செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை | தங்கர்பச்சான் செவ்வி

‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை | தங்கர்பச்சான் செவ்வி

4 minutes read
‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை: தங்கர்பச்சான்

‘அழகி’ என்றொரு அழகியல் கலந்த மனித மனத்தை எக்காலத்திலும் உருக்கும் படத்தைத் தந்த இயக்குநர் தங்கர்பச்சான், அதுபோல் இன்னொரு படம் எடுப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.

தங்கர்பச்சான்

விதவிதமான காதலைத் தந்திருக்கும் தமிழ் சினிமாதான் ’அழகி’யையும் தந்தது. மனதின் ஆழத்துக்குள் புதைந்து கிடக்கிற முதல் காதலையும் அதன் ஏக்கங்களையும் தவிப்புகளையும் கிராமத்துக் காற்றோடு மூச்சுமுட்ட தந்த ‘அழகி’க்கு இன்று 20 வயது! படம் வந்த புதிதில், பல சண்முகங்கள், தங்கள் தனலட்சுமிகளின் நினைவுகளில் நீந்திக் கிடந்தார்கள்.


தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘அழகி’யில், பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா, விவேக், பாண்டு, சாயாஜி ஷிண்டே, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்துக்குப் பெரும்பலம். வருடம் 20 ஆன நிலையில், ‘அழகி’ பற்றி இயக்குநர் தங்கர்பச்சான், என்ன நினைக்கிறார்?‘அழகி’யை படைச்சவன்ங்கிற முறையில, நான் உணர நிறைய இருக்கிறது. அது திரைப்படத்துக்காக மட்டுமே உருவான கதையல்ல. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வும் ‘அழகி’யில இருக்குன்னு நினைக்கிறாங்க இல்லையா? அப்ப படைக்கப்பட்ட எனக்குள்ள எவ்வளவு இருக்கும். அதை வெளியேப் பகிர முடியாது. படத்துல சண்முகமும் தனலட்சுமியும் தங்கள் மனசுல இருக்கிற காதலைச் சொல்லவே இல்லை. பகிர்ந்துக்கவே இல்லை. படத்துல ஒரு காதல் காட்சி கூட இல்லை. அப்படித்தானே வாழ்க்கை இருக்கு. அதுவும் கிராமத்துல இருந்து வந்தவங்களுக்கு காதலை, ஐ லவ் யூன்னு சொல்லி வெளிப்படுத்தத் தெரியாது. அது புரிந்துக்கொள்ளக் கூடியதுதானே! படம் வெளியாகி மக்கள் கண்களுக்கு கொண்டு வந்த பிறகு, 12, 13-வது நாள்தான் என்னால மூச்சுவிட முடிந்தது. அப்பதான் நான் நிம்மதியா உட்கார்ந்தேன். அந்த இடைப்பட்ட காலங்கள்ல நான் அனுபவிச்ச துயரங்கள், அவமானங்கள், கஷ்டங்களை எல்லாம் இப்ப பேசணுமா?ன்னு தோணுது. அது என்னோடயே அழிஞ்சு போகட்டும்.

‘அழகி’யில் ஆர்.பார்த்திபன், நந்திதா தாஸ்

ஏன் அப்படிச் சொல்றீங்க?

இங்க தாக்கத்தை ஏற்படுத்துற, பெரிய ரசனை மாற்றத்தை உருவாக்குற, ஒரு படைப்பை கொண்டுவரதுக்கு அவ்வளவு பெரிய போராட்டம் இருக்கிறது. இப்ப இருக்கிற வணிகச் சூழல்ல அது சாத்தியமில்லை. ‘அழகி’ய எப்படி என்னால எடுக்க முடிஞ்சதுன்னு இப்ப திரும்பிப் பார்க்கிறேன். திரைக்கதையில என்ன எழுதினேனோ, அதைப் படமாக்காம விடவே இல்லை. அது இன்னைக்கு எனக்கும் சாத்தியப்படலை. வேற எந்தப் படத்துக்கும் என்னால அப்படிப் பண்ண முடியலை. அப்ப, ஏதோ ஒரு வேகம், என்னை அடிச்சு தூக்கிட்டுப் போயிருக்கு. இப்ப மலைப்பா இருக்கு. ‘அழகி’ மாதிரி வாழ்வில் மறக்க முடியாத பல படங்கள் இருக்கு. அன்னக்கிளி, ஒருதலை ராகம், சேது… இதுமாதிரி படங்களை தயாரிச்சது புது தயாரிப்பாளர்கள்தான். ஏற்கெனவே இங்க காலங்காலமா படங்கள் தயாரிச்சுட்டு இருக்கிற தயாரிப்பாளர்கள், வணிகமாக மட்டுமே பார்த்து, மசாலாவையே உருவாக்கி, நடிகர்கள் முகத்தை மட்டுமே காண்பிச்சு, ரசிகர்கள்கிட்ட பணத்தைப் பிடுங்கறாங்கள்ல, அவங்களால தமிழ் சினிமா ஒரு இம்மி கூட நகர்றதில்ல.

அழகி’ ரெடியான நேரத்துல120 முறை திரையிட்டும் விநியோகஸ்தர்கள் வாங்க முன்வரலைன்னு சொல்லி இருந்தீங்களே?

உண்மைதான். என் நெடுநாள் நண்பர், உதயகுமார் படம் தயாரிக்கலாம்னு வந்தப்ப, இதுல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க, அவருக்கு சரியா வருமான்னு யோசிச்சேன். கதையைக் கேட்டதும் அவங்க அழுதுட்டே இருந்தாங்க, அவங்களால அதைக் கட்டுப்படுத்தவே முடியலை. அப்பதான் இந்த கதை வெற்றிபெறும்னு முடிவாச்சு. முதல்ல, அவங்க அழுதாங்க, படம் எடுத்து வெளியிடறதுக்குள்ள என்னை அழவச்சு, எங்க நட்பு விரிசலாகி, ‘என்னை பழிவாங்கிட்டடா’ங்கற அளவுக்குப் போயி, படம் வெற்றி பெற்று மக்கள் கொண்டாடின பிறகுதான் அது மறைஞ்சது. ‘அழகி’ன்னதும் இன்னைக்கும் இதுதான் ஞாபகத்துக்கு வருது. எவ்வளவு அவமானங்களை நான் தாண்டி வந்திருக்கேன்! இன்னைக்கு எல்லாரும் பாராட்டுறாங்க. அந்த நேரத்துல எனக்கு இருந்த பக்குவத்தை இப்ப நினைச்சுப் பார்க்கிறேன்.

அழகி

அழகி’ மாதிரி இன்னொரு படம் வர வாய்ப்பிருக்கா?

இன்னைக்கு முறையான வாழ்க்கையை இங்க யாருமே வாழலை. ஒரு குழந்தை பிறந்ததுமே அதை சம்பாதிக்கறதுக்காவே உருவாக்கறாங்க. எந்தப் பள்ளியில சேர்த்தா, நம்ம பிள்ளை அறிவாளியா வருவான்னுதான் பெற்றோர் சேர்க்கிறாங்க. தொலைநோக்கு பார்வைகொண்ட பெற்றோர் கூட அப்படித்தான் சேர்க்கிறாங்க. அங்கேயே முடிஞ்சுபோகுது. ‘அழகி’ எப்படி உருவாச்சுன்னா, நான் படிச்ச பள்ளிக்கூடம்தான் உருவாக்குச்சு. விடுதலை உணர்வுடன் கூடிய, நான் நினைச்ச வாழ்க்கையை எனக்குத் தந்த அந்த மண், ஆசிரியர்கள், அந்தக் கிராமம், நண்பர்கள், நான் வளர்த்த ஆடு, மாடு, குருவிகள் எல்லாம் சேர்த்துதான் உருவாச்சு. இன்னைக்கு இருக்கிற பிள்ளைகள், கலைன்னா என்னன்னே தெரியாம வாழறாங்க. பிறகு எப்படி இங்கயிருந்து படைப்பு உருவாகும்? தயாரிப்பாளர் பணம் போடலாம். ஆனா, இன்னொரு ‘அழகி’ உருவாக வாய்ப்பே இல்லை. அழகியல் சார்ந்து, வாழ்க்கையின் நுணுக்கங்களை வெளிக்கொணர்கிற, ஒவ்வொருத்தருக்குள்ளும் போய் கிளர்ந்தெழச் செய்கிற, மீட்டுருவாக்கம் செய்கிற, நினைவூட்டுகிற படைப்புகள் வராததற்கு காரணம், இங்குள்ள கல்விச் சூழல்தான். இது மிகப்பெரிய இழப்புதானே!

தங்கர்பச்சான்

நீங்க இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’, ‘அழகி’யின் இன்னொரு வடிவம்னு சொல்லி இருந்தீங்களே?

ஆமா. கண்டிப்பா. அந்தப் படத்தை 2011-ம் வருஷம் முடிச்சுட்டேன். பல்வேறு பிரச்னைகளால 2018-ம் வருஷம்தான் ரிலீஸ் ஆச்சு. சரியான நேரத்துல ரிலீஸ் ஆகி இருந்தா, அந்தப் படம் இன்னொரு ‘அழகி’யா போற்றப்பட்டிருக்கும். இப்பப் பார்த்தாலும் அது முக்கியமான படமா இருக்கும். அதன் தாக்கத்துலயே சில படங்கள் வந்திருக்கு.

நேர்காணல்: ஏக்நாத்ராஜ் | நன்றி: காமதேனு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More