இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வை எட்ட முடியும் என்று இந்தியா ஏதிர்பார்த்தது. ஆனால், அப்படியான ஒரு தீர்வு சாத்தியம் என்று கருதியது தவறு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அப்போது இலங்கைக்கு தூதராக இருந்த ஜே.என். தீட்சித் தனது 'அசைன்மெண்ட் கொழும்பு' என்ற நூலில் தெளிவாக குறி உள்ளார். சீனத்தூதுவர் தன் கையை நீட்டி இங்கிருந்து இந்தியா எவ்வளவுதூரம் என்று கேட்டது இதோ நாங்கள் தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கிவிட்டோம் என்ற அறிவிப்பே.
சிங்கள படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்க அரசு பயணத் தடை விதித்திருப்பது தொடர்பாக?
சிறிலங்காவின் அரசியல் முழுக்க முழுக்க இராணுவமயமாகி வருகிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை உயர்பதவிகளில் அமர்த்தி அவர்களைப் பாதுகாப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வரிசையில்தான், கடந்த திசம்பர் 9 அன்று பதினொரு தமிழர்கள் கடத்தி காணாமலாக்கபப்ட்ட வழக்கில் தொடர்புடைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வடமேல் மாகாண ஆளுநராக அமர்த்தினார் அதிபர் கோத்தபய. இப்படியான சூழலில், அமெரிக்க அரசு பன்னாட்டு மனித உரிமை மீறல் செய்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னிருவர் தமது நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. அதில் இருவர் சிறிலங்கா படைத் தளபதிகளாவர். மேலே சொன்ன 11 பேர் காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 2000 ஆம் ஆண்டில் 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் மரணத் தண்டனைப் பெற்றுப் பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் மிசேல் பசலே, சிறிலங்காவில் பன்னாட்டுச் சட்டமீறல்களோடு தொடர்புடையவர்கள் மீது பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை அமைத்துலக மேலுரிமை (universal jurisdiction) அடிப்படையில் மேற்கொள்ளுங்கள் என்று ஐ.நா. உறுப்பரசுகளுக்கு வலியுறுத்தியிருந்தார். கூடவே, சிறிலங்கா மீதான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகுக்குமாறும் பரிந்துரைந்தார். இந்நிலையில் அமெரிக்க அரசு இனவழிப்புக் குற்றவாளிகள் மீது பயணத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இவர்களுக்கு தலைமை கொடுத்தவர்கள் மீதும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ’கோத்தபய இராசபக்சேவைக் கைது செய்’ என்ற முழக்கம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டு இந்திய அரசும் இன வழிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக செயல்பட முன்வரவேண்டும். அமெரிக்காவைவிடவும் தமிழர்களின் நீதிக்காக செயல்பட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.
சிறிலங்காவுக்கான சீன தூதர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன? அவருக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான பாதுகாப்பை சிறிலங்கா அரசு வழங்கியது?
தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு துணை நின்றதோடு அந்தக் குற்றத்திலிருந்து சிறிலங்காவை உலக அரங்கில் பாதுகாத்து வரும் தன் நீண்ட கால மற்றும் நிரந்தர நண்பனான சீனாவின் தூதருக்கு பிரம்மாண்டமான பாதுகாப்பை வழங்கியதில் வியப்பென்ன இருக்கிறது?
சீனத் தூதர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்கு சென்றுள்ளார். நல்லூர் கந்தசாமிக் கோயிலில் மேலாடை இல்லாமல் நிற்கிறார்; யாழ் நூலகத்தைப் பார்வையிட்டு லேப் டாப் தருகிறார். தமிழ் மீனவர்களுக்கு வலை கொடுக்கிறார். தென்னிலங்கையில் அம்பந்தோட்டா துறைமுகமும், கொழும்பு துறைமுகப்பட்டினமும் சீனாவிடம் உள்ளது. துறைமுகங்களில் கால் பதித்த சீனா, நல்லூர் கோயிலில் அடியெடுத்து வைத்திருப்பது வெறும் பச்சைக் கண்களில் பார்த்தால் சாதாரண நிகழ்வாகத் தெரியலாம். ஆனால், புவிசார் அரசியல் இராஜதந்திரக் கண்களில் பார்த்தால், ”இலங்கையில் தனது வெற்றிக் கொடியை நாட்டிவிட்டேன்” என்று சீனா முருகப் பெருமானுக்கும் அவரது நாடான இந்தியாவுக்கும் சொல்லும் அறிவிப்பாகும். அவர் தன் கையை நீட்டி இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது ’இதோ நாங்கள் தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கிவிட்டோம்’ என்று சொல்வதன்றி வேறென்ன? இந்தியாவின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாற்றில் அதன் தென் முனையில் இருந்தொரு படையெடுப்பு நடந்ததே கிடையாது. ஆனால், வரலாற்றின் முதல்முறையாக இதுவரை எந்த வல்லரசாலும் சாதிக்க முடியாததை சீனா சாதித்துவிட்டது.
தமிழர்களை அழித்தொழிப்பதன் மூலமும் அவர்கள் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் இதை சாதித்துவிட்டது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழர்கள் அரசியல் வலிமையை இழந்ததால் ஏற்பட்ட விளைவு இது. தமிழர்களின் அழிவை இந்தியா வேடிக்கைப் பார்ப்பது தன் கையால் தன் கண்களைக் குத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என்பது இப்போது புரிந்திருக்கக் கூடும். இந்தியா தமிழர்களைக் கைவிட்டது, சீனா தமிழ்க் கடவுளைக்கூட கைப்பற்றிவிட்டது. வென்றது சிங்களர் அல்ல, சீனா, தோற்றது தமிழர்கள் அல்ல, இந்தியா என்பதற்கு இதுவே சாட்சி. நல்லூர் முருகன் கோயில் சீனத் தூதர் கீ ஜென்ஹாங்.
தமிழ்க் கட்சிகள் சேர்ந்து 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்திய அரசிடம் வைப்பதற்கான நகர்வுகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறதே?
இலங்கை அரசியல் சட்டத்தில் 1987 இல் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தம் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் வழி ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்று இந்தியா ஏதிர்பார்த்தது. ஆனால், அப்படியான ஒரு தீர்வு சாத்தியம் என்று கருதியது தவறு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அப்போது இலங்கைக்கு தூதராக இருந்த ஜே.என். தீட்சித் தனது ’அசைன்மெண்ட் கொழும்பு’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கை தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே அரசியல் பொருளாதார – சமூக காரணிகளையும் தாண்டி அவற்றிற்கும் அப்பால் ஆழமான உளவியல் ரீதியானதும் உணர்ச்சிவசம் கொண்டதுமான அதல பாதாள வேறுபாடு இருப்பதை புரிந்து கொள்ள தேவையான போதியளவு அறிவு அவரிடமும் (திரு.ராஜீவ் காந்தி) மற்றும் அவருக்கு ஆலோசனை கூறிய எங்கள் அனைவரிடமும் இருக்கவில்லை.
பகைமையின் அளவே தீர்வின் அளவை தீர்மானிக்கிறது. முன்னாள் சிங்களப் பிரதமர் பண்டாரநாயக்கா 1958 இல் தான் தமிழர்களுடன் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை சுமார் 300 பெளத்த துறவிகள் முன்பு கிழித்தெறிந்தார். முன்னாள் சிங்கள அதிபர் சந்திரிகா முன் வைத்து இனப் பிரச்சனைக்கான தீர்வு திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் முடிந்தவுடன் 13 வது திருத்ததைவிடவும் மேம்பட்ட அரசியல் தீர்வைக் கொடுப்போம் என்று ஐ.நா.வில் பேசினார் மகிந்த இராசபக்சே. ஆனால், கடந்த அதிபர் தேர்தலின்போது, ’மாகாணங்களைக் கலைப்போம்’ என்ற வாக்குறுதியை முன்வைத்து கோத்தபய வெற்றிப் பெற்றார். ஒற்றையாட்சியில் இருந்து ஓரங்குலம்கூட இறங்கிவர எந்த சிங்களத் தலைவரும் முன்வரவில்லை என்பதே வரலாற்று உண்மை. மேலும் 13 வது திருத்த சட்டம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் தடுத்து நிறுத்தவில்லை அதேநேரம் இலங்கையில் சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதிக்கத்தையும் தடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும்.
அதனால் தான், 35 ஆண்டுகளாகியும் 13 வது திருத்தத்தைக் கூட சிங்கள அரசு அமலாக்கவில்லை. ஆயினும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண முடியும் என்று நம்புவார்களாயின், அது பற்றிய பேச்சுவார்த்தை என்பது தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பது, வடக்குகிழக்கை தமிழர் தாயகமாக அங்கீகரித்து இணைப்பது, அந்த மாகாணங்களுக்கு காணி, காவல் அதிகாரத்தை உறுதிசெய்வது மற்றும் அப்பகுதியில் குவித்து வைக்கபட்டிருக்கும் சிங்களப் படையை வெளியேற்றுவது என்பதில் இருந்துதான் தொடங்க முடியும். இந்த குறைந்தபட்ச அடிப்படைகளின் பெயரால் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் தான் சிங்கள அரசை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் அம்பலப்படுத்த முடியும். அதன் மூலம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை, பொதுவாக்கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தை நிறுவ முடியும்.
தமிழரின் கண்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனரே?
அண்மையில் பாகிஸ்தானில் ஒரு சிங்கள இளைஞன் அங்குள்ள மதவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டார். அதற்கு அனுதாபம் தெரிவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவர் நியாஸ் புரோகி , ” இலங்கை நமக்கு 35,000 விழிகளைத் தானம் செய்திருக்கிறது, நாமோ பார்வை இழந்துவிட்டோம்” என்று கூறினார். இதை தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட 19000 த்திற்கும் மேற்பட்ட தம் உறவுகளை தேடியலைந்து வரும் தமிழர்கள் தமது உறவுகளை படுகொலை செய்து பெற்ற கண்களாக இருக்குமோ? என்ற மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அவர்களின் இந்த அச்சம் நியாயமானதே ஈழத்தமிழ்ப்பரப்பில் இடம்பெறும் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு மாத்திரம் சீனாவுக்கு 1000 கண்கள் இலங்கையிலிருந்து அனுப்பபப்பட்டுள்ளதாக தரவுகள் காணப்படுகிறது. அதேநேரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையில் இலங்கையில் காணமலாக்கப்பட்டோர் ஆயிரக்கணக்கானோர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவம் சித்திரவதை முகாமில் கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இவ்நிகழ்வுகளை தொடர்புபடுத்துகையில் இலங்கை பேரினவாத அரசாங்கமும் அதன் ஒடுக்குமுறை கருவிகளும் காணமலாக்கப்பட்ட எம் உறவுகளின் கண்களையே விலைபேசி விற்றிருப்பார்கள் என்ற சந்தேகங்கள் மெய்ப்பிக்கப்படுபவையாகவே உள்ளது.
வரலாற்றில் கண்சார்ந்து அரசியலை இலங்கையின் பேரினவாதிகள் ஏற்கனவே அரங்கேற்றியுள்ளார்கள். 1983 ஜூலை கவரத்தின் போது சிறையில் அடைக்கப்பட குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்ததுதான் சிங்கள இனவெறி. இன்று ஈழத்தமிழர்களின் கண்களை கறுப்பு சந்தைகளில் பரிமாறி பணம் சம்பாதிக்கவும் தயங்காது. சிங்கள பேரினவாதத்தின் கடந்தகால அராஜக வரலாறு இவற்றை செய்வார்கள் என்பதையே உறுதி செய்கிறது. பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் பாலச்சந்திரன்களைக் கொன்றது அது. இசைப்பிரியாக்களைச் சின்னாபின்னமாக்கிக் கொன்றது. தமிழ் போராளிகளின் கண்களைக் கட்டி பின் மண்டையால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சானல் 4 காணொளிகளில் வந்தது. ’தமிழர்கள் மனிதர்களே அல்ல, கொல்வதற்கு தயங்காதே’ என்பதே சிங்கள பேரினவாதத்தின் தாரக மந்திரம். அவர்கள் ஈழத்தமிழரை மானிடராகவே கருதியதில்லை. அவ்வாறு மானுடத்தின் பகுதியாக எம்மை அவர்கள் கருதியிருந்தால், கொத்து கொத்தாய் கொன்று இனவழிப்புச் செய்திருக்க மாட்டார்கள்.
நன்றி – நக்கீரன்