Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்

13 minutes read

அன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல தெரிந்தது. எல்லோர் வயல்களிலும் நெல் விளைந்து முற்றி விட்டது.  நெற்கதிர்கள் நாணமடைந்த பெண்கள் போல தலை சாய்த்தபடி நின்றன.

ஆறுமுகத்தார் “விசாலாட்சி, இந்த தைப்பூசத்திற்கு ‘புதிர்’ எடுத்து விட்டால் அரிவு வெட்டை தொடங்கலாம்” என்று சொன்னார்.

‘புதிர் எடுத்தல்’ என்பது விவசாயிகள் தமது நெற்பயிர்களை எவ்வித சேதாரமும் இல்லாது காத்து தந்த தேவதைகளுக்கு, நன்றி செலுத்தும் செயற்பாடு. நன்கு முற்றி விளைந்த நெற்பயிர்களில் சிலவற்றை ஒரு நல்ல நாளில் வெட்டி எடுத்து வந்து பிரதான அறையின் வாசல் நிலையில் கட்டி விடுவார்கள். பின் சில கதிர்களை வெட்டி வந்து படங்கின் மேல் ஒரு மரக்குற்றியை வைத்து, கதிர் பகுதியை அதன் மேல் அடித்து நெல் மணிகளைப் பிரித்து எடுப்பார்கள்.

‘படங்கு’ என்பது பல சாக்குகளை பிரித்து, பின் பிரித்த பகுதிகள் பலவற்றை ஒன்றாக இணைத்து தைத்த ஒரு பெரிய பாய் போன்ற பொருளாகும். பிரித்த நெல்மணிகளை உரலில் இட்டு, உலக்கையால் இடிப்பார்கள். அப்போது அது உமி வேறு, அரிசி வேறாக பிரிந்து விடும். பக்குவமாக புடைத்து புதிய அரிசியை பெறுவார்கள்.

‘புதிர் காய்ச்சி படைத்தல்’ ஒவ்வொரு விவசாயியாலும் தனித்தனியாக செய்யப்படும். பொதுவாக தைப்பூசத்தில் புதிர் காய்ச்சினாலும், சிலர் தாங்கள் நல்ல நாள் என்று கருதிய நாட்களில் முந்தி பிந்தியும் படைப்பார்கள். ‘புதிர்’ அன்று புத்தம் புதிய அரிசியில் சோறாக்கி, அறு சுவை கறிகளும் சமைக்கப்படும்.

ஆறுமுகத்தார் பகல் பொழுதிலேயே வயலை சுற்றிப் பார்த்து வயலின் நடுவே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தை செருக்கி துப்பரவாக்கினார். பின் ஒரேயளவான மூன்று தடிகளை வெட்டி எடுத்து வந்து முக்காலி போல கட்டி, நட்டு விட்டார். முக்காலியின் மேலே ஒரு கடகத்தை விளாது தாங்க கூடியதாக மூன்று தடிகளும் நீட்டிக் கொண்டிருந்தன. அன்று இரவு விசாலாட்சி புதிர் சோறு காய்ச்சினாள்.

தங்கள் காணியில் ஏற்கனவே புதிர் காய்ச்சிய கிராமத்தவர்கள் உதவிக்கு வருவார்கள். தங்கள் காணியில் புதிர் காய்ச்சி சாப்பிடாதவர்கள் வேறு இடங்களில் சாப்பிடமாட்டார்கள். ஒரு கடகத்தில் தாமரை இலைகளை அடுக்கி அவற்றின் மேல் முதலில் சோறு இட்டு, பின் கறிகளையும் பழ வகைகளையும் போட்ட விசாலாட்சி, படையல்கள் மேல் இலைகள் போட்டு மூடி விட்டாள். ஞாபகமாக ஒரு கரித்துண்டையும் மூடிய இலைகளின் மேல் வைத்தாள். கெட்ட தேவதைகளிலிருந்து காப்பாற்றுவதற்கு கரித்துண்டு வைப்பது கிராமத்தவர்கள் வழக்கம்.

கணபதி ஒரு கையால் பந்தத்தை ஏந்திய படி மறு கையால் மணி ஒன்றை அடித்தபடி முன்னுக்கு சென்றான். ஆறுமுகத்தார் கடகத்தை ஏந்தியபடி அடுத்ததாக சென்றார். மற்றவர்கள் பின்னாலே போனார்கள். ஆறுமுகத்தார் கடகத்தை முக்காலியின் மேல் விழாது வைத்தார். படையலை மூடியிருந்த இலைகளை எடுத்து கால் மிதிபடாத இடத்தில் போட்டார். கணபதி பந்தத்தை ஒருபக்கத்தில் நட்டுவிட்டான். கூட சென்றவர்கள் மேலும் இரண்டு பந்தங்களை கணபதியின் பந்தத்தில் கொளுத்தி மற்ற இரண்டு பக்கங்களிலும் நட்டனர்.

ஆறுமுகத்தார் ஒரு சிட்டியில் திருநீறு இட்டு அதன் மேல் கற்பூரத்தை வைத்து எரித்துவிட்டார். கணபதி தொடர்ந்து மணியடித்தபடி எல்லாவற்றையும் அவதானித்து கொண்டு நின்றான். ஆறுமுகத்தார் நான்கு திசைகளையும் பார்த்து “கூ”,”கூ”,”கூ” என்று கூவி விட்டு திரும்பி பாராமல் வீடு நோக்கி நடந்தார். கணபதி மணி அடிப்பதை நிறுத்திவிட்டு உடன் சென்றான். மற்றவர்களும் அமைதியாக திரும்பி நடந்தனர். கூவி அழைப்பதன் மூலம் நான்கு திசை தேவதைகளும் வந்து படையலை உண்பார்கள் என்பது ஐதீகம்.

சிறிது நேரம் பொறுத்து கற்பூரம் எரிந்து முடிந்து, தீப்பத்தங்களும் அணைந்த பின் ஆறுமுகத்தார் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு சென்று தெளித்த பின் கடகத்தை எடுத்து வந்தார். வாழைப்பழங்களின் தோலை உரித்து படையலின் மேல் வைத்தார். நன்கு பிசைந்து குழைத்தார். குழையலை உருட்டி உருண்டையாக்கி எல்லோருக்கும் ஒவ்வொரு உருண்டை கொடுத்தார். கடைசியாக ஒரு உருண்டை குழைத்து தானும் சாப்பிட்டார். மிகுதியில் நான்கு நாய்களுக்கு ஒவ்வொரு உருண்டையும் இரண்டு எருதுகளுக்கு ஒவ்வொரு உருண்டையும் செய்தார். நாய்களுக்கு வைத்து விட்டு, எருதுகளுக்கானதை எடுத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக தீத்தி விட்டார். நெல் விளைந்ததில் எருதுகளுக்கும் பாதுகாத்ததில் நாய்களுக்கும் பங்கு உண்டு.

அரிவு வெட்டிற்கு ஆட்கள் போதாது. மீசாலையிலிருந்து சிலர் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் தமது உறவினர்கள் வீட்டில் தங்கினார்கள். பூனகரியிலிருந்து மூன்று வண்டில்களில் ஆட்கள் வந்தார்கள்.

அவர்கள் தியாகர் வயலில் தலைவாசலில் படுத்து எழும்பினார்கள். வண்டில்களை மர நிழல்களில் நிறுத்திவிட்டு, எருதுகளை பகலில் காட்டுக் கரையில் மேய கட்டினார்கள்.

முதல்நாள் மத்தியானம் ஒரு பானையில் சோறு காய்ச்சி வைக்கும் விசாலாட்சி, இரவில் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவாள். காலை உணவாக இந்த பழஞ்சோற்றில், வெங்காயம், பச்சை மிளகாய், மோர் சேர்த்து, பழஞ்சோற்று தண்ணியை விசாலாட்சி அவர்களுக்கு கொடுத்தாள். ஆறுமுகத்தாரும் கணபதியும் அவர்களுடனேயே வட்டமாக இருந்து குடித்தார்கள். எல்லோரும் ‘பிளா’க்களிலே பழஞ்சோற்று தண்ணியை குடித்தார்கள்.

கஞ்சி, கூழ், கள்ளு போன்றவற்றை குடிப்பதற்காக உபயோகப்படும் பிளா

குடித்த பின்னர் கழுவி வெவ்வேறு இடங்களில் தொங்க விடுவார்கள். சிலருடைய பிளாக்கள் கிழிந்து விடும். அவர்களுக்கு மட்டும் புதிய பிளாக்கள் இழைக்கபடும். எஞ்சிய பழம் சோற்று தண்ணியை விசாலாட்சி தானும் குடித்து நாய்களுக்கும் வைப்பாள். செருக்கனிலிருந்தும் சிலர் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் காலை உணவை உண்ட பின்னரே வெட்டிற்கு வந்தார்கள். மீசாலையால் வந்தவர்கள், பூனகரியிலிருந்து வந்தவர்கள், செருக்கன் ஆட்கள், எல்லோரும் ஒவ்வொருவரின் காணியில் வேலை செய்த நாட்கள் தனித்தனியாக கணிக்கப்படும்.

சூடுகள் யாவும் அடித்த பின்னர், அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு கூலியாக நெல்லை அந்தந்த விவசாயிகள் அளந்து கொடுப்பார்கள். அரிவு வெட்டு வழமை போல் கூட்டாகவே இடம் பெறும். இம்முறை பெண்கள் வந்துவிட்டபடியால், யாருக்கு அரிவு வெட்டு நடக்கிறதோ அவர்கள் வீட்டிலேயே எல்லோருக்கும் சமையல் இடம் பெறும். மற்ற பெண்கள் உதவிக்கு போவார்கள். விசாலாட்சி எல்லோர் வீட்டு சமையலுக்கும் உதவிக்கு போவாள். பாத்திரங்கள் பற்றாக்குறையாயின் கொடுத்து மாறுவார்கள்.

அருவியை வெட்டி ‘உப்பட்டி’, ‘உப்பட்டி’ ஆக பரவி போடுவார்கள். ஒரு சூடு வைக்கும் அளவிற்கு வெட்டியதும், காய்ந்து போன கதிர்களை கூட்டி கயிறுகளால் கட்டு கட்டாக கட்டுவார்கள். ஒவ்வொருவரின் காணியிலும் ஒரு மேடான பகுதியை விதைக்காது வைத்திருப்பார்கள். சூடு வைக்கும் இடத்திலேயே, சூடு அடித்தலும் நடைபெறும். அங்கு படங்குகளை விரித்து வைத்தார்கள்.

சூடு வைக்கும் இடத்தில் முத்தரும் ஆறுமுகத்தாரும் தயாராக நிற்பார்கள். கட்டுக்களை ஒருவர் தூக்கி விட, ஏனையவர்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கில் போடுவார்கள். முத்தரும் ஆறுமுகத்தாரும் நெற்கதிர்களால் சூட்டின் அடி தளத்தை வட்ட வடிவமாக வைப்பார்கள். நெற்கதிர்களின் கதிர்கள் உள்ள பக்கம் உள்ளேயும் அடிப் பக்கம் வெளியேயும் இருக்குமாறு, நெற்கதிர்களை அடுக்க அடுக்க சூடு உயர்ந்து கொண்டு போகும்.

மெலிந்த தோற்றமுடைய முத்தர் இப்போது மேலே ஏறி நின்று அடுக்குவார். உயரம் பெருப்பமான ஆறுமுகத்தார் கீழே நின்று கட்டுகளை அவிழ்த்து நெற்கதிர்களை மேலே எறிவார். சூடு வட்ட வடிவமாகவும், மேலே போகப் போக குறுகியும் சரியான படி வருகிறதா என்று பார்ப்பதும் ஆறுமுகத்தாரின் கடமை. முத்தர் வைக்க வைக்க ஆறுமுகத்தார் கீழே நின்று ஒரு கை பிடி உள்ள பலகையினால் தட்டி தட்டி அதை சரிப் படுத்துவார். எங்கே கூடுதலாக வெளித்தள்ளுகிறது, எங்கே உள்வாங்குகின்றது என்பதையும் அவ்வப்போது முத்தருக்கு சொல்லி சரியாக வைக்க செய்வதும் ஆறுமுகத்தாரின் பொறுப்பு.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து சூடு வைப்பதன் மூலம் மழை நீர் உள்ளே நுழையாது செய்யலாம். சிறிது நெற்கதிர்களை அடித்து வைக்கல் பெற்றார்கள். வைக்கலை முறுக்கி கயிறு போல திரித்தார்கள். இவ்வாறு இரண்டு வைக்கல் புரிகள் செய்தார்கள். ஆறுமுகத்தார் சூட்டின் அடியில் கையால் துளைத்து ,அதற்குள் வைக்கல் புரியின் ஒரு பக்கத்தை நன்கு செருகி விட்டு, மற்ற முனையை முத்தரிடம் எறிந்தார். முத்தர் வைக்கல் புரியினை சூட்டின் முடியினூடாக இறுக்கி மறுபக்கம் எறிந்தார். ஆறுமுகத்தார் அதைப் பிடித்து மறு பக்கம் செருகி விட்டார். இவ்வாறு மற்ற வைக்கல் புரியை குறுக்காகவும் கட்டினார்கள். இவ்வாறு கட்டுவதால் சூடு சரியாமல் இருக்கும். இது வரை முத்தரும் ஆறுமுகத்தாரும் இணைந்து வைத்த சூடுகள் எதுவும் பிழைத்ததில்லை.

நெல்கதிர் கட்டுகளை போட்ட படங்கில் இரண்டு அல்லது மூன்று புசல் நெல்மணிகள் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

விசாலாட்சியும் மற்ற பெண்களும் சற்று தூரத்தில் நின்று அவதானித்தார்கள். நெற் கதிர்களை கட்டி தலையில் சுமந்து ஆண்கள் வரிசையாக வருவது இவர்களைப் பொறுத்தவரை புதுமையானது. இவர்கள் இப்படி பெரிய நெற் செய்கையை முன்பு கண்டதில்லை. பெரிய பெரிய கட்டுகளை எப்படித் தான் சுமக்கிறார்களோ என்று தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள்.

கட்டாக கட்டும் போது நெற்கதிர்கள் தவறி விடுதல் சாதாரணமானது. கணபதியும் நண்பர்களும் ஓடி ஓடி அப்படி தவறிய கதிர்களைப் பொறுக்கி கட்டுபவரிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கும் சிறிய காட்டுகளாக கட்டி சுமக்க விருப்பம். பிஞ்சு கழுத்துகள் நொந்து விடும், அதனால் பிற்காலத்தில் வருத்தங்கள் வரும் என்று சொல்லி பெரியவர்கள் அனுமதிக்கவில்லை.

எல்லோருடைய வயல்களிலும் நெற்கதிர்கள் வெட்டி, சூடு வைத்த பின்னர் சூடு அடிக்க தொடங்குவார்கள். ஒவ்வொருவரின் சூடுகளையும் கூட்டாகவே அடித்தார்கள்.

சூடு வைத்த இடமே சூடு அடிக்கும் ‘களம்’ ஆக இருக்கும். ‘களத்தில்’ முதலில் ‘களமரத்தை’ நடுவார்கள். ‘களமரம்’ உயரமாக உருளையானதாகவும் அதன் மேல் முனை கூரானதாகவும் இருக்கும். ‘களமரத்தை’ சுற்றி வட்ட வடிவில் படங்குகளை அடுக்கினார்கள். பின் ‘சூட்டை’ விழுத்தி ‘களமரத்தை’ சுற்றி மலை போல குவித்தார்கள்.

நன்கு பழகிய பெண் எருமையை ‘களமரத்தில்’ கட்டினார்கள்.  அவ்வாறு கட்டும் போது பெண் எருமையை கட்டிய கயிறு சுழலக்கூடியவாறு கட்டினார்கள். பின்பு பல ஆண் எருமைகளை ஒன்றின் அருகே மற்றது வரும்படி பிணைத்தார்கள். பெண் எருமை சுற்ற தொடங்க, எல்லா ஆண் எருமைகளும் சேர்ந்து சுற்றுவினம். ஒரு கடிகாரத்தில் நிமிடம் காட்டும் கம்பி சுற்றுவது போல எருமைகள் எல்லாம் ஒன்றாக சுற்றுவினம். சிறுவர்கள் எருமைகளின் பின்னாலே நின்று கலைத்தார்கள். சிறுவர்கள் களைத்த பின் அல்லது நித்திரையான பின் பெரியவர்கள் மாறி மாறி எருமைகளை பின்னால் நின்று கலைத்தார்கள்.

பெண் எருமைகளை பெரிய பரந்தன் மக்கள் உழுவதற்கு பயன் படுத்துவதில்லை. ‘சூடு’ அடிக்கும் போது மட்டும் மற்ற எருமைகளுக்கு வழிகாட்ட ஒரு பெண் எருமையை பயன்படுத்தினார்கள். எருமைகள் பல முறை சுற்றிவரும் போது அவற்றின் காலடியில் மிதிபட்டு நெல்மணிகள் வைக்கலை விட்டு பிரிந்தன.

எருமைகள் அடிக்கடி சாணாகம் போடுவினம். சிறுவர்கள் சாணாகம் வைக்கல் மேல் விழுந்து விடாது பக்குவமாக ஓடி ஓடி ஒரு சிறிய ‘கடகத்தில்’ ஏந்தினார்கள். வழமையாக மாலை நேரத்தில் தான் சூடு தள்ளுவார்கள். இரவு இரவாக சூடு அடிபடும். வைக்கல் சுணையானது, அதனால் பகலில் சூடு அடிக்கும் போது மனிதர்களின் மேலில் கடி உண்டாகும். ‘பறங்கி’ வியாபாரிகளிடம் வாங்கிய ‘இலாந்தர் ‘ (lamps) விளக்குகளை கொளுத்தி வெளிச்சம் வரும்படி நான்கு மூலைகளிலும் நட்டிருந்த தடிகளில் கட்டி விட்டார்கள். முற்காலத்தில் ‘சூள்’ அல்லது ‘பந்தம்’ கொழுத்தி இருக்க கூடும்.

பல இடங்களிலும் பார்வையிட்டு, எல்லா இடங்களிலும் நெல்மணிகள் வைக்கலை விட்டு நீங்கியதை உறுதி செய்த பின்னர் வைக்கலை உதறி உதறி தனியாக பிரித்து வெளியே நாற்புறமும் போட்டார்கள். வைக்கல் முழுவதையும் பிரித்து எடுத்த பின்னர், நெல் மணிகள் மேல் இருந்த கூழங்களை பொறுக்கி எடுத்தார்கள். பின்னர் நெல்மணிகளை ஒன்றாக குவித்தார்கள். தேவையற்ற படங்குகளை மடித்து ஒரு பக்கத்தில் அடுக்கினார்கள். சற்று ஓய்வு எடுத்தார்கள்.

பெண்கள் தேனீர் கொண்டு வந்து ‘களத்தின்’ வெளியே நின்று கொடுத்து விட்டார்கள். இரவில் பல முறை தேனீர் கிடைக்கும். காலை நேரத்தில் எல்லோருக்கும் பச்சை அரிசி பொங்கலும் சம்பலும் வழங்கப்படும்.

நெல்லை சப்பி நெல், சிறு கூழங்கள், கஞ்சல்கள் நீங்க தூற்றுதல் வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் நால்வர், காற்று வீசும் திசை பார்த்து வரிசையாக நின்று தூற்ற, ஏனையவர்கள் ‘குல்லங்களில்’ அள்ளி அள்ளி கொண்டு வரிசையில் நின்று கொடுத்தார்கள். ‘சுளகு’ களை களத்தில் ‘குல்லம்’ என்றே அழைத்தனர். 

தூற்றுதல் முடிய ‘நெல்மணிகளை’ ‘கடகங்களில்’ இட்டு தலையில் வைத்து அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். வீட்டில் ஒரு தனி அறையில் இரண்டு மூன்று ‘கோற்காலிகளின்’ மேல் படங்கினால் தைத்த பெரிய பைகள், ஈச்சம் தடிகளினால் பின்னிய பின் களிமண், சாணகம் கலந்து மெழுகிய கூடைகள் இருக்கும். அவற்றில் நெல்மணிகளை கொட்டி நிரப்பினார்கள். வரிசையாக ‘கடகங்களில்’ நெல் கொண்டுவரும் போது கமக்காரனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருக்கும். நான்கு மாத உழைப்பின் பலன் அல்லவா?

நான்கு கால்களில் மேல் நான்கு மரச்சட்டங்களை அடித்து இடை நடுவே வேறொரு சட்டத்தை அடித்து ‘கோற்காலிகள்’ அமைப்பார்கள். கீழே இடைவெளிகள் இருக்கும். எலிகளும் அவற்றை பிடிக்க வரும் ‘நாகம்’, ‘சாரை’ இனப் பாம்புகளையும் கண்டு விரட்ட கோற்காலியின் கீழ் உள்ள இடைவெளி பயன்படும்.

எஞ்சிய நெல்மணிகளை சாக்குகளில் போட்டு வண்டில்களில் ஏற்றி வந்து அடுக்கினார்கள். அரை வயிறன்களை அள்ளி வந்து கோழிகளுக்காக சேமித்துக் வைத்தார்கள். வைக்கலை சூடாக குவித்து வைப்பார்கள். புற்கள் குறைந்த காலத்தில் எருதுகளுக்கும் பசுக்களுக்கும் உணவு அதுவே.

எல்லோருக்கும் சூடுகள் அடித்து முடிந்ததும் ஒவ்வொரு கமக்காரனும் அரிவி வெட்டி, சூடு அடிக்க வந்தவர்களுக்கு நெல்மணிகளை அளந்து வழங்கினார்கள். நான்கு பக்கத்திலும் அடியிலும் பலகைகளால் ஆன ‘புசல்களால்’ நெல் அளக்கப்பட்டது. பூனகரியிலிருந்து வந்தோர் தமது வண்டில்களில் நெல் மூட்டைகளை ஏற்றி விட்டு, எல்லோரிடமும் பிரியாவிடை கூறிவிட்டு, வண்டில்களின் பின்னால் நடந்து சென்றனர்.

அவர்கள் புறப்படும்போது கணபதியும் நண்பர்களும் கண்கள் கலங்கி அழுதார்கள். முப்பது, நாற்பது நாட்கள் கூட இருந்து பழகியவர்கள் அல்லவா? சூடு அடிக்கும் களத்தில் ‘நொடிகள்’ போட்டு அவிழ்த்தவர்கள், தாங்கள் அனுபவப்பட்ட ‘பேய்’ க் கதைகளை கூறி பயம் கொள்ள செய்தவர்கள், அரிவி வெட்டும் நாட்களில் சேர்ந்து தாயம் விளையாடியவர்கள் பிரிந்து போகும் போது சிறுவர்கள் கவலை கொள்வது இயல்பு தானே?

செருக்கனில் இருந்து வந்தோர், நெல்மணிகளை அளந்து வைத்து விட்டு தமது ஊர் சென்று வண்டில்கள் கொண்டு வந்து ஏற்றி சென்றனர். மீசாலையால் வந்தவர்களின் நெல் மூட்டைகளை பெரிய பரந்தன் மக்கள் தமது வண்டில்களில் ஏற்றிச் சென்று, சுட்டதீவு துறையில் தோணிகளில் ஏற்றிவிட்டு வந்தனர். அப்போது சிறுவர்களும் வண்டில்களில் ஏறிச்சென்று தோணி புறப்பட்டதும் கைகளை காட்டி வழியனுப்பி விட்டு வந்தனர். பெரியவர்களுக்கு ஒரு போக நெற் செய்கை நன்கு நடைபெற்றது மகிழ்ச்சியைத் தர, சிறுவர்களுக்கு பிரிந்து போனவர்களை நினைத்து சிறிது நாட்களுக்கு மனக் கவலை இருந்தது.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More