ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள்ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள்

தெய்வ வழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதியமுறையன்று. முழுமுதற் கடவுளான சிவபெருமானைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பெரிதும் காணப்படுவதால் அக்காலத்திற்கு முன்பே தெய்வ வழிபாடு இருந்ததென்பது தெளிவு, தமிழ்ச்சமுதாயம் சைவ, வைணவ சமயங்களோடு ஒன்றித் தெய்வ நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். மக்களால் செய்ய இயலாதச் செயல்கள் இயற்கையில் நிகழ்ந்து வருவதைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள் இந்நிகழ்ச்சிகள் எவற்றால் நிகழ்ந்தன என்று உறுதி செய்ய இயலாத காரணத்தால், அவை தெய்வத்தால் ஆகி இருக்கலாம் என்று நம்பினர். இந்நம்பிக்கையின் வாயிலாகத்தான் தெய்வ வழிபாட்டுமுறைகள் தோன்றிற்று எனலாம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், மக்கள் தாம் வாழ்கின்ற நிலைக்கும், சூழலுக்கும் ஏற்ற வகையில் தாங்கள் நினைத்தவாறு தெய்வங்களை வணங்கத் தலைப்பட்டனர். நாட்டுப்புறச் சமயம், மக்கள் வாழ்வியலோடு ஒன்றி வருவதால், நாட்டுப்புற மக்களின் வாழ்வில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. மனிதர்கள் உலகின் தோற்றம், தங்களுடைய பிறப்பு, வாழ்க்கைமுறை, இயற்கை தரும் சக்திகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இச்சிந்தனை தான் தெய்வ வழிபாட்டைத் தோற்றுவித்தது எனலாம். “திராவிடர் தம் தெய்வ வழிபாட்டைத் தோற்றுவித்தது எனலாம். ” திராவிடர் தம் தெய்வ வழிபாட்டியல்பு. முதன் முதலில் சிந்துவெளி நாகரிகத்தில் தென்படுகிறது. பழங்கற்காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்ததாகவும் அவற்றின் மொத்த உருவமே தாய்த் தெய்வ வழிபாடு” என்றும் கூறுவர்.1

ஊர்த்தெய்வங்களை, நீர் நிலைகளை அடுத்துக் காடுகளிலும் வைத்து வழிபட்டமை பழங்காலந்தொட்டே இருந்து வரும் பழக்கமாகும் இதனை,

“கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு

நீயே கானம் ஒழிய யானே”

என்ற வரிகளால் அறியலாம்.

பழங்காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு வெறியாட்டு மூலம் நடந்துள்ளது என்பதை,

“வெறிகொள் பாவையிற் பொலிந்த வென் அணிதுறந்து

ஆடுமகன் சோலப் பெயர்தல்

ஆற்றேன் தெய்வ, அயர் கவிவ் வூரே”

என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

பழங்காலத்தில் இருந்தே பெண் தெய்வ வழிபாடு, உலகின் பல இன மக்களிடையேயும் பரவலாக இருந்து வரும் ஒன்றாகும். பெண் தெய்வங்களைத் “தாய்த் தெய்வம்” எனத் தமிழிலக்கியங்கள் கூறுவதாலும் அறியலாம். பழந்தமிழரின் தெய்வம் “கொற்றவை” என வழங்கப்பட்டுள்ளது.

ஊர்மக்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிடுவது இல்லை. அவ்வாறு சில இடங்களில் காணப்பட்டாலும் அவற்றைக் காவல் தெய்வங்களுக்கே பலியிடுகிறார்கள். பெண் தெய்வ வழிபாட்டில் பூப்பலி செய்தல் நடைபெற்று வருகின்றது. பூப்பலி செய்யும்முறை பழந்தமிழிரிடையே காணப்பட்டது. இதனை,

“ஆர்கலி விழவுக் களம் கடுப்பநாளும்

விரவுப் பூம்பலியொடு விரைஇ அடனனை

கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி

முருகு என வேலன்தரூ உம்”

என்ற தொடர்களால் அறியலாம். பழந்தமிழரின் பழக்கத்தின் வழிவந்ததே தற்போது ஊர்த் தெய்வங்களுக்குப் பூமாலை போன்றவை செலுத்தி வழிபடும் முறை எனலாம்.

பழந்தமிழர்கள் விலங்கு, பறவை முதலியவற்றை ஊர்த் தெய்வங்களுக்குப் பலியிட்டமையைச் சங்க இலக்கியங்கள்,

“மலையுற கடவுட் குலமுதல் வழுத்தித்

தேம்பலச் செய்தவீர் நறுகையள்”5

“பொறிவரி இன வண்டு ஊதல் கழியும்

உயிர்ப் பலி பெறூஉம் உருகெழ் தெய்வம்”

எனக் கூறுவதால் அறியலாம்.

ஊர்த் தெய்வங்களை வழிபடுதலைக் கோயில் கும்பிடுதல் என்று கூறுவர். ஊர் மக்கள் விரும்பும்போது அவர்கள் வசதிக்கேற்ற மாதங்களில் ஏதாவது ஒரு கிழமையில் வழிபாடு நடத்துகின்றனர். கோயிலுக்குச் சென்று கும்பிடுவதற்குமுன் ஒருநாள் ஊர்ப் பெரியோர்கள் கோயிலின் அருகே ஒன்றுகூடி மழை பெய்யவில்லை. நோய்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அதனால் இந்த ஆண்டு கோயில் கும்பிட வேண்டும் என்று முடிவு செய்வர். அதன்பின் நாள் பார்த்துக் கோயிலுக்குச் சென்று சகுனம் பார்த்து அல்லது பூ கட்டிப் போட்டுப் பார்த்தல் வாயிலாகத் தெய்வத்திடம் உத்தரவு கேட்பர். விரும்பிய வண்ணம் கிடைத்தால் அந்த ஆண்டு கோயில் கும்பிடுதல் நடைபெறும். இல்லையென்றால் அந்த ஆண்டு கோயில் கும்பிடுதல் நடத்துவது இல்லை என்று முடிவு கட்டுவர்.

ஒவ்வோர் ஊரிலும் உள்ள தெய்வங்கள் அந்ததந்த ஊரின் ஊர்த் தெய்வங்களாகும். ஊர் மக்கள் அனைவரும் வணங்கும் தெய்வமாக அது விளங்குகிறது. குலதெய்வ வழிபாடே பிற்காலத்தில் ஊர்த் தெய்வ வழிபாடாக மாறியது. இதனை,

“குல தெய்வ வழிபாடு ஊர்த்தெய்வ வழிபாடாகவும், பிறகு பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாகவும் பரவிச் செல்வாக்குப் பெறுவது உண்டு”

என்பார். கூற்றால் அறியலாம். ஒவ்வோர் ஊரிலும் பல தெய்வங்கள் காணப்பட்டாலும் ஒரு தெய்வமே அவ்வூரின் சிறப்புத் தெய்வமாக விளங்கும். அம்மனைத்தான் மிகுதியாகக் கிராமங்களில் ஊர்த்தெய்வமாக வழிபடுகின்றனர்.

வழிபாட்டுமுறை

சிறு தெய்வ வழிபாட்டு முறையில் விதிமுறை வகுத்து வழிபாடு நடத்தப்படுவதில்லை. அவர்களின் முன்னோர் செய்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இதனை,

“சிறு தெய்வ வழிபாடு திட்டவட்டமான வரையறை இல்லாதது.”

என்பார் கூற்றால் அறியலாம்.

இவ்வழிப்பாட்டு முறைகள் மரபாகப் பின்பற்றப்படுவதை,

“நாட்டுப்புறத் தெய்வ வழிபாடெல்லாம் முன்னோர் வழிபட்ட வழியே நடைபெறுகின்றது.”9

என்பார் கூற்றால் அறியலாம்.

சிறு தெய்வங்களுக்கு நாள் பூசை எனப்படும் ஆறுகாலப் பூசையெல்லாம் நடத்தப்படுவதில்லை. மக்கள் அவர்களின் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் பூசை நடத்துகின்றனர்.

மக்கள் தம் சமு‘யத்தின் விருப்பு, வெறுப்புகளுக்குத் தக்கவாறு வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். ஊர்மக்கள் சிறுதெய்வங்களுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபடுகின்றனர். அசைவ உணவை விரும்பாத ஒரு சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்பச் சைவ உணவுப் பொருள்களை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். அசைவ உணவை விரும்பி உண்ணும் இனத்தார் அவர்கள் விருப்பத்திற்கேற்ப விலங்குகளைப் பலியிட்டு வழிபடுகின்றனர். எனவே ஊர்த்தெய்வ வழிபாட்டு முறை சமுதாய அமைப்பிற்கும் இனத்தின் விருப்பத்திற்கும் ஏற்ற முறையில் அமையும் என்பது கருதத்தக்கது.

 

 

நன்றி | தமிழ் கூடல் இணையம் | முனைவர் அ. ஜம்புலிங்கம்

ஆசிரியர்