செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இனப்படுகொலை நிகழ்த்தியவருக்கு சூழல் பற்றிப் பேச அருகதை இல்லை | பொ. ஐங்கரநேசன்

இனப்படுகொலை நிகழ்த்தியவருக்கு சூழல் பற்றிப் பேச அருகதை இல்லை | பொ. ஐங்கரநேசன்

6 minutes read

கோட்டாவின் சுற்றுச்சூழல் மாநாட்டு உரையை கடுமையாக சாடுகிறார் சூழலியலாளர் ஐங்கரநேசன்


“கார்த்திகை மாதம் இறந்த மறவர்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி நெக்குருகும் நாட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்து அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாக மாற்றிய மரபையும் கொண்டிருக்கின்றனர். ”சூழலியலாளரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலை நன்றியுடன் பிரசுரம் செய்கிறது வணக்கம் இலண்டன் இணையத்தளம்.

கேள்வி – ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி கோத்தாபய உரையாற்றி இருக்கிறார். ஒரு சூழலியலாளனாக அவரது உரை குறித்த தங்களுடைய விமர்சனப் பார்வை எவ்வாறு உள்ளது?

சக மனிதன் மீது நேசம் கொள்ளாத எவரும் சுற்றுச்சூழல் மீது நேசம் கொள்பவராக இருக்க முடியாது. சக மனிதன் மீதான வன்முறையே சுற்றுச்சூழல் மீதான வன்முறையாகப் பிரதிபலிக்கிறது. அந்த வகையில், தமிழினப் படுகொலையை நிகழ்த்தி முடித்த ஒரு ஜனாதிபதி சுற்றுச்சூழல் தொடர்புடைய ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எவ்வகையிலும் பொருத்தப்பாடானவர் அல்லர். ஆனால், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அவர் கலந்துகொண்டிருக்கிறார்.

அங்கு 100 சதவீதம் அளவில் பசுமை விவசாயத்துக்கு மாறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ள உலகின் முதல் நாடாக இலங்கை விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் சேதனப் பசளைக்குத் திரும்புவதற்கு நாட்டில் தனக்குப் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும் தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் விண்ணைத் தொடும் விலைவாசி ஏற்றம் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர் முன்னெடுத்துவரும் குடும்ப ஆட்சி, சீனச்சார்பு நிலைப்பாடு சிங்கள மக்களிடையே மாத்திரமல்லாமல் அவரது கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயேகூட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இவ்வெதிர்ப்புகளுக்கும் அப்பால் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு அவருக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இந்த எதிர்ப்புகளை எல்லாம் அவர் சேதனப் பசளைக்குத் திரும்புவதால் ஏற்படும் எதிர்ப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் காட்டுவதற்கு முயன்றிருக்கிறார்.

கேள்வி – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கார்த்திகை மாத மரநடுகையை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறது. இதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துங்கள்.?

வடக்கு மாகாண சபையில் நான் அமைச்சராக இருந்தபோது கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. மரநடுகையை மேற்கொள்வதற்குக் கார் என்ற மழையின் பெயரைத் தன் பெயராகக் கொண்ட கார்த்திகை மிகப் பொருத்தமான மாதம். அறிவியல் ரீதியான இந்தக் காரணத்துக்கும் அப்பால் ஈழத்தமிழர் வாழ்வியலில் கார்த்திகை பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற ஓர் மாதமும் ஆகும். வீடுகளில் விளக்கேற்றி வழிபடும் தீபத்திருநாளையும், இறந்த மறவர்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி நெக்குருகும் நாட்களையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்து அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாக மாற்றிய மரபையும் கொண்டிருக்கின்றனர். தேசியம் என்பது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியன பின்னிப்பினைந்த ஓர் வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், இழந்துவிட்ட பண்பாட்டு உறவை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடே கார்த்திகை மாத மரநடுகையாகும்.

கேள்வி – சூழலைப் பேணுவதில் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த ஈடுபாடு குறித்து அதன் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

அவர்கள் மக்களை நேசித்தார்கள். அதனால் மண்ணை நேசித்தார்கள். அதனால் சுற்றுச்சூழல் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருந்தார்கள். இதுபற்றிப் பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் என்னால் இப்போது எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரின் நினைவு தினமான ஜூன் 5ஆம் திகதியைத் தங்களது மாணவர் தினமாகச் சிறப்பாகக் கொண்டாடி வந்தது. பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதே ஜூன் 5ஆம் திகதியில் உலக சூழல் தினத்தை கொண்டாடி வந்தது. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக நடைபெற்று வந்ததால் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறைவாகவும் இதில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தது. இது தொடர்பாக நான் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். அதில் மாணவர் தினமும் சூழல் பாதுகாப்புத் தினமும் ஒரே நாளில் தனித்தனியாகக் கொண்டாடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த முடியாமல் உள்ளது. மாணவர்கள்தான் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாக மாற முடியும். அந்த வகையில் இரண்டு நிகழ்ச்சிகளையும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தேன். அவரிடம் இருந்து எனக்கு எவ்வித பதிலும் வரவில்லை. ஆனால், அடுத்த ஆண்டில் இருந்தே ஜூன் 5ஆம் திகதி அவர்கள் கொண்டாடி வந்த மாணவர் தினத்தை ஜூன் 6ஆம் திகதிக்கு மாற்றியமைத்தார்கள். ஜூன் 5ஆம் திகதி சூழல் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள்.சூழல் குறித்த விடுதலைப் புலிகளின் அக்கறைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
அக்காலப் பகுதியில் கிட்டு பப்பாசி என்ற பப்பாசி தமிழர் தாயகத்தில் பிரபலமாக இருந்தது. அது கிட்டு அவர்களினால் வெளிநாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட ஒரு கலப்பினப் பப்பாசி ஆகும். அவர் கொண்டு வந்த விதைகளில் இருந்து உருவாகிய இந்தப் பப்பாசிகளை அவர் பெயராலேயே கிட்டு பப்பாசி என்று அழைத்தார்கள். தேசியத் தலைவர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் விதைகளை எடுத்துவந்ததன் காரணமாக அவர் பெயரை சூட்டுவது ஏற்புடையது ஆகாதென்றும் இது ஒருவகையில் வேறு ஒருவருடைய அறிவுச் சொத்தை நாங்கள் திருடுவதற்கு ஒப்பானதாகும் என்றும் தெரியப்படுத்தியிருந்தேன். நான் கடிதம் அனுப்பி இரண்டொரு தினங்களில் அவர்களது பண்ணைகளில் மாட்டப்பட்டிருந்த கிட்டு பப்பாசி என்ற பெயர்த் தட்டிகள் யாவும் அகற்றப்பட்டன. இதனை இங்கு நினைவூட்ட வேண்டியதையும் எனது கடப்பாடாகக் கருதுகிறேன்.

கேள்வி – இரசாயன உரங்கள் மீதான இலங்கை அரசின் திடீர்த் தடையை நீங்கள் வரவேற்கிறீர்களா?

செயற்கை இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகள் காரணமாக நாம் உணவுடன் சேர்த்து இன்று பெருமளவுக்கு நஞ்சுகளையே உட்கொண்டு வருகிறோம் நிலத்தடி நீரும் விவசாய இரசாயனங்களால் நஞ்சேறி வருகின்றது. அந்த வகையில், விவசாயத்தில் செயற்கை இரசாயனங்களைத் தவிர்த்து சேதனப் பசளைகளுக்குத் திரும்புதல் என்பதை நான் 100 சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், ஜனாதிபதி தற்போது இரசாயன உரங்களுக்குத் தடைவிதித்து, இயற்கைப் பசளையை ஊக்குவிப்பது என்பது நஞ்சற்ற உணவு என்பதை நோக்கமாகக் கொண்டது அல்ல. கொரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதால், உரங்களின் இறக்குமதிக்குப் பெருமளவில் செலவிடப்படும் பணத்தை மீதப்படுத்தும் பொருட்டே இத்திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
எமது விவசாயிகள் நீண்ட காலமாக செயற்கைப் பசளைக்குப் பழக்கப்பட்டவர்கள். அவர்களால் ஒரே நாளில் இயற்கைப் பசளைக்குத் திரும்ப முடியாது. அரசு கட்டங்கட்டமாக இதனைச் செய்ய முற்பட்டிருக்க வேண்டும். முதல் வருடம் 10 வீதம், அடுத்த வருடம் 20 வீதம், அடுத்த வருடம் 30 வீதம் என்று படிப்படியாக இரசாயன உரங்களின் இறக்குமதிக்குத் தடைவிதித்து 100 வீதத் தடையை சில வருடங்களில் அமுல்படுத்தியிருக்க முடியும். அவற்றைப் படிப்படியாக இயற்கை உரங்களினால் ஈடுசெய்திருக்க முடியும். ஆனால், இதைவிடுத்து 100 வீத இறக்குமதிக்குத் தடை என்ற தவறான முடிவை இன்று அவர் எடுத்துள்ளார்.
இயற்கை உரங்களின் உற்பத்தியையும் உள்ரில் படிப்படியாக அதிகரிக்கச் செய்திருக்க முடியும். மாறாக, இவர் சீனாவில் இருந்து தருவிக்க முயன்றிருப்பதும் சுற்றுச்சூழலுக்குப் பொருத்தப்பாடானது அல்ல. வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் இயற்கை உரங்களுடன் சேர்ந்து எம் மண்ணுக்குப் பரிச்சயம் இல்லாத அந்நிய உயிரினங்களும் கிருமிகளும் எமது சூழலில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவை எமது சுற்றுச்சூழலை மிகமோசமாகச் சீரழிக்கும்.

கேள்வி – ஜனாதிபதியால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாத்திரமே கட்டமைத்து வரும் இலங்கை அரசாங்கம் அதனை மேலும் வலுப்படுத்துவற்காக முன்னெடுத்துள்ள ஒரு நிகழ்ச்சித்திட்டமே ஒரே நாடு ஒரே சட்டம் என்பதாகும். இதனை இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழர்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் தங்களுக்கென்று தனியான தேச வழமைச் சட்டத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் தங்களுக்கென்று கண்டி வழமைச்சட்டத்தைக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் மக்களும் அவர்களது மதம் சார்ந்த சில பாரம்பரியச் சட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் சிறுபான்மை இனங்களுக்கிடையே நிலவுகின்ற அவர்களுடைய சட்டங்களைக் கரைத்து அல்லது இல்லாமல் செய்து பொதுவானதொரு சட்டத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. அவ்வாறு நிறைவேறினால் இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்களினால் மதப் பள்ளிகளை நடாத்த முடியாது. அதேபோன்று தமிழ் மக்களும் தேச வழமைச் சட்டங்களின் கீழ் அவர்கள் கொண்டிருக்கின்ற காணிகளைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. இச்;செயலணியின் தலைவராகப் பௌத்த சிங்களப் பேரினவாதியான ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரே நாடு ஒரே சட்டத்தின் பின்னால் உள்ள அரசின் கபடநோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாத்திரமே கட்டமைத்து வரும் இலங்கை அரசாங்கம் அதனை மேலும் வலுப்படுத்துவற்காக முன்னெடுத்துள்ள ஒரு நிகழ்ச்சித்திட்டமே ஒரே நாடு ஒரே சட்டம் என்பதாகும். இதனை இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழர்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் தங்களுக்கென்று தனியான தேச வழமைச் சட்டத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் தங்களுக்கென்று கண்டி வழமைச்சட்டத்தைக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் மக்களும் அவர்களது மதம் சார்ந்த சில பாரம்பரியச் சட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் சிறுபான்மை இனங்களுக்கிடையே நிலவுகின்ற அவர்களுடைய சட்டங்களைக் கரைத்து அல்லது இல்லாமல் செய்து பொதுவானதொரு சட்டத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. அவ்வாறு நிறைவேறினால் இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்களினால் மதப் பள்ளிகளை நடாத்த முடியாது. அதேபோன்று தமிழ் மக்களும் தேச வழமைச் சட்டங்களின் கீழ் அவர்கள் கொண்டிருக்கின்ற காணிகளைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. இச்;செயலணியின் தலைவராகப் பௌத்த சிங்களப் பேரினவாதியான ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரே நாடு ஒரே சட்டத்தின் பின்னால் உள்ள அரசின் கபடநோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More