செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ”அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம்” | இயக்குநர் வினோத் சிறப்புப் பேட்டி

”அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம்” | இயக்குநர் வினோத் சிறப்புப் பேட்டி

8 minutes read
Actor-ajith-valimai-movie-director-h-vinoth-special-interview

”’வலிமை’ படத்தில் என் உழைப்பு குறைவானது. ஒரு இயக்குநருக்கு மன அளவில்தான் அழுத்தம் அதிகம். உடல் உழைப்பில் படக்குழுவினரே ரிஸ்க் எடுக்கிறார்கள். இந்தக் காட்சிகளுக்கு, இப்படி தயார் செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டால், உதவி இயக்குநர்கள் இரவு 12 மணிவரை செய்து முடித்துவிட்டுதான் தூங்கவே செல்வார்கள். மீண்டும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஷூட்டிங் வந்துவிடுவார்கள். இப்படி, 40 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் என்ன ஆவார்கள்? அதனால், படக்குழுவினர் ஒவ்வொருவரின் உழைப்பும் அபரிதமானது” என்று அக்கறையுடனும் தன்னடக்கத்துடனும் பேசுகிறார் இயக்குநர் ஹெச். வினோத். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் அஜித் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் ஹெச்.வினோத்தின் மூன்று படங்களுமே மெகா ஹிட் என்பதால் ’வலிமை’ மீதான ஏகோபித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கூடி ஆக்ரோஷமாகிக்கொண்டிருக்கிறது. வரும் பொங்கலையொட்டி ’வலிமை’ வெளியாவதால், இயக்குநர் ஹெச்.வினோத்திடம் பல்வேறு பல கேள்விகளை முன்வைத்தோம்,

’வலிமை’ மேக்கிங் வீடியோவில் அஜித் விபத்தில் சிக்கியிருந்தாரே? அதனை எப்படி வலிமையோடு எதிர்கொண்டு கடந்தார்?

”பொதுவாகவே, அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம். நமக்கெல்லாம் சுண்டு விரலில் அடிப்பட்டால்கூட பயங்கர வலியா இருக்கும். நாலு பேருக்கு காட்டுவோம். தாங்கித் தாங்கி நடப்போம். ஆனால், அஜித் சார் அப்படி கிடையாது. அவருக்கு வலியைத் தாங்கும் சக்தி பழகிவிட்டது என்று நினைக்கிறேன். குறிப்பாக, விபத்து ஏற்பட்ட அந்தப் பைக் காட்சிகளை நாங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்து படமாக்கினோம். அப்போது, தயாரிப்பாளரும் ஷூட்டிங்கில் இருந்தார். எதிர்பாராவிதமாக பைக்கிலிருந்து விழுந்து அஜித் சாருக்கு அடிப்பட்டதும் “நாளைக்கு ஷூட்டிங் வேண்டாம். ரெண்டு மூன்று நாள் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் தயாரிப்பாளர். ஆனால், ‘வேண்டாம்’ என்றுக்கூறிவிட்டு, அந்தக் காயத்துடனேயே மறுநாள் இரவு ஷூட்டிங்கில் வந்து நின்று விட்டார் அஜித் சார். பைக் சேஸிங் சீன் என்பதால் மூன்று லேயர் உடைகளை அணியவேண்டும். அடிப்பட்டு சதையெல்லாம் பிய்ந்துபோன புண்ணுக்கு நடுவில் அணிவது எவ்வளவு ரிஸ்க்? ஆனால், உடையைப் போட்டுக்கொண்டு வந்து நின்றார் அஜித் சார்”.

மேக்கிங் வீடியோவில் விபத்து ஏற்பட்டதை சேர்க்க அஜித் ஒப்புக்கொண்டாரா?

“நான் மேக்கிங் வீடியோவை முடித்து தயாரிப்பாளருக்கு அனுப்பினேன். அவர், ஓகே சொன்னார். ’சார்கிட்ட கேட்டுக்கோங்க’ என்று மட்டும் சொன்னேன். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியாது. ஆனால், பொதுவாகவே அஜித் சார் இதுபோன்ற விஷயங்களை வெளியிடவேண்டாம் என்றுதான் சொல்வார்”.

நீங்கள் இயக்குகின்ற படங்களில் ஒரு உண்மைத்தன்மை இருக்கிறதே… ’வலிமை’யில் என்ன உண்மைத்தன்மையைக் காட்டியுள்ளீர்கள்?

“நாம் தினமும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள்தான் உண்மைத்தன்மை. என்னை சுற்றியுள்ள செய்திகளின் அடிப்படையிலும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளின் அடிப்படையிலும் கதைகளை உருவாக்குகிறேன். அதனால், அது கற்பனையாக இல்லாமல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

’சதுரங்க வேட்டை’யில் ஒய்ட் கரன்சி க்ரைம் குறித்துக் காட்டினேன். காவல்துறையினர் மீது பொதுவாகவே மக்களுக்கு கோபம் இருக்கிறது. ஆனால், உண்மையில் காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்? காவல்துறை இல்லையென்றால் நமக்கு என்ன நடக்கும்? காவல்துறையில் இருக்கும் எல்லோருமே கெட்டவர்களா? என்பதைக் காட்ட முயற்சி செய்த படம் ’தீரன் அதிகாரம் ஒன்று’. ’வலிமை’யும் காவல்துறை படம்தான். இன்று குடும்பங்களும் இளம் சமூகத்தினரும் ஒரு அழுத்தத்திற்குள் இருக்கிறார்கள். அது ஏன் என்று ’வலிமை’ பேசுகிறது”.

வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் நாவலை படமாக்குகிறார்களே? உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?

”இதுவரைக்கும் எனக்கு அந்தமாதிரி ஐடியா வரவில்லை. முதலில் என்னிடம் இருக்கும் கதைகளையெல்லாம் பண்ணி முடிக்கிறேன். பிறகு அதுகுறித்து யோசிப்போம்”.

image

உங்கள் படங்களில் கொஞ்சம் காமெடியும் இருக்கும். ’நேர்கொண்ட பார்வை’ ரீமேக் என்பதால் இல்லை. ’வலிமை’யில் இருக்கிறதா?

“கண்டிப்பாக. கதையோடு ஒட்டி வரக்கூடிய சின்ன சின்ன காமெடியினை சேர்த்திருக்கிறேன்”.

யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றும் அனுபவம்?

”பயங்கர கம்ஃபர்டபிளானவர். ஈகோவே இல்லாத ஒரு மனிதர். ஜாலியாக பேசமுடியும். இந்தப் பாட்டு மாதிரி வேணும்னு ரெஃபரன்ஸ் வைத்துகூட சொல்லலாம். கோச்சிக்க மாட்டார். எல்லாத்துக்கும் ஒரேமாதிரிதான் ரியாக்ட் பண்ணுவார். பாராட்டினால்கூட லைட்டாதான் ரியாக்ட் வரும். யுவன் ஒரு ஜீனியஸ்”.

’அஜித் 61’ ல் யுவன் இசையை எதிர்பார்க்கலாமா?

”‘வலிமை’ வெளியானபிறகுதான் அடுத்தப்படத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்கள் குறித்து முடிவு செய்வோம்”.

’வலிமை’ படமாக்கப்பட்டபோது சவாலான விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

”கொரோனாவுக்குப் பிறகு எடுத்த ஒவ்வொரு ஷாட்டும் சவால்தான். ஒருமுறை ஸ்டார்ட் பண்ணா நடுவுல எங்க நின்னுடுமோன்னு நினைச்சி பயத்துலேயே ஷூட் செய்தோம். திடீர் திடீரென்று மருத்துவ பரிசோதனைகள் வரும். 100 பேருக்குமேல் இருக்கக்கூடாது என்பார்கள். அதற்குமேல், 10 பேர் இருந்தாலும் பிரச்னையாகிவிடும். குறிப்பாக, பைக் ஷூட்டிங்கின்போது யூனிட்டில் நிறையப் பேருக்கு அடிப்பட்டிருக்கு. ஒரு பைட்டருக்கு தொடை எலும்பு முறிந்துவிட்டது. சைரன் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவருக்கு கை உடைந்துவிட்டது. இரவில் ஷூட்டிங் நடத்தும்போது மற்றொருவருக்கு கை நசுங்கியது. இந்தமாதிரி, ஏராளமானவர்களுக்கு அடிப்பட்டது. ஒவ்வொருவரும் 100 சதவீதம் உழைப்பை செலுத்தியுள்ளார்கள். அதில், கம்மியாக உடலுழைப்பை போட்டது நானாகத்தான் இருப்பேன்.

நான் ’இதைப் பண்ணுங்க… அதைப் பண்ணுங்க’ என்று வாயால்தான் சொல்கிறேன். ஆனால், உடல் உழைப்பைப் போடுபவர்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம். ஃபைட் மாஸ்டர், லைட் மேன்கள், உணவுத் தயாரிப்பவர்கள் என ஒவ்வொருத்துறையினரும் கடுமையாக உழைக்கிறார்கள். அஜித் சாரிடம் ‘சார் 150 கிலோமீட்டர்ல இந்தக் காரைத் தாண்டிப் போறீங்க’என்றால், கேமராவில் தெரியும்படியும் ஓட்டவேண்டும்: காரில் படமாலும் ஓட்டவேண்டும் என்ற கஷ்டம் தெரியும். ’வலிமை’ எடிட்டர் எல்லாம் தூங்கினாரா? இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு வேலை”.

image

அஜித் பைக் ரேஸர், புகைப்படக் கலைஞர், பிரியாணி சமைப்பார், ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகுவார் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். அவரைப்பற்றி, தெரியாத புது விஷயம்னா நீங்க என்ன சொல்வீங்க?

”அஜித் சாருடன் இரண்டு படம்தானே பண்ணிருக்கேன்? ஆனால், ரசிகர்கள் அவருடன் 60 படங்கள் பயணம் செய்துள்ளனர். ரசிகர்களை விட எனக்கு என்ன எக்ஸ்ட்ரா தெரிந்து விடப்போகிறது? உண்மையில், ரசிகர்களுக்குத் தெரிந்ததுகூட எனக்குத் தெரியாது. ஷூட்டிங் போனால் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். எனக்கு ரொம்பத் தெரியாது. ஆனால், பொதுவாகவே அஜித் சாருக்கு விளையாட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும். விளையாட்டில் பங்கேற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்”.

அஜித் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவரிடம், நீங்கள் கற்றுக்கொண்டவை?

“அஜித் சாரிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது வலியைத் தாங்கும் அந்த உறுதியைத்தான். படப்பிடிப்பில் ஏதாவது நடந்தால் கத்தி சத்தம் போடாமல் பயப்படாமல் நம்மிடம் வந்து ’கவலைப்பட வேண்டாம்: கடவுள் இருக்கார்’ என்று ஆறுதல் சொல்வார். அவ்வளவு பாசிட்டிவானவர். மன வலிமையையும் உடல் வலிமையையும் அவரிடம் கற்றுகொள்ள வேண்டியவை”.

சிறுத்தை சிவாவுடன் நான்கு படங்களில் இணைந்த அஜித், தற்போது உங்களுடன் மூன்றாவது படத்திலும் இணைகிறாரே.. அப்படி, அவர் ஒரே இயக்குநருடன் இணைய என்னக் காரணம்? எந்த விஷயம் அவருக்கு பிடிச்சிருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

”இது அஜித் சாருக்கான கேள்வி. சிவா சாரும் அஜித் சாரும் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ். ரெண்டுப் பேருமே குடும்பத்திற்கு மரியாதைக் கொடுப்பவர்கள். ஒரேமாதிரியான சிந்தனைக் கொண்டவர்கள். ஆனால், இதற்கு நான் கொஞ்சம் ஆப்போசிட்டாவனவன். ஒருவேளை நான் சின்சியராக வேலை செய்வதால், அஜித் சாருக்கு பிடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்”

உங்களுடனும் நான்காவது படம் பண்ணுவார் என்று நாங்கள் எதிர்பாக்கலாமா?

”இது அஜித் சார் முடிவு செய்யவேண்டியது. இதுகுறித்தெல்லாம் பேசவேண்டாம்”.

image

உங்கள் வாழ்க்கையின் ’வலிமை’ என்றால் யாரை சொல்வீர்கள்?

“கடவுள்தான் என் வலிமை. எந்த அழுத்தம் வந்தாலும் இரண்டு பேரைத்தான் நான் டார்ச்சர் பண்ணுவேன். ஒன்று கடவுள் அடுத்து என் மனைவி. இவர்களிடம்தான் அனைத்தையும் ஷேர் செய்வேன்”.

அஜித் ‘வலிமை’ பார்த்துவிட்டு பாராட்டியதாக சமீபத்தில் தகவல் வெளியானதே? என்ன சொன்னார்?

“இன்னும் ‘வலிமை’யை அஜித் சாரும் பார்க்கவில்லை. தயாரிப்பாளரும் பார்க்கவில்லை. அது பொய் செய்தி. சென்சார் முடிந்தபிறகு பார்ப்பார்கள்”.

சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த படங்கள்?

”கடைசியாக தியேட்டரில் ‘டாக்டர்’ படமும் ஓடிடியில் ‘சார்பட்டா பரம்பரை’யும் பார்த்தேன். அதன்பிறகு எந்தப் படமும் பார்க்கவில்லை. ’வலிமை’ வெளியீட்டுப் பணிகள் தொடர்ந்ததால் அதிகமாக மற்றப் படங்களைப் பார்க்க முடியவில்லை. நான் எல்லா படமும் பார்க்கமாட்டேன். படத்தின் ட்ரெய்லர் போஸ்டர் போன்றவற்றைப் பார்த்துவிட்டு ’இந்தப் படம் நல்லாருக்கும்’னு தோணுச்சின்னா அந்தப் படத்துக்குப் போவேன். ஆனால், தற்போது நிறைய நல்ல படங்கள் வந்துள்ளது. இன்னும் ‘ஜெய் பீம்’ பார்க்கவில்லை. ’வினோதய சித்தம்’ சூப்பராக இருக்கிறது என்றார்கள். ’வலிமை’ வெளியானவுடன் பார்க்கவேண்டும்”.

தமிழக அரசின் சிமெண்டுக்கு ‘வலிமை’ தலைப்பையே வைத்துள்ளார்களே?

“அஜித் சாரின் ‘வீரம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ போன்ற தலைப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகின்றவை. அப்படித்தான் ‘வலிமை’யையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘வலிமை’ படத்துக்காக அது வைக்கப்படவில்லை. அது அந்த சிமண்ட்டுடன் சம்மந்தப்பட்டிருப்பதால் வைத்துள்ளார்கள். அது, நம் படத்துக்கு ஒரு ப்ளஸ்தான்”.

விஜய்யுடன் எப்போது இணைவீர்கள்? அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததா?

“விஜய் சாரை மூன்று முறை சந்தித்தேன். இரண்டுமுறைக் கதைச் சொல்ல வாய்ப்பு கொடுத்தார். நான்தான் சொதப்பிவிட்டேன். இன்னொருவாட்டி நல்லா தயார் பண்ணிக்கொண்டு இன்னொரு சான்ஸ் கேட்பேன்”.

மூன்றாவது முறையும் போனிகபூருடன் ’அஜித் 61’ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியானபோது ‘இந்தப் படத்தின் அப்டேட்டும் லேட்டாதான் வரும்’ என்று ரசிகர்கள் கருத்திட்டார்களே?

“‘வலிமை’ ஆரம்பிக்கப்பட்டபோது தொடங்கிய படங்களின் லிஸ்ட் பெரிது. அந்தப் படங்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. அதில், இன்னும் ஷூட்டிங் முடிக்காதப் படங்கள் ஏராளம். அதுப்பற்றி யாரும் பேசமாட்டார்கள். கொரோனா சூழல் மட்டுமே ’வலிமை’ தாமதமாகக் காரணம். இது புரியாமல் பலர் தயாரிப்பாளரிடம் அப்டேட்… அப்டேட் என்கிறீர்கள். நாளைக்கு ஒமைக்ரான் பிரச்னையும் இருக்கிறது. இப்படி, ஒரு படத்தின் ரிலீஸில் ஆயிரம் பிரச்சனைகள் வரும். தயாரிப்பாளர் அனைத்தையும் சரிபண்ணித்தானே வெளிக்கொண்டு வரமுடியும்? நாளைக்கு ரிலீஸில் பிரச்னை என்றால் என்ன செய்வீர்கள்?”.

image

அப்போ, ‘அஜித் 61’ படத்தின் அப்டேட்கள் தாமதமாகாது என்று எதிர்பார்க்கலாமில்லையா?

“அப்படியெல்லாம் ஆகாது. நானும் ஆகாது என்று எதிர்பார்க்கிறேன்”.

எதாவது ஒரு ’அஜித் 61’ அப்டேட் கொடுக்க முடியுமா ?

”’வலிமை’ வெளியானவுடன் படத்தின் அறிவிப்பு வந்துவிடும்”. முதலில் ‘வலிமை’ படத்தை எஞ்சாய் செய்யுங்கள்”.

அஜித் படத்தில் உங்களுக்குப் பிடித்தப் படம்?

“எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தப் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஆனால், நான் இயக்குவதற்கு முன்பே பிடித்தப்படம் ‘அமர்க்களம்’. ரகுவரன் சாரின் நடிப்பு பிடிக்கும் என்பதால் ’அமர்க்களம்’ பார்க்கப்போனேன். ஆனால், அஜித் சாரின் நடிப்பு பயங்கராமாக இருந்தது. எல்லாமே ரொம்ப நல்லா பண்ணிருந்தார். அதனால், ’அமர்க்களம்’ என் ஃபேவரிட். பொதுவாகவே சரண் சார் படங்களும் பிடிக்கும்”.

நேர்காணல்: வினி சர்பனா | நன்றி: புதியதலைமுறை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More