பொறிக்கடவை அம்மாளின் திருவிழாக்கள், வேள்வி விழா என்பது குஞ்சுப் பரந்தன், செருக்கன், பெரிய பரந்தன் என்ற மூன்று கிராம மக்களுக்கும் பிரதானமான விழாக்கள். பூனகரி, மீசாலை, கச்சாய் மக்களும் வந்து கலந்து கொள்ளுவார்கள்.
தமிழர்களின் ஏனைய பண்டிகைகளை விட மூன்று கிராம மக்களுக்கு இந்த நாட்களே புத்தாடை அணிந்து, உறவினர்களை வரவேற்று, உபசரித்து கூடி மகிழும் நாட்கள் ஆகும். இளைஞர்கள் காவடி எடுத்து, வேட்டியை மடித்து கட்டி, பறை மேளத்தின் அடிக்கு இசைவாக வெறும் மேலுடன், வியர்வை வழிய வழிய ஆடுவார்கள்.
யுவதிகள் தமக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நேர்த்தி வைத்து, விரதம் பிடித்து பாற்செம்பு எடுப்பார்கள். அழகாக ஆடை உடுத்தி பாற்செம்பு எடுக்க வரும் பெண்களின் அழகு இளைஞர்களின் கண்களில் படும். நல்ல உடற்கட்டுடன் மேள அடிக்கு இசைவாக, அழகாக ஆடும் இளைஞர்களை கன்னிப் பெண்கள் பார்க்காதவர்கள் மாதிரி கடைக் கண்களால் பார்ப்பார்கள்.
கணபதி துள்ளித் துள்ளி ஆடினான். சுழன்று சுழன்று ஆடினான். மேளம் அடிப்பவர்கள் கணபதி ஆடுகிறான் என்றால் தாங்களும் ரசித்து, ரசித்து இசையை மாற்றி, மாற்றி தமது பறை மேளத்தில் எத்தனை விதமாக அடிக்கலாமோ அத்தனை விதமாக தமது திறமை அனைத்தையும் பயன்படுத்தி அடித்தார்கள். கணபதியும் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடினான். அவனது ஆட்டத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று பார்த்து மகிழ்ந்தார்கள்.
அம்மன் வேள்விக்காக மீசாலையில் இருந்து வந்த குடும்பங்களின் தலைவர்கள் தங்கள் மகளுக்கு, மகனுக்கு மாப்பிள்ளை, பெண்பிள்ளை பார்த்து ஒழுங்கு செய்யும் சம்பவங்களும் இடம் பெற்றன. அம்மனின் வேள்வி பங்குனி மாத இறுதி திங்கள் அல்லது அதற்கு முந்திய திங்கள் இடம் பெறும். மாதம் முழுவதும் மூன்று கிராமத்து மக்களும் மச்சம், மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.
திங்கட்கிழமை விரதம் இருந்து, அறு சுவை உணவு தயாரித்து வைத்துவிட்டு, அம்மன் கோவில் போய் அம்மனை வணங்கி விட்டு வந்து விரதம் முடிப்பார்கள். வேள்வியின் அன்று ஆறுமுகத்தாரின் அழைப்பை ஏற்று மீசாலையில் இருந்து வந்தவர்களும் அநேக பெரிய பரந்தன் மக்களும் மதிய உணவை தியாகர் வயலில் வந்து சாப்பிட்டார்கள். விசாலாட்சிக்கு ஊர் பெண்களும் மீசாலையால் வந்த பெண்களும் உணவு தயாரிக்க உதவினார்கள்.
விசாலாட்சி இரண்டு கிழமைகளுக்கு முன்னரே நெல் அவித்து குற்றி வைத்து, மிளகாய் வறுத்து தூள் இடித்து வைத்து, அரிசி ஊறப் போட்டு மா இடித்து வைத்து எல்லா வேலைகளையும் முடித்திருப்பாள். ஊர் பெண்கள் யாவற்றிற்கும் உதவி செய்தார்கள். எல்லாம் உரலில் இடப்பட்டு உலக்கைகளாலேயே இடிக்கப்பட்டன. ஒரு உரலில் இரண்டு பெண்கள் கைகளை மாறி மாறி போட்டு உலக்கைகளால் இடிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். பெண்கள் ஊர்ப் புதினங்களை பேசி மகிழ்வதும் இந்த நாட்களில் தான்.
கணபதியை பலர் மாப்பிள்ளை ஆக்க விரும்பினர். ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் யாரிடமும் பிடி கொடுத்து பேசவில்லை. அவனுக்கு இருபத்தொரு வயது முடியட்டும் என்று காத்திருந்தார்கள்.
கணபதி வேள்விக்கு ‘சேன்சோராவுடன்’ வந்து காவடி ஆட்டங்களையும் பார்த்து, தங்கள் வீட்டில் சாப்பிட்டு போகும் படி பறங்கி அதிகாரியை கேட்டிருந்தான். கணபதியே எதிர்பாரா வண்ணம் பறங்கியர் இரண்டு குதிரைகளில் மனைவியுடன் வந்து காவடி ஆட்டம், பாற்செம்பு எடுத்தல் எல்லாவற்றையும் ரசித்து பார்த்துவிட்டு, தியாகர் வயலுக்கு வந்து பந்தியில் வாழையிலையில் எல்லோரையும் போல இருந்து சாப்பிட்டுவிட்டு, கணபதியிடம் விடைபெற்று சென்றார். கணபதி பறங்கியர் தன்னை மதித்து, தனது அழைப்பை ஏற்று வந்ததை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.
கணபதிக்கு பத்தொன்பது வயது முடிந்து இருபது வயதாகிவிட்டது. வயல் வேலை, கமவிதானை வேலை இல்லாத போது தங்கையுடனும் தம்பியுடனும் விளையாடுவதில் பொழுதை போக்கினான். சில இரவுகளில் தோழர்களுடன் வேட்டைக்கும் போனான். அதனால் ஞாயிறு பறங்கியர் வரும் போது இறைச்சியுடன் வத்தல்களையும் கொடுக்க கூடியதாக இருந்தது.
தோட்டாக்கள் முடிந்த போதும், டோர்ச் லைற் பற்றறி பலவீனமான போதும் பறங்கியர் கொண்டு வந்து புதியவற்றைக் கொடுப்பார். “மாதமொருமுறை ஆங்கில அதிகாரிகள் மேற்பார்வைக்கு வரும் போது நாங்கள் சீமைச் சாராயத்துடன் ‘சென்சோரா’ விதம் விதமாக சமைக்கும் இறைச்சி கறி, வத்தல் கறியுடன் சாப்பாட்டு விருந்து வைப்போம். அவர்கள் அவற்றை விரும்பி உண்பார்கள்” என்றும், “கணபதி, அவர்கள் திரும்ப செல்லும் போது நீ தந்ததாக கூறி வத்தல் கொடுத்து விடுவோம்” என்றும் பறங்கியர் கணபதிக்கு கூறியிருந்தார்.
கணபதியைக் கண்ட போதெல்லாம் முறைப் பெண்கள் அவனுடன் வெட்கப்பட்டு கதைப்பார்கள். அவர்கள் வெட்கப்படுகிறார்கள் என்பது கணபதிக்கு புரியவில்லை. தனி பிள்ளையாக பதினாறு ஆண்டுகள் வளர்ந்த படியாலும், தனக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அது வரை இல்லாத படியாலும், கணபதி உறவுக்கார ஆண்களையும் பெண்களையும் சகோதரங்களாகவே கருதினான். அதனால் அந்த பெண்களை வித்தியாசமாக ஒருநாளும் கணபதி எண்ணியதில்லை.
இப்போது நெல், வைக்கல் ஏற்றிச் செல்வதற்கும், திரும்ப கிடுகுகள் ஏற்றிவரவும் கணபதி தனியே தான் செல்கிறான். ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் அவன் பொறுப்பான பிள்ளை என்பதால் வேறு இரண்டு மூன்று வண்டில்களுடன் சேர்ந்து போய்வர அனுமதித்தார்கள். கணபதி மீசாலை செல்லும் போதெல்லாம் இரவு தங்க வேண்டி வந்தால், தான் பத்து வயது வரை வாழ்ந்த வீட்டிலேயே தங்கினான்.
ஆறுமுகத்தாரும் கணபதியும் போகத்திற்கு போகம் வந்து நின்று கறையான்களை எல்லாம் தட்டி சுத்தம் செய்து புதிதாக கூரையையும் மேய்ந்து, வீடு அழியாமல் பார்த்துக் கொண்டனர்.
விசாலாட்சியின் உறவுப் பெண் இப்போதும் வந்து கூட்டி, மெழுகி செல்கிறா. விசாலாட்சி காலபோகத்திலும் சிறுபோகத்திலும் அந்த பெண்ணுக்கு நெல் அனுப்ப தவறுவதில்லை. விசாலாட்சி ஏனோ பெரிய பரந்தன் போன பின் இது வரை மீசாலைக்கு வந்ததில்லை.
இம்முறை அந்த காணியில் முற்றிய கறுத்தக் கொழும்பான் மாங்காய், பலா காய், தேங்காய்களை பிடுங்கி வருமாறு கணபதியிடம் விசாலாட்சி கூறியிருந்தாள். வேலைகள் முடிந்ததும் கணபதி மாங்காய்கள், பலாக்காய்களை பிடுங்கி சாக்கில் கட்டி வைத்து விட்டான். தேங்காய் பிடுங்குபவர் மறு நாள் காலமை வெள்ளனவாக வந்து தேங்காய் பிடுங்கி, உரித்தும் தருகிறேன் என்று கூறிவிட்டார்.
மறுநாள் காலை மற்ற மூன்று வண்டில்களுடன் உறவினர்கள் கணபதியை அழைத்துச் செல்ல வந்து விட்டனர். அவர்களை போகுமாறும் தான், அவர்கள் கரந்தாய் குளத்தருகே எருதுகளை அவிழ்த்து தண்ணீர் காட்டி, ஆற விடும்போது விரைவாக வந்து சேர்ந்து கொள்வேன் என்றும் கூறி அனுப்பி விட்டு, தான் தேங்காய்களை உரிக்கத் தொடங்கினான். தேங்காய் பிடுங்குபவரும் தென்னைகளில் ஏறி அவற்றை பிடுங்கி விட்டு தானும் சேர்ந்து உரிக்கத் தொடங்கினார். இருவரும் தேங்காய் உரித்து முடிய சிறிது நேரம் சென்று விட்டது.
கணபதி மாங்காய், பலாக்காய், தேங்காய்களை வண்டிலில் ஏற்றி எருதுகளுக்கும் தண்ணீர் காட்டி, அவற்றை வண்டிலில் பூட்டி, தேங்காய் பிடுங்குபவருக்குரிய தேங்காய்களை கொடுத்து விட்டு விடை பெற்று வேகமாக சென்றான். மீசாலைச் சந்தி, கொடிகாமச் சந்தை, மிருசுவில் சந்தி, எழுதுமட்டுவாள் சந்தை, முதலிய இடங்களில் சன நடமாட்டம் இருந்த படியால் அந்த இடங்களில் வேகமாக வண்டிலை ஓட்ட முடியவில்லை.
ஒருவாறு முகமாலை தாண்டி, பளை நெருங்க வெய்யிலும் ஏறி விட்டது. எருதுகளும் அவசரம் அவசரமாக ஓடி வந்தபடியால் களைத்து விட்டன. ஒரு வளைவில் இருந்த காணியின் முன், வீதியின் கரையோரம் இருந்த ஒரு மரநிழலில் வண்டிலை நிறுத்தி எருதுகளை விட்டு மேய விட்டான்.
அப்போது ஆறுமுகத்தாரின் வயதை ஒத்த ஒருவர் அந்த காணியின் அடி வளவில் இருந்து வந்து கணபதியையும் வண்டிலையும் எருதுகளையும் பார்த்தார். எருதுகளை அவருக்கு பிடித்து விட்டது. அவரிடமும் வண்டிலும் எருதுகளும் இருந்தன. அவர் கணபதியைப் பார்த்து,
“தம்பி எங்கே இருந்து வருகிறாய். எருதுகள் நன்கு களைத்து விட்டன, கொஞ்சம் ஆற விடு. எங்கடை பூவலிலை தண்ணீர் குடிக்கவிடு.” என்றார். கணபதியும் தான் அவசரமாக வந்த காரணத்தை சொன்னான்.
அவர் தனது கொட்டில் வீட்டை பார்த்து “மீனாட்சி, மீனாட்சி” என்று கூப்பிட்டார். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பெண் கொட்டிலின் வெளியே வந்தாள். அவள் பின்னால் ஒரு பத்து வயது சிறுவனும் வந்தான். “மீனாட்சி, இந்த எருதுகளை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். பெரிய சட்டியையும் கடகத்தையும் எடுத்து வா” என்றார். அவள் அவற்றை எடுக்க கொட்டிலின் உள்ளே சென்றாள்.
அவர் கணபதியைப் பார்த்து “இந்த எருதுகளை எங்கே வாங்கினீர்கள்” என்று கேட்டார். கணபதி “இந்த எருதுகளை ஐயா வன்னியில் நாம்பன் கன்றுகளாக வாங்கி வந்து உழவு, வண்டில் ஓட்டம் எல்லாம் பழக்கினவர். அவர் இவற்றின் சாப்பாட்டிலும் நல்ல கவனமாக இருந்தவர்” என்று சொன்னான். அவன் பணிவுடன் பதில் சொல்லிய விதம், அவனது தோற்றம் எல்லாம் அவன் நல்ல குடும்பத்து பிள்ளை என்று அவருக்கு உணர்த்தியது.
அந்த பாவாடை சட்டை அணிந்த பதினாறு வயது மதிக்கத்தக்க பெண், ஒரு நான்கு மூலைகளிலும் கயிறு கட்டிய கடகமும், பெரிய சட்டியும் கொண்டு ஓடி வந்தாள். அவள் தான் மீனாட்சி என்று கணபதி புரிந்து கொண்டான். அவள் பின்னால் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ஓடி வந்தான். அவள் கொண்டு வந்த கடகத்திற்கு அடியில் ஐந்தாவது மூலை ஒன்றையும் கணபதி கண்டான். அந்த பெண் தனது அடர்த்தியான கூந்தலை இரட்டை பின்னலாக பின்னியிருந்தாள்.
அவள் சட்டியை வைத்து விட்டு, ஐந்து மூலை கடகத்தை பூவலில் விட்டு தண்ணீர் அள்ளி பெரிய சட்டியில் ஊற்றினாள். மீண்டும் கடகத்தை விட்டு தண்ணீர் அள்ளி வைத்துக் கொண்டு கணபதியைப் பார்த்தாள்.
அப்போது தான் சுய உணர்வு வந்த கணபதி விரைந்து சென்று ஒரு எருதை அவிழ்த்து கூட்டி வந்தான். எருது அவள் ஊற்ற ஊற்ற தண்ணீரை குடித்தது.
“வாயில்லாத சீவனுக்கு சரியான தண்ணீர் விடாய்” என்று அவள் தனக்கு தானே கூறிக்கொண்டாள். அவள் தன்னை குறை சொல்வதாக எண்ணிய கணபதி “காலமை அவசரமாக வெளிக்கிட்டபடியால், அது குடித்த தண்ணீர் போதவில்லை.” என்றான். அவள் பதிலெதுவும் சொல்லவில்லை. தண்ணீர் அள்ளுவதிலேயே கவனமாக இருந்தாள்.
வயிறு நிறைந்த எருது தலையை நிமிர்த்தி தனக்கு போதும் என்று சொல்வது போல தலையை இருபுறமும் ஆட்டியது. கணபதி அந்த எருதை கொண்டு சென்று கட்டி விட்டு, மற்ற எருதை அவிட்டுக் கொண்டு வந்தான். அவன் அந்த பெண்ணை பார்த்தபடியே எருதை நடத்தி வந்தான். அவன் பார்வை அந்த பெண் மேல் வைத்தபடி நடந்து வந்ததால் வழியில் இருந்த கல்லை கவனிக்கவில்லை. கல்லில் கால் தடுக்கி விழப்பார்த்தான். அப்போது அவள் ‘களுக்’ என்று சிரித்த சத்தம் கேட்டு கணபதி அவளைப் பார்த்தான். அவளது பல் வரிசை ஒழுங்காக, அழகாக பளிச்சென்று இருந்தது.
அவள் சிரித்த பொழுது அவள் முகம் அழகாக மலர்ந்ததை கணபதி பார்த்தான். அவள் கணபதி பார்ப்பதைக் கண்டு சிரிப்பதை நிறுத்தி கொண்டாள். ஆனால் கணபதியின் மனத்தில் நிலைத்து நின்று கொண்டாள்.
கணபதிக்கு தனது மனதை புரிந்து கொள்ள முடியவில்லை. சிவப்பு நிறத்தில் அழகாக இருந்த முறைப் பெண்களை சகோதரிகளாக மதித்த கணபதியை கறுப்பு நிறமான மீனாட்சி மீண்டும் மீண்டும் நினைக்க வைத்தாள். கறுப்பாக இருந்தாலும் நல்ல முக வெட்டுடனும் உயரமான மெல்லிய உடல் வாகுடனும் மீனாட்சி, கணபதியின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்.
பெரியவர் தன் பெயர் முருகேசர் என்றும், தன் மனைவி தவறிய பின்னர் தனது மகள் மீனாட்சியும், மகன் கந்தையாவும் தான் தனக்கு உயிர் என்றார். கணபதியின் பெயரை விசாரித்தார். கணபதி “என் பெயர் கணபதிப்பிள்ளை, பெரிய பரந்தன் ஆறுமுகத்தார் எனது ஐயா. நாங்கள் வயல் தான் செய்கிறனாங்கள். வழக்கமாக ஐயாவும் கூட வருவார். தம்பியும் தங்கையும் சின்னப் பிள்ளைகள். அவர்களை இரவு முழுவதும் அம்மா சமாளிக்க மாட்டா. அது தான் நான் தனியாக வந்தனான்” என்றான்.
“கூட வந்தவர்கள் கரந்தாய் குளத்தடியில் நிற்பார்கள். நான் போய் அவர்களுடன் சேர வேணும். ஆனையிறவுக்கு அங்காலை ஊர் போகும் வரை ஒரே காடுகள். பின்னேரத்தில் சிறுத்தைப் புலிகளும் சில நேரம் ஊசாடும். நாங்கள் சேர்ந்து போனால் பயமில்லை” என்றும் கூறினான்.
“சரி, இந்த சாக்கிலை இரு. ஒரு இளநீர் வெட்டி வருகிறேன், குடித்து விட்டு வெளிக்கிடு” என்று முருகேசர் சொன்னார்.
மீனாட்சி கணபதி சொன்னவற்றை கேட்டுக்கொண்டு வேலி மறைவில் நின்றாள். கந்தையா, கணபதிக்கு கிட்ட போய் “சிறுத்தை புலி பெரிதா? ஆட்களையும் சாப்பிடுமா?” என்று கேட்டான்.
“சில புலிகள் பெரிது தான். கூட்டமாக ஆட்கள் போனால் ஓடி விடும். தனியாக போனவர்கள் சில பேரை கடித்து இருக்கிறது. அவர்கள் கத்தி சத்தம் போட பயந்து ஓடி விடும்” என்று கணபதி சொன்னான்.
தற்செயலாக திரும்பி வேலியோரம் நின்ற மீனாட்சியை பார்த்த கணபதி அவளது பெரிய உருண்டைக் கண்கள் பயத்தில் மேலும் பெரிதாக விரிந்திருந்ததை கண்டான். கணபதி பார்ப்பதைக் கண்டு அவள் தலையை குனிந்து கொண்டாள். முருகேசர் கொண்டு வந்து கொடுத்த இளநீரை குடித்து முடித்த கணபதி, அவருக்கு நன்றி கூறி விடைபெற்று எருதுகளை வண்டிலில் பூட்டிக் கொண்டு வேகமாக வண்டிலை ஓட்டினான்.
தண்ணீர் குடித்து களைப்பாறிய எருதுகள், கணபதியின் அவசரத்தை புரிந்து கொண்டது போல வேகமாக ஓடின. எருதுகள் ஓட ஓட, கணபதியின் எண்ணங்களும் ஓடின. மீனாட்சி சிரித்த போது அவள் முகம் மலர்ந்ததையும், அவள் கண்கள் பயத்தால் விரிந்ததையும் எண்ணிப் பார்த்தான்.
தான் முதல் முதலாக ஒரு பெண்ணை இப்படி பார்த்ததை, ஐயாவும் அம்மாவும் என்ன சொல்வார்களோ என்று நினைத்தும் கணபதி பயந்தான். ஆனால் அந்த பயத்தையும் மீறி அவனுக்கு மீனாட்சியின் நினைவு வந்தபடியே இருந்தது.
கரந்தாய் குளத்தில் கூட வந்தவர்கள் இல்லை. கணபதி வண்டிலை தொடர்ந்து செலுத்தினான். இயக்கச்சியை அண்மித்த போது தூரத்தில், இயக்கச்சி வளைவில் மூன்று வண்டில்களும் தெற்கு பக்கமாக திரும்புவதைக் கண்டு நிம்மதியடைந்தான்.
அந்த நிம்மதி நிலைக்கவில்லை, மீனாட்சியின் அழகிய முகமும், அவளது பயந்த கண்களும் நினைவில் வந்து நிம்மதியை குலைத்துக் கொண்டு இருந்தன.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னையபகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/