செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறுதிச் சுற்றில் ஜெவ்னா கிங்ஸ், கோல் மார்வல்ஸ்

இறுதிச் சுற்றில் ஜெவ்னா கிங்ஸ், கோல் மார்வல்ஸ்

1 minutes read

ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிச் சுற்றில் விளையாட இப்போதைக்கு முன்னாள் சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் இடையில் சனிக்கிழமை இரவு 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட லங்கா பிறீமியர் லீக் போட்டியில் கண்டி பெல்கன்ஸ் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்ததால் ஜெவ்னா கிங்ஸ், கோல் மார்வல்ஸ் ஆகிய அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டன.

சனிக்கிழமை இரவு மழை காரணமாக சுமார் 3 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி அணிக்கு 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமத் ஹரிஸ் 13 பந்துகளில் 30 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 13 பந்துகளில் 13 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரெண்டோர்வ் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

79 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 5.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டி இறுதிச் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

ஒரு கட்டத்தில் ஜெவ்னா கிங்ஸ் 3 விக்கெட்களை இழந்து 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், அவிஷ்க பெர்னாண்டோ 16 ஓட்டங்களையும் சரித் அசலன்க 9 பந்துகளில் 26 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 6 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

ஆட்டநாயகன்: ஜேசன் பெஹ்ரெண்டோர்வ்.

தீர்மானம் மிக்க இரண்டு போட்டிகள் இன்று 

ஏற்கனவே இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள கோல் மார்வல்ஸ் அணிக்கும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அப்போட்டியில் தம்புள்ள சிக்சர்ஸ் வெற்றி பெற்றால் அதன் இறுதிச் சுற்று வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.

இதேவேளை இரவு நடைபெறவுள்ள போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்ர்ஸை ஜெவ்னா கிங்ஸ் எதிர்த்தாடவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More