்துவம் வந்துவிடுகிறது. அப்படி அமையும்போது, பெண்களுக்கு தன்னுடைய குழந்தையை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும், ‘தன் உடல் தன் உரிமை’ குறித்த புரிதலும் சிந்தனையும் வந்துவிடும்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஆரோக்கியமான குழந்தைகள் முக்கியம். அதற்கு, தாய் முதிர்ச்சியடைந்தவளாகவும் தன்னம்பிக்கையாகவும் இருந்தால் மட்டுமே முடியும். ’ஒரு அடிமையை வளர்த்தால், அந்த அடிமையின் வயிற்றில் பிறக்கும் குழந்தை மட்டும் எப்படி சுந்ததிர புருஷனாக மாறிவிடும்’ என்பதுபோல்தான், ஒரு அடிமை வயிற்றில் அடிமைதான் பிறக்கும். அதனால், நன்கு படித்த, உலக விஷயம் அறிந்த ஆரோக்கியமான ஒரு பெண் பெற்றுத்தருகின்ற குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியும் உருவாகும். எங்களது காலத்தில், வகுப்பில் குள்ளமாக இருப்பவர்களுக்கு ’ஜப்பான்’ என்று பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால், இன்று ஜப்பானியர்கள் குள்ளமாகவா இருக்கிறார்கள்? எவ்வளவு உயரமாக வளர்கிறார்கள். இயற்கைக்கு மாறாக எடுத்த முடிவால் இன்று உயர்ந்த உருவத்தை பெற்றுள்ளார்கள். அந்தமாதிரியாக நாமும் ஒரு தலைமுறையை நன்கு உருவாக்கிட முடியும். அதேபோல், பிரசவத்தில் பெண்கள் மரணமடையாமல் இருப்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானப் புள்ளி. பெண்களின் திருமண வயதை உயர்த்தும்போது இந்தப் பிரச்னைகள் சரியாகிவிடும். இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசின் இந்த முடிவை பாராட்டி வரவேற்கிறேன்”.

image

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை சாதியவாதிகள் ஆதரிக்கிறார்களே?

”’பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் காதல் திருமணங்களை நிறுத்திவிடமுடியும்… பெண் நாடகக் காதலுக்கு ஒத்துக்கொள்ளமாட்டாள்’ என்று சாதியவாதிகள் நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் எதுவுமில்லை. அது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. ஏனென்றால், 21 வயது வயதில் பெண் முதிர்ச்சிப் பெற்றவளாக, தன்காலில் தானே நிற்பவளாக, பொருளாதார சுதந்திரத்தை அடைந்தவளாக கையில் இரண்டு பட்டப்படிப்பை வைத்துக்கொள்ளும் ஒரு சூழலில், யாரையாவது அவள் விரும்பினால் பழைய காலம்போல் பயந்து ஒடுங்கி நடுங்கி வேறொரு ஊரில் திருமணம் செய்துகொண்டு வளைந்து குனிந்து இருக்கமாட்டாள். அவள் காதலிக்கும் நபரை அனைவரும் அறிய தெளிவாக… இன்னும் துணிச்சலோடு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து குடித்தனம் செய்வாள். காதல் திருமணங்களை சாதியவாதிகள் ஆதரிக்கவேண்டும். அதைவிடுத்து, பெண்ணின் அறியாமையை, முதிர்ச்சியின்மையை பயன்படுத்தி தங்களுடைய எண்ணத்தை அவள்மீது திணிக்கலாம் என்று நினைப்பது சரியானது அல்ல. பெண்ணை சிந்திக்க விடவேண்டும். அவளின் வாழ்க்கையில் அவள்தான் முடிவெடுக்க வேண்டும்.

19 வயதில் டிகிரி முடிக்கும் பெண்களுக்கு ஒரு துணிச்சல், தைரியம் வரும். அது பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் என்று எழுத்துகள் கொடுக்கும் துணிச்சல் அல்ல. படிப்பதற்காக கல்லூரிக்குச் செல்கிறாள். வகுப்பில் 60 பேர்வரை படிப்பார்கள். அந்த 3 வருடத்தில் 100 அல்லது 200 பேருடன் பழக வாய்ப்புள்ளது. அதனால், ஏற்படக்கூடிய நட்புகளால் அவளின் மன உலகம் விரிவடைகிறது. அங்கு பணக்காரர், ஏழை பிள்ளைகள், வெளிமாநில பிள்ளைகள் என அனைவருடனும் கலந்து பழக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதுதான் கல்வியின் அழகு. கூட்டான நட்பு கிடைக்கும்போது துணிச்சல் பெரிய துணையாக இருக்கும். மனப்பக்குவம் வந்துவிடும். காதலில் மனப்பூர்வமாக விரும்ப ஆரம்பித்துவிட்டால் சாதி, மதம், மொழி, ஊர் எதையும் பார்க்கமாட்டார்கள். நான் விரும்புறேன். திருமணம் செய்துகொள்கிறேன் என்ற துணிச்சல் வந்துவிடும்”.

ஓட்டு மட்டும் 18 வயது இருக்கும்போது திருமண வயது 21 ஆக உயர்த்துவது சிக்கலை ஏற்படுத்தாதா?

“எந்த சிக்கலும் வராது. 18 வயதில் ஓட்டுப்போடுவது புற உலகம். தமிழன் ஆதிகாலத்திலிருந்தே அகம், புறம் என்றுதானே பிரித்து வைத்துள்ளான். அதனால், ஓட்டுப்போடுவது புற உலகைச் சார்ந்த முடிவு. அந்த முதிர்ச்சி அதற்குப்போதும். ஆனால், திருமணம் அப்படியல்ல. அகம் சார்ந்தது. இதற்கு கூடுதல் முதிர்ச்சி தேவை”.

image

இது குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்களே?

“3 வருடம்தானே? அதற்குள் பெரிய மாற்றமெல்லாம் வந்துவிடாது. நமது கலாசாரம், சமூகம் அப்படி. பெண்கள் விஷயத்தில் எல்லை மீறுவது நடக்காது. ஆண்களுக்கு ரொம்ப நாளாகவே பாலியல் ரீதியாக தேவையை நிறைவேற்றிக்கொள்ள எல்லா வழிமுறைகளும் இருக்கிறது. பெண்களும் அப்படி மாறிவிடுவார்கள் என்று நினைத்து அச்சப்படவேண்டாம். இப்போதெல்லாம் 11 வயதிலேயே குழந்தைகள் மாதவிடாய் அடைந்துவிடுகிறார்கள். இயல்பிலேயே ஹார்மோன்கள் மாற்றமடைந்து துணை தேடும் ஆர்வம் வந்துவிடும். பெற்றோர்கள்தான் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கவேண்டும். ‘உனக்கு 21 வயது ஆகும்போது முறைப்படி மாப்பிள்ளை வருவார்’ என்று சொல்லி வைக்கவேண்டும்”.

இப்படி உயர்த்துவது பெண்கள் மீதான ஒரு அடக்குமுறைபோல் இல்லையா?

“ஒரு நிபந்தனை அவ்வளவுதான். ஆனால், 12 வயதிலேயே காதல் செய்கிறார்களே? அதற்கு, ஒன்றும் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லையே? 1 வயதிற்கு கீழுள்ள விதவைகள் பாரதியார் காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்துள்ளார்கள். அப்படியென்றால் 6 மாதக் குழந்தையிலேயே திருமணம் ஆகியிருக்கும். பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ‘சாரதா சட்டம்’ மூலம் திருமண வயதை 8 ஆக மாற்றினார்கள். அதன்பிறகுதான், 16 … தற்போது 18 என்று மாற்றியுள்ளார்கள். சராசரி இந்தியர்களின் ஆயுள் 72 ஆக மாறியுள்ளது. எந்தவொரு சமூகம் கலாசார ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்திருக்கிறதோ, அந்த சமூகத்தில் குழந்தைப் பருவம் நீண்டதாக இருக்கும். விலங்குகளில்கூட எந்த விலங்கு நீண்டகாலம் உயிர் வாழ்கிறதோ, அதன் குழந்தைப்பருவம் நீட்டிக்கப்பட்டதாக இருக்கும். அதுவரை அது பெற்றோரை சார்ந்திருப்பதாக இருக்கும். யானைகள்கூட அப்படித்தான். அதற்கு 100 வயது ஆயுள். மொத்தமாகவே நமது ஆயுள் 45 என்றால் குறைவான வயதில் திருமணம் செய்யலாம். பாலியல் அனுபவம் மனிதனுக்கு வேண்டும். மானுட சங்கிலி அறுபடாமல் இருக்க குழந்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இப்போதுள்ள சமூக மாற்றத்தில் மருத்துவத்தினால் ஆயூள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வயதை உயர்த்துவதில் நன்மைகள்தான் அதிகம்”.

நேர்காணல்: வினி சர்பனா | நன்றி: புதியதலைமுறை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More