புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை உலகில் அழிக்கப்பட்ட நூலகங்களும் நெருப்பினில் கருகிய யாழ் நூலகமும்  | ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகில் அழிக்கப்பட்ட நூலகங்களும் நெருப்பினில் கருகிய யாழ் நூலகமும்  | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

 

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ். நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகி விட்டிருக்கிறது.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைப் போன்றே உலக வரலாற்றில் பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் யுத்தங்கள் எவ்வகையான கொடுமைகளைக் கொண்டிருந்த போதும் அறிவு மையங்களின் அழிவு என்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். இதனையே ஐ.நாவின் போர் விதிகளும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன.

ஆயினும் போர்க்களங்களில் உண்மை முதலாவது பலியாவது போல, எதிர்கால சந்ததியின் அறிவியல் வளத்தை அழிக்க எதிரிகள் முனைவர். ஒரு நூலகத்தின் அழிவானது மனிதகுல வளர்ச்சியை சில நூற்றாண்டுகளுக்கே பின்தள்ளி விடும் அபாயங் கொண்டவையாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கான பேரறிவுப் பெட்டகங்கள் அறிவியல நூலகங்களிலேயே பேணப்படுகின்றன. இதனாலேயே எதிரிகள் எப்போதும் நூலகங்களை அழிப்பதில் முனைப்பாயிருந்ததை வரலாற்று ரீதியாக நாம் காணலாம்.

ஆறு மாதங்கள் எரிந்த அலெக்ஸாண்டிரியா :

அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகம் (library of Alexandria) பல கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களை உருவாக்கிய நகரமாக மிளிர்ந்து அலெக்ஸாண்டிரியாவின் நற்பெயர் வளர்ந்தது. உலக வரலாற்றின் ஆரம்பத்தில் இந்த நூலகத்தில் இருந்த அறிஞர்களிடமிருந்து பல முக்கியமான படைப்புகள் வெளிவந்தன.

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்நூலகம் வரலாற்றில் மனித அறிவின் மிகப்பெரிய களஞ்சியமாக இருந்தது. இன்று உலக அறிஞர்கள் பயன்படுத்தும் பல கிரேக்க, ரோமானிய படைப்புகள் மற்றும் நூல்கள் அலெக்ஸாண்டிரியாவில் உருவாகின.
1,000 ஆண்டுகால வரலாற்றில், நூலகம் பலமுறை எரிக்கப்பட்டது. கிபி 640 இல் அலெக்ஸாண்டிரியா முஸ்லீம் ஆட்சியின் கீழ் வந்தபோது மீண்டும் எரிக்கப்பட்டது. முஸ்லீம் ஆட்சியாளர் கலிஃப் உமர், இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான, அல்லது
மிதமிஞ்சிய நூல்கள் என்று வலியுறுத்தி பல நூல்கள் எரிக்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் அனைத்து பொருட்களும் எரிவதற்கு ஆறு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. தற்போதய நவீன அலெக்ஸாண்டிரியா ஒரு பரபரப்பான பெருநகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
அத்துடன் கடந்த 2,000 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு சின்னங்களை பராமரித்து வருகிறது. அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் அழிவு, பண்டைய நாகரிக அழிவை வெளிப்படுத்துகிறது.

துருக்கி படையெடுப்பால் அழிந்த இந்திய நாலந்தா நூலகம்:

நாலந்தா (Nalanda university library) இந்தியாவின் இரண்டாவது பழமையான பல்கலைக் கழகமாகும். 14 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த பல்கலைக் கழகம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1193 வரை, திபெத், சீனா, கிரேக்கம் மற்றும் ஈரான் போன்ற நாட்டு மாணவர்களின் முதன்மையான கற்றல் இடமாக இருந்தது.

ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் பல்கலைக்கழக கல்வியை ஆதரித்து, நாலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவ வழிவகுத்தனர். நாலந்தா உட்பட பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் வேதக் கற்றலின் மிகவும் முறைப்படுத்தப்பட்ட முறைகளைப் பின்பற்றின.

அக்காலத்திலேயே உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் மேற்படிப்புக்காக இங்கு சேர்ந்து கல்வி கற்றனர். நாலந்தா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களை கட்டுவதற்கு வெளிநாட்டு மன்னர்கள் நன்கொடை அளித்ததற்கான சான்றுகள் பலவும் உள்ளன.

இந்தோனேசியாவின் ஷைலேந்திர மன்னன் ஒரு கட்டிடத்தை வளாகத்திற்குள் கட்டியதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. நாலந்தா பல்கலைக்கழகம் ஒரு குடியிருப்புக் கற்றல் இடமாக இருந்தது. இந்த வளாகத்தில் பத்து கோயில்கள், வகுப்பறைகள், தியான மண்டபங்கள், மடங்கள், தங்குமிடங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என வளாகம் எங்கும் பரவி இருந்தது. இப்பல்கலைக்கழகம் 10,000 மாணவர்கள் மற்றும் 2,000 ஆசிரியர்களுக்கு இடமளித்தது.

கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த யாத்ரீக துறவிகள் மற்றும் பிற வரலாற்றாசிரியர்களின் தரவுகளின்படி, நாலந்தா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மகாயான பௌத்தம், வேதங்கள், தர்க்கம், சமஸ்கிருத இலக்கணம், மருத்துவம் ஆகிய
துறைகளில் பல பாடங்கள் போதிக்கப்பட்டன.

இவ்வாறு சிறந்து விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகத்தினை, 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் கீழ் துருக்கிய படையெடுப்பாளர்களால் முழுமையாக சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. அத்துடன் நாலந்தா பல்கலைக்கழகத்தின் பெரிய நூலகம் அழிக்கப்பட்டது
அந்நூலகத்தில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய திபெத்திய ஆதாரங்களின்படி, நாலந்தா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் மூன்று பெரிய பல மாடி கட்டிடங்களில் இருந்தது. இந்தக் கட்டிடங்களில் ஒன்று ஒன்பது மாடிகளைக் கொண்டிருந்தது என தரவுகள் தெரிவித்தன.

நாலந்தா பல்கலைக்கழக நூலகத்தில் மிகவும் புனிதமான கையெழுத்துப் பிரதிகள் பலவும் இருந்தன. ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடங்களுக்கு தீ வைத்த பிறகு நூலகம் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்தது எனவும் கூறப்படுகிறது.

துருக்கிப் படையெடுப்பாளர்கள் பல ஆலய மடங்களைச் சூறையாடி அழித்து, துறவிகளை அந்த இடத்திலிருந்து விரட்டினர் எனவும் வரலாற்றுத் தரவுகள் தெரிவித்தன.

நாஜிகளால் புத்தக எரிப்பு பிரச்சாரம்:

இரண்டாம் உலகப் போரில் போலந்து , ஆஸ்திரியா போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நாஜிகளால் நூலகங்கள், புத்தகங்கள் பலவும் எரிக்கப்பட்டன.

நாஜி புத்தக எரிப்பினை கலாச்சார படுகொலை என்றே கருதலாம். ஜெர்மன் மாணவர் சங்கத்தால் (Deutsche Studentenschaft, DST) 1930 களில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் புத்தகங்களை சம்பிரதாயமாக எரிக்கும் பல நிகழ்வுகள் நடந்தன. நாசிசத்திற்கு எதிரான சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது அல்லது நாசிசத்திற்கு எதிரானது என்று கருதப்பட்ட இலக்கான புத்தகங்கள் பலவும் எரிக்கப்பட்டன. யூதர்கள், கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள், எழுதிய புத்தகங்கள் இதில் அடங்கும்.

எரிக்கப்பட்ட புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் மற்றும் கார்ல் காட்ஸ்கியின் புத்தகங்கள், ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹெலன் கெல்லர், பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் எழுத்தாளர்கள் மற்றும் நாஜி சித்தாந்தத்துடன் பொருந்தாத அனைத்து புத்தகங்களும் எரிக்கப்பட்டன.

ஏப்ரல் 8, 1933 இல், ஜெர்மன் மாணவர் சங்கத்தின் (DST) பத்திரிகை மற்றும் பிரச்சாரத்திற்கான முதன்மை அலுவலகம் நாடு தழுவிய இலக்கிய சுத்திகரிப்பு இயக்கத்தை (“Säuberung” ) நெருப்பாய் அமுல்படுத்தியது.

தூய்மையான தேசிய மொழி, ஜெர்மன் கலாச்சாரம், இலக்கியத்தை சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பல்கலைக் கழகங்கள் ஜெர்மன் தேசியவாதத்தின் மையங்களாக இருக்க வேண்டும் என்று கோரி வேற்று மொழி புத்தகங்கள் பல்லாயிரம் எரிக்கப்பட்டன.

அக்காலத்தில் ஜேர்மனிய நூலகத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வுத் தொகுதிகள் இருந்தன. ஆராய்ச்சி, சுயசரிதைகள் மற்றும் நோயாளியின் பதிவுகள் உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் கணிசமான சேகரிப்பையும் இந்த நிறுவனம் கொண்டிருந்தது.
25,000 க்கும் மேற்பட்ட ஜெர்மன் எதுர்ப்பு புத்தகங்கள் இவ்வாறு எரிக்கப்பட்டன.

லெபனான் திரிபோலி நூலக எரிப்பு:

லெபனானின் மிகப் பெரிய நூலகமான திரிபோலியின் (Burning library in Tripoli) வரலாற்றுச் சிறப்புமிக்க அல் சயே நூலகம் 2014 ஜனவரி 4 அன்று எரிக்கப்பட்டது. அங்கிருந்த
80,000 புத்தகங்கள் மத்திய கிழக்கில் வன்முறையின் உச்சக்கட்டம் அதிகரித்த காலத்தில் எரிந்தது.

லெபனானில், நூலகத்தின் தீவைப்பு மதத் தீவிரவாதத்தின் விளைவாகும் என்று நம்பப்படுகிறது. இப்பிராந்தியத்தில் நூலகங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களின் அழிப்பும் இழப்பும் அதிகரிக்கிறது.

2011 ஆம் ஆண்டில், கெய்ரோவில் எதிர்ப்பாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே நடந்த சண்டைகள் எகிப்தின் பெரிய நூலகங்களில் ஒன்றான எகிப்து கல்வி நிலைய நூலகமும் ( Institute Of Egypt) டிசம்பர் 18, 2011 அன்று,
தீப்பிடித்தது.

அரச எதிர்ப்பாளர்கள் நூலகத்திற்குள் நெருப்பை வீசியதாக அரசாங்கம் கூறியது. ஆயினும் போராட்டக்காரர்கள் இராணுவத்தின் மீது குற்றம் சாட்டினர். இறுதியில் பன்னிரண்டு மணி நேரம் எரிந்து அரிய புத்தகங்களை கரியாக மாறியது. எகிப்தின் ஒரு தேசிய புதையலான பாரிய நூலகம் இவ்வாறை அழிக்கப்பட்டது. அதேவேளை ஐஎஸ்ஐஎஸ் எனும் இஸ்லாமிய தீவீரவாத இயக்கம் ஈராக், சிரியாவில் பல நூலகங்களையும் கல்வி நிலையங்களையும் கடந்த 2014-16 காலங்களில் பெருமளவில் அழித்தது.

எரிக்கப்பட்ட ஹாட்லி கல்லூரி நூலகம்:

இலங்கையில் இனவெறித்தனத்தை வெளிப்படுத்திய மற்றுமொரு நூலக அழிப்பின் அடையாளமாக இருப்பது, முற்றாக எரியூட்டப்பட்டஹாட்லிக் கல்லூரி நூலகம் நிகழ்வாகும்.

1984 செப்ரெம்பர் 16ம் திகதி தமிழரது அறிவின் மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்த பேரினவாதம் ஹாட்லிக் கல்லூரி கட்டிடங்களுக்குத் தீ மூட்டியது. அவர்களது பிரதான இலக்கு நூலகமாகவே இருந்தது. இத் தீ மூட்டலையடுத்து ஆயிரக்கணக்கான நூல்கள் எரியுண்டதுடன் பழமை வாய்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மீளப் பெறமுடியாத ஆவணங்கள் பலவும் எரிந்து போயிருந்தன. அவற்றுடன் பெறுமதியான அறிவியல் ஆய்வு கூடக் கருவிகளும் அழிந்து போயின. இன்னும் பல நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் போர்க் காலத்தில் ஈழத்தில் அழிக்கப்பட்டன.

கிளிநொச்சி நூலகம் பல்லாயிரம் நூல்களை இழந்தது.

2009 இல் வன்னிப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது சிறியதும் பெரியதுமான பல நூலகங்கள் அழிவுற்றிருந்தன. அவற்றில் பேரழிவைச் சந்தித்தது கிளிநொச்சி பொதுசன நூலகமே. இந்நூலகம் இந்த யுத்தத்தின் போது பலவாயிரம் நூல்களை இழந்தது.

யாழ் நூலகம் தீக்கிரை:

தமிழ் மக்களின் அரிய சொத்தாக யாழ் நூலகம் விளங்கியது. தமிழ் வாசகர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் நாடிச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக அது அமைந்தது. தமிழ் மக்களின் தேசிய மேம்பாட்டின் அடையாளமாகவே யாழ் நூலகம் விளங்கியது.

தமிழர்மேல் எழுந்த ஆத்திரம், பகைமை, எரிச்சல் அவர்களுடைய சொந்த நூலகத்தின் மேலே அரச பயங்கரவாதத்தால் இந்நூலகம் 1981 ஜூன் 1இல் தீக்கிரையானது. இவ்வாறான பண்பாட்டு மையங்களை அழித்து இன்னோர் இனத்தின் எரிச்சலுக்கும் பகைமைக்கும் கொடுமைக்கும் காலாயுள்ள கருத்தோட்டங்களைப் பேரினவாதத்தின் உச்சக்கட்டம் என்றே குறிப்பிடுவர்.

பெரும்பான்மையான ஓர்இனம் சிறுபான்மையினரை ஒடுக்கும் சிறுமையை நோக்கிய அவமானச் செயலாக இந்நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. தென்னாசியாவிலேயே அதிக நூல்களைக் கொண்ட சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள், சுவடிகளைக் கொண்ட அழகிய நூல்நிலையம் சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட இச்சம்பவம் தமிழ்இன அழிப்பு என்ற சிங்கள இனவாதிகளின் மன எண்ணத்தை உலகிற்கே வெளிப்படுத்தியது எனலாம்.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More