செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ராயன் | திரைவிமர்சனம்

ராயன் | திரைவிமர்சனம்

3 minutes read

ராயன்  – விமர்சனம்

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

நடிகர்கள் : தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், திலீபன் மற்றும் பலர்.

இயக்கம் :தனுஷ்

மதிப்பீடு : 3/5

சர்வதேச நட்சத்திர நடிகராக பிரபலமான தனுஷ், ‘ப பாண்டி’ எனும் படத்திற்குப் பிறகு அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராயன்’ திரைப்படம்- ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

காத்தவராயன் ( தனுஷ்) – முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) – மாணிக்கவேல் ராயன்( காளிதாஸ் ஜெயராம்)- ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் பாசத்திற்குரிய தங்கை துர்கா ( துஷாரா விஜயன்). இளம் வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட இவர்கள் சட்ட விரோத கும்பலின் கையில் சிக்குகிறார்கள். அவர்களிடமிருந்து காத்தவராயன் தன் சகோதரர்களையும், கைக் குழந்தையான சகோதரியையும் காப்பாற்றி வாழ்வதற்காக பிறந்த மண்ணிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்கிறார்கள். வந்த இடத்தில் வாகன ஓட்டுநரான சேகர் என்பவர் ராயனுக்கு வேலையும் கொடுத்து, அவர்கள் தங்குவதற்கு உதவியும் செய்கிறார். ராயன் தன் சகோதரர்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும் காய்கறி சந்தையில் கடுமையாக உழைக்கத் தொடங்குகிறார்.

அந்த சென்னையில் பிரபலமான நிழல் உலக தாதாக்கள் சேது ( எஸ் ஜே சூர்யா) –  துரை ( சரவணன்) இந்த இரண்டு கோஷ்டிகளுக்கும் எப்போதும் முட்டல் மோதல்.  இதில் துரை – தனது தந்தையை வெட்டி சாய்த்து விட்டார் என்பதற்காக அவரை பலி வாங்குவதற்காக சேது சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்.

சென்னையில் தாதாக்களின் அட்டூழியத்தை ஒழிப்பதற்காக காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் திட்டம் தீட்டுகிறார்.

காத்தவராயனின் இளைய சகோதரரான மாணிக்கவேல் ராயன் – கல்லூரியில் படிக்கும் போது, அங்கு நடைபெறும் மாணவ தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

காத்தவராயனின் மற்றொரு சகோதரரான முத்துவேல் ராயன் – மது அருந்துவதும், பெண்ணை காதலிப்பதும், மற்றவர்களை சீண்டுவதுமாக இருக்கிறார்.

காத்தவராயனின் தங்கை துர்கா – திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

துரித உணவகம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வரும் காத்தவராயன் – சகோதரர்கள் மீது பாசம் காட்டி, அவர்கள் எல்லை மீறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்.

இந்தத் தருணத்தில் காவல்துறை அதிகாரியான பிரகாஷ் ராஜின் சூழ்ச்சியால் ரவுடி சேதுவின் வாரிசு , ஒரு கும்பல் வன்முறையில் இறந்துவிட அந்த சிக்கலில் முத்துவேல் ராயன் சிக்கிக் கொள்கிறார். அவனை காப்பாற்றுவதற்காக காத்தவராயன் முயற்சிக்கும்போது.. எதிர்பாராத விதமாக  அவரது சகோதரர்கள் இருவரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். தன் தங்கையை காப்பாற்றவும்.. தனக்கு எதிராக திரும்பிய சகோதரர்களுக்காகவும் காத்தவராயன் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.

எக்சன் படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட இயக்குநர் தனுஷ் அதற்காக தெரிவு செய்த கதைக்களம் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான் என்றாலும்.. அதில் இயல்பான மற்றும் நம்பகத் தன்மை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார். இதற்காகவே தனுசை பாராட்டலாம்.

படத்தின் திரைக்கதை பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடியே பயணித்தாலும்.. வன்முறை அதிகமாக இருந்தாலும்… பார்வையாளர்களிடத்தில் உணர்வுபூர்வமான சகோதர பாசத்தை வலிமையாக கடத்தி இருக்கிறார். அதிலும் துர்கா கதாபாத்திரம் பிரமிப்பைத் தருகிறது. குறிப்பாக தனுஷ் உயிருக்கு போராடும் வேளையில் அவரை கொல்வதற்காக கும்பல் முயற்சிப்பதும் , அவர்களிடமிருந்து துர்கா – சேகர் ஆகிய கதாபாத்திரங்கள், ராயனை காப்பாற்ற போராடும் காட்சிகள் ரசிகர்களின் உணர்வை.. மனதை.. தொடுகிறது. அந்த சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதமும், அதனை காட்சியாக படமாக்கி இருக்கும் விதமும், அதற்கு ஏ ஆர் ரஹ்மானின் பின்னணியிசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

தனுஷ் வழக்கம்போல் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் ராயன் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

அவரது சகோதரராக வரும் சந்தீப் கிஷன் நடிப்பில் சில இடங்களில் டெம்ப்ளேட்தனம் தெரிந்தாலும்.. அவருக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலும், நடனமும் கவனிக்க வைக்கிறது.

இளைய சகோதரராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் பல படி முன்னேற வேண்டும் என்பதை இந்த படத்திலும் உணர்த்தி இருக்கிறார். இதனை அவரும் உணர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

துர்காவாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தி அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் இவரின் நடிப்பு மிரட்டல்.

காவல் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் பெரிதாக ஏதேனும் செய்வார் என எதிர்பார்த்து இருந்தால்… மிஸ்ஸிங். ஆனால் அவர் நடிப்பு எப்போதும் போல் கிஸ்ஸிங்.

சேதுவாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் காட்டு கத்தல் கத்தாமல்.. இயல்பாக நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.  சேகராக நடித்திருக்கும் செல்வராகவன் திரையில் புதிதாக தோற்றமளிக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கவர்கிறார்.

தனுஷின் இயக்கத்தை கடந்து… நட்சத்திர நடிகர்களின் நடிப்பை கடந்து… ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் -மற்றொருவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இந்த இருவரும் தனுசுக்கு பக்கபலமாக செயல்பட்டு படைப்பை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

படத்தில் எக்சன் காட்சிகள் தான் பலம் என்றால்… அதுவே பலவீனம் என்றும் குறிப்பிடலாம்.  நகைச்சுவை காட்சிகள் குறைவு. பாடல்கள் அதிலும் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் :அடங்காத அசுரன்…’ பாடல் ரசிகர்களை மெய் மறந்து கரவொலி எழுப்ப வைக்கிறது.

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சென்டிமென்ட்டான அண்ணன் -தங்கை உறவை, எக்சன் பின்னணியில் சொல்லி இருக்கும் ராயனை தாராளமாக பட மாளிகைக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

தனுஷின் இயக்கத்தை கடந்து… நட்சத்திர நடிகர்களின் நடிப்பை கடந்து… ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் -மற்றொருவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இந்த இருவரும் தனுசுக்கு பக்கபலமாக செயல்பட்டு படைப்பை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

படத்தில் எக்சன் காட்சிகள் தான் பலம் என்றால்… அதுவே பலவீனம் என்றும் குறிப்பிடலாம்.  நகைச்சுவை காட்சிகள் குறைவு. பாடல்கள் அதிலும் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் :அடங்காத அசுரன்…’ பாடல் ரசிகர்களை மெய் மறந்து கரவொலி எழுப்ப வைக்கிறது.

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சென்டிமென்ட்டான அண்ணன் -தங்கை உறவை, எக்சன் பின்னணியில் சொல்லி இருக்கும் ராயனை தாராளமாக பட மாளிகைக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

ராயன் – தனுஷின் மேஜிக்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More