Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை ஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல! தீபச்செல்வன்

ஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல! தீபச்செல்வன்

4 minutes read

ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு வெடிகுண்டைப் போல மீட்டெடுத்தனர் இராணுவத்தினர். அப் புத்தகத்தில் இருந்த ஈழம் என்ற சொல்லைக் கண்டே அவர்கள் பீதியுற்றனர். அந்தக் காலத்தில் தமிழீழம் என்ற சொல்லுடன் ஈழம் என்ற சொல்லும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியிலும் புழக்கத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் மாத்திரமல்ல இன்றும் ஈழம் என்ற பெயர் மாத்திரமல்ல தமிழ் என்ற பெயரும்கூட சிங்கள தேசத்திற்கு ஒவ்வாமையாகத்தான் இருக்கின்றது.

போருக்குப் பிறகு, சமீபத்திய சில ஆண்டுகளின் முன்னர் கிளிநொச்சியில் உலக உருண்டையில் திருவள்ளுவரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதில் உலகின் நாடுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. அதில் சில நாடுகளின் பூர்வீகப் பெயர்களும் எழுதப்பட்டன. இலங்கையின் பெயர் எழுதப்பட்டு அடைப்புக்குறிக்குள் ஈழம் என்று எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பிற்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டதேவொழிய வடக்கு கிழக்குப் பகுதிக்கு அப்பெயரிடப்படவில்லை. அந்தத் திருவள்ளுவர் சிலைமீது எழுதப்பட்ட ஈழம் என்ற சொல் இரவோடு இரவாக கறி பூசி அழிக்கப்பட்டது. இனந்தெரியாத மர்ம நபரிகளினால் அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அத்துடன் அழிக்கப்பட்ட இடத்தில் தமிழை எழுதத் தெரியாத கைகளினால் சிறிலங்கா என்று எழுதப்பட்டும் இருந்தது.

அத்துடன் அந்த சிலையை அமைப்பித்த கிளிநொச்சி தமிழ் சங்க தலைவர் இறைபிள்ளைக்கு எதிராக விசாரணையும் நடாத்தப்பட்டது. பின்னதாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே இன்னொரு சம்பவமும் மிகச் சமீபத்தில் நடந்திருக்கிறது. பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் இணையத்தளம் தன்னுடைய புதிர் போட்டி ஒன்றில், தீவுகள் குறித்தவொரு கேள்வியில், ஈழம் என்பது எந்தப் பிரபலமான தீவின் பூர்வீகப் பெயர்? என்றவொரு கேள்வியை வாசகர்களிடையே எழுப்பியிருந்தது. இதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததும் யாவரும் அறிந்த விசயம்தான்.

இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், ‘இந்தத் தீவின் அண்மைய கிளர்ச்சி அமைப்பின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. – தமிழீழ விடுதலைப் புலிகள்’ எனும் மேலதிக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறும் மன்னிப்புக் கோருமாறும் பிரித்தானியாவிற்காக இலங்கை தூதரகம் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியது.

இராணுவ மட்டத்திலிருந்து, உயர் இராஜதந்திர மட்டங்கள் வரையும் ஈழம் என்ற சொல்லானது பெரும் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழ் மக்களை ஈழத் தமிழர் என்று அழைக்காதே சிறீலங்கன் என்று அழை என நிர்பந்திகின்ற செயலுக்கு இது ஒப்பானது. ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு, வரலாறு, அடையாளங்கள் என்பன மிகப் பழமையான பண்பாட்டை கொண்டவை. அதில் ஒன்றே ஈழத்தவர் என்ற பெயரும். சிங்களத்திற்கு மிக மிக முற்பட்ட ஈழத்தை எவரலாலும் இல்லாமல் செய்ய இயலாது.

ஈழம் என்பது இன்று நேற்று தோன்றிய பெயரல்ல. அதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு இருக்கின்றது. பண்டைய காலத்தில் இருந்தே இலங்கைத் தீவு ஈழம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பழைமையான பாடப் புத்தகங்களில் அரிச்சுவடிகளில்கூட ஈ என்ற எழுத்துக்கு ஈழம் என்ற சொல்லே அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழ் பாடப் புத்தகங்கள் அனைத்திலும் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதைவிட ஸ்ரீலங்கா தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஈழசிரோமணி என இத் தீவு அழைக்கப்பட்டுள்ளது.

ஈழம் என்பது இலங்கைக்கு வழங்கப்பட்ட மறுபெயர். இலங்கையில் பூர்வீகக் குடிகளாக ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஆதாரபூர்வமான விடயம். தமிழும் சைவமும் தழைத்தோங்கிய நிலமாகவும் அது ஈழம் என்றும் அழைக்கப்படுவதற்கு ஏராளம் சான்றுகள் உண்டு. இலங்கையின் பிற இன மக்கள் வெவ்வேறு கால கட்டத்தில் இத் தீவில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயனின் வருகை சிங்களவர்களின் வருகையாகவும் சங்கமித்திரையின் வருகை பௌதத்த்தின் வருகையாகவும் கருதப்படுகிறது.

ஆனால் ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் இங்கே தமிழும் சைவமும் நிலவியமைக்கு பெரும் சான்றுகள். அவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்றைக் கொண்டவை. கி.மு 2ஆம் நூற்றாண்டில் ஈழ என அழைக்கப்பட்ட தொல்லியல் சான்று வன்னி மண்ணில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப்போல வடக்கு கிழக்கிற்கு வெளியில் ஈழ நாகன் என்ற மன்னன் அனுராதபுரத்தை  கி.பி முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளான். ஈழத்திற்கு வெளியில் தமிழகத்தின் சங்ககாலத்தில் எழுந்த பட்டினப்பாலை என்ற நூல் இத் தீவை ஈழம் என்றே அழைத்திருக்கிறது. அதில் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் எனச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலக்கியங்களில் மாத்திரமின்றி இன்றுவரையில் பேச்சிலும் ஈழம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் காலம் தோறும் எழுந்த இலக்கியங்கள் பலவும் ஈழம் என அழைத்து வந்திருக்கிறது. அதேபோன்று சோழர்களின் ஆட்சியில் ‘ஈழ மும்முடிச்சோழ மண்டலம்’ என இலங்கைத் தீவு அழைக்கப்பட்டு வந்துள்ளது. சங்க காலத்தில் மாத்திரமின்றி, பல்லவர் கால பக்தி இலக்கியங்களிலும் ஈழத்தின் வரலாற்று தொன்மை பாடப்பட்டிருக்கிறது. பின் வந்த காலத்தில் திருமூலர் ஈழத்தை சிவபூமி என அழைக்கிறார்.

பிரித்தானியர் கால ஆவணங்களிலும் அக்காலத்தில் எழுந்த பத்திரிகை மற்றும் நூல்களிலும் ஈழம் என்றே சொல்லே தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு ஆட்சிப் பிரிவுகளாக காணப்பட்ட இலங்கை அந்நிய ஆட்சிலேயே ஒருங்கிணணைக்கப்பட்டது. ஒரு நாடாக்கப்பட்டது. அதற்கு முன்னர் வெவ்வேறு ஆட்சிகள் வெவ்வேறு தேசங்களாக காணப்பட்டுள்ளன. ஈழம் தமிழ் மன்னர்களாலும் ஆழப்பட்ட தீவு என்பதற்கு எல்லாள மன்னன் போன்றவர்கள் மிகச் சிறந்த வரலாற்று சாட்சியர்கள் ஆவர்.

இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ஈழம் எனக் காணப்பட்டமைக்கு மிக நீண்ட பட்டியல்கள் அல்லது சான்றுகளை சமர்பிக்க முடியும். ஆனால் இப்போது இப் பத்தி வலியுறுத்த விரும்புவது, இச் சான்றுகளின் அடிப்படையில் ஈழம் என அழைக்கும் பழக்கத்தை நாம் ஒரு மரபாக்க வேண்டியுள்ளது. நாங்கள் நிறையவே ஈழம் எனச் செயற்பட்டுக் கொண்டாலும் சாதாரணமாக பேசும்போது இலங்கை அல்லது ஸ்ரீலங்கா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் பேச்சிலும் எழுத்திலும் இலங்கை என்பதற்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லை நாம் பயன்படுத்துவது காலத் தேவை. ஈழம் என்ந சொல்லை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ஒரு போராட்டமாக அது அமையும்.

இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் அறிவுஜீவிகளாக வேடமிடும் இனவாதிகளும்கூட ஈழம் என்ற சொல்லை வரலாற்றிலிருந்து துடைக்கும் முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகின்றனர். இதனால் நாம் ஈழம் என்ற சொல்லை எழுத்திலும் வாழ்விலும் விதைக்க வேண்டும். மாணவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் இலங்கை அல்லது ஸ்ரீலங்கா என்ற சொல்லுக்குப் பதிலாக ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவது எமது இருப்பை பாதுகாக்கும்.

தமிழீழத்தை பிரிவினை என்பவர்கள், ஈழத்தை அப்பிடி சொல்ல முடியாது. சிலோன் அரசிற்கும் ஸ்ரீலங்கா அரசிற்கும் சில பத்து வருடங்கள்தான் வரலாறு இருக்கிறது. ஆனால் ஈழம் என்ற பெயருக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பழமை இருக்கிறது. இத் தீவிவை ஸ்ரீலங்கா என சிங்களத்தில் அழைக்கும் உரிமையை சிங்கள மக்களுக்கு மறுக்க முடியாதோ, அதே போன்றே ஈழம் என்று அழைக்கும் எம் பிறப்புரிமையை எவராலும் மறுக்க முடியாது.

கவிஞர் தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More