அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.
மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் அவசியம். அவர்கள் எம் மண்ணின் எதிர்காலத் தூண்கள், ஒரு சில மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய இத்தகைய அணுகுமுறைகள் ஒட்டுமொத்த கலவிச் சமூகத்தையும் தலைகுனிய வைக்கக்கூடியது ஆகும்.
போருக்குப் பிந்தைய இன்றைய சூழல் எஎன்பது, பல்வேறு ஆபதத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் பாவனை இளைய சமூகத்தை அழிக்கும் நோக்கில் புழங்கப்படுகின்றது. இதற்குப் பின்னால் ஆட்சியாளர்களும் இராணுவம் மற்றும் காவல்துறை இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
தமிழ் இனத்தையும் தமிழ் இன இளைய சமூகத்தையும் இலக்கு வைத்தே போதைப் பொருள் பாவனை பரப்பப்டுவதாக சொல்லப்படுகின்றது. இதனால் போரால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த சமூகம் மற்றொரு போருக்கு முகம் கொடுத்திருக்கின்றது.
இதனால் குறிப்பாக இளைய பிள்ளைகள் தமது பள்ளிப் படிப்பை கைவிட்டு போதைப் பொருளுக்கு அடிமையாகி அழிந்து வருகின்ற செய்திகள் பெரும் கவலையை தருகின்றன. அத்துடன் மிகவும் படித்த, உயர் அரச பதவிகளில் உள்ளவர்களின் பிள்ளைகள்கூட இதற்கு அடிமையாகியுள்ளனர்.
ஐஸ் என்ற ஆபத்தை விளைவிக்கும் போதைப் பொருள் பாவனை பாடசாலை மாணவர்களிடையே பரப்பப்டுவதாக கூறப்படுகின்றது. இது மிக விரைவாக மாணவர்களை அழித்து விடும் என்றும் மீள மிகவும் கடினமான இந்த பழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் பல தரப்பட்டவர்களும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சியில் கிளிநொச்சி சமூக அபிவிருத்திப் பேரவை என்ற அமைப்பு போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கின்றது. வடக்கின் முக்கியமான மருத்துவர்களை கொண்ட இந்த அமைப்பின் பிரசாரம் ஒரு முன்னூதாரணமான நடவடிக்கை ஆகும்.
இதுபோல சமூகத்தில் உள்ள அனைத்து உயர்மட்டங்களும் பல வழிகளிலும் போதைப் பொருளை ஒழிக்க தமது பங்களிப்பை வழங்க வேண்டும். போரால் அழிக்கப்பட்டு மீண்டு வருகின்ற சமூகத்தை மீளவும் அழிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு எதிராக நாம் கடுமையாக பணியாற்ற வேண்டியுள்ளமை குறித்து சிந்திப்போமாக…
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்