லேட்டஸ்டாக, திடீர் பெண் சாமியார் அவதார வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருப்பவர் அன்னபூரணி. ’அன்னபூரணி அரசு அம்மா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் கதறி பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதேநேரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்துகொண்டுள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோக்களும் ஒருபக்கம் வைரலாகி விமர்சனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திடீர் பெண் சாமியார் அன்னபூரணி குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். அமெரிக்காவிலிருந்தபடி நம்மிடம் பேசினார்.
என்ன திடீரென்று அமெரிக்கப் பயணம்?
”எனது பேரக்குழந்தைகளைப் பார்க்க வந்துள்ளேன். அவர்களுடன் இங்கு சந்தோஷமாக நாட்கள் போகின்றது. இதைவிட வேற பெரிய வேலை என்ன இருக்கு?”.
அடுத்தப்படம்?
”படத்திற்கான கதைப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டேன். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் கடவுள் அருளால் விரைவில் தொடங்கிவிடுவேன்”.
சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?
“‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அதில், வரும் முதல் கதை ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. சிறந்தப் படமாகக் கருதுகிறேன்”.
உங்கள் நிகழ்ச்சிக்கு வந்த அன்னபூரணி என்பவர் தன்னை கடவுளின் அவதாரமாக கூறிக்கொள்கிறாரே? அந்த வீடியோக்களைப் பார்த்தீர்களா?
”பார்த்தேன். எனக்கும் பலர் அனுப்பியிருந்தார்கள். இப்போதான், அந்தப் பெண்ணின் வீடியோக்கள் நிறைய வந்திருக்குன்னு நினைக்கிறேன். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். முட்டாள்தனமும்கூட. சாமி என்று சொல்வதை மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு நாட்கள் நாம் ஏமாற ரெடியாக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில், எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் வேண்டாம். எல்லாவற்றிலும் இருக்கிறார்கள். அதனால், ’நான் கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது”.
உங்கள் நிகழ்ச்சிக்கு அன்னபூரணி வந்த நினைவுகள் குறித்து?
”அன்னபூரணி என்னிடம் வந்தபோது ரொம்ப குழப்பாமாகவே இருந்தார். அந்த நபரின் மனைவி கதறியது இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. ’அப்பா… வீட்டுக்கு வாங்கப்பா’ என்று குழந்தைகள் அழுது கெஞ்சியதும் காதில் ஒலிக்கிறது. அப்போதே, அன்னபூரணிக்கு நான் எவ்வளவோ புத்திமதி சொன்னேன். ‘எனக்கு வேற வழி இல்லை. என்மேல பழி வந்துடுச்சி. அதனால, எங்களுக்குள்ள இப்படி ஆகிடுச்சி. நான் இப்படியே வாழ்ந்துக்கிறேன்’ன்னு சொன்னாங்க. அதுக்கு நான், “வேண்டாம்மா.. உனக்குன்னு சுயமரியாதை இருக்கு. தப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கக்கூடாது”ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், அன்னபூரணி எதையும் கேட்கலை. அந்த நபருடன்தான் வாழுவேன்ன்னு சொல்லிட்டுப் போனாங்க. அதன்பிறகு, அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. ’சொல்வதெல்லாம்’ உண்மை நிகழ்ச்சிக்கு அவர்களாகவேத்தான் தேடி வந்தார்கள். ’திருமணம் ஆனவருடன் விவாகரத்து செய்யாமல் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது’ என்று அன்றைக்கும் சொன்னேன். இன்றும் சொல்வேன். நாளைக்கும் சொல்வேன். அது சரியான விஷயம் கிடையாது. நான் கடவுள் என்று வருபவர்களை நிச்சயம் நம்பக்கூடாது. என்னைப் பொறுத்தவரை நம் பெற்றோர் காலைத்தவிர வேறு யாருடையக் காலிலும் விழக்கூடாது”.
உங்களுடன் அன்னபூரணி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதே?
”இதற்கெல்லாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தால் நம் வேலையை செய்ய முடியாது. அடுத்தவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள். அதையெல்லாம் பார்த்தால் நாம் வாழவே முடியாது. அந்த பெண்ணை குறை சொல்வதா? அவரின் காலில் விழுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. மக்கள் முட்டாள் ஆகக்கூடாது. சாமி என்று சொல்வதை மக்கள் நம்பி காலில் விழும் மக்கள்தான் முட்டாள். இன்று அன்னபூரணி சாமி என்கிறார். நாளை மற்றொருவர் சாமி என்று சொல்லும்போது எல்லோருடைய காலிலும் விழுவார்களா? நீங்கள்தான் சாமி. உங்கக்குள்ளேதான் சாமி இருக்கிறது. வெளியில் ஏன் போய் தேடுகிறீர்கள்? தினம் காலையில் எழுந்ததும் நான் தான் சாமி என்று சொல்லிக்கொள்ளுங்கள். அது போதும்”.
நேர்காணல்: வினி சர்பனா | நன்றி: புதியதலைமுறை