Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை தத்துவஞானி பிளேட்டோ பற்றி அறிந்திராத தகவல்கள்!தத்துவஞானி பிளேட்டோ பற்றி அறிந்திராத தகவல்கள்!

தத்துவஞானி பிளேட்டோ பற்றி அறிந்திராத தகவல்கள்!தத்துவஞானி பிளேட்டோ பற்றி அறிந்திராத தகவல்கள்!

2 minutes read

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ… மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார்.

கிரேக்கத்தில் அப்போதெல்லாம் கட்டாய ராணுவச் சட்டம் இருந்ததால் பிளேட்டோ சிறிது காலம் ராணுவச் சேவையாற்றினார். போரில் கலந்துகொண்ட அனுபவமும் அவருக்கு உண்டு. தனது இருபதாம் வயதில் சாக்ரடீஸிடம் மாணவராக சேர்ந்து எட்டு ஆண்டுகள் அவரிடம் சீடராக இருந்தார். பிளேட்டோவிற்கு ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால் அப்போதைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாக இருந்ததாலும், சர்வாதிகாரமும் அநீதிகளும் மலிந்திருந்ததாலும் அவருக்கு அரசியலில் வெறுப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் அவரது மானசீக குருவான சாக்ரடீஸூக்கு விஷம் அருந்தி சாகும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரணத்தை தடுத்து நிறுத்த முயன்றவர்களுள் பிளேட்டோவும் ஒருவர்.

சாக்ரடீஸின் மேல் பிளேட்டோவுக்கு இருந்த ஈடுபட்டைக் கண்ட ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள் பிளேட்டோவின் மீது ராஜ துரோகம் குற்றம் சாட்டினர். அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழும் முன் நண்பர்களின் அறிவுரையை ஏற்று ஏதென்ஸை விட்டு வெளியேறினார் பிளேட்டோ. அப்போது அவருக்கு வயது முப்பதுதான்.

கிமு 399 ஆம் ஆண்டில் ஏதென்ஸை விட்டுச் சென்ற பிளேட்டோ அடுத்த 12 ஆண்டுகள் எகிப்து, இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்த அரசியல் முறைகளையும், சமூக அமைப்புகளையும் கற்றறிந்தார். இந்தியாவுக்கும் வந்த பிளேட்டோ இந்துக்களின் ஆத்ம தியானங்களையும், வருனாசரம தர்மத்தையும் ஆராய்ந்தார்.

கிமு 387 ஆம் ஆண்டு தன் தாய்நாட்டிற்கு திரும்பினார் பிளேட்டோ வருங்கால சந்ததிக்கு இளையர்களை தயார்படுத்த விரும்பினார். தனிமனிதனின் அறிவும் பண்பும் வளர கல்வியும் தத்துவ சிந்தனையும் அவசியம் என்பதை உணர்ந்த அவர் “பிளேட்டோ அகாடமி” என்ற கல்வி கலைக்கூடத்தை நிறுவினார். அந்த கலைக்கூடம்தான் உலகில் தோன்றிய முதல் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடதக்கது. கிமு நான்காம் நூற்றாண்டில் கணிதமும், வானியலும் செழித்து வளர்ந்ததற்கு முக்கிய காரணம் பிளேட்டோவின் அந்த அகாடமிதான்.

அது தொடங்கப்பட்ட இருபது ஆண்டுகளுக்குள் அதன் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அந்த புகழ்மிக்க அகாடமியில் கல்வி பயின்றவர்களுள் முக்கியமானவர் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவஞானி அரிஸ்டாடில்.

தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் ஒன்று திரட்டி பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் “The Republic” ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் அது எப்படி ஆளப்பட வேண்டும், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது. அவர் உருவாக்கித் தந்த அரசியல் சித்தாங்களும், சமூக அமைப்புகளும் இன்றளவும் பொருந்தக்கூடியதாய் இருக்கின்றன.

பெண்ணுரிமை என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட சில நாடுகளில் அபத்தமாக மீறப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமையை வலியுறுத்தியிருக்கிறார் பிளேட்டோ.

கிரேக்க மொழியில் பிளேட்டோ என்றால் “பரந்த” என்று பொருள். பெயருக்கு ஏற்பவே பரந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அவர். பிளேட்டோ ஏற்க்குறைய என்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய இறுதிக்காலம் அமைதியாகவே கழிந்தது. பிறந்த தினத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது மரணத்தைக் கேட்டு மாணவர்கள் கண்ணீர் சிந்தினர். ஏதென்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோக மயமாக காட்சி அளித்தது. அவரது உடலை சக மரியாதையுடன் ஏதென்ஸ் நகரமே அணிதிரண்டு சென்று அடக்கம் செய்ததாக வரலாறு கூறுகிறது.

“எண்ணமே செயலுக்கு அடிப்படை” என்பதுதான் பிளேட்டோவின் அடிப்படைத் தத்துவம். எண்ணம் உயரியதாக இருந்தால் செயலும் உயரியதாக இருக்கும் என்று அவர் நம்பினார். அவருடைய எண்ணங்கள் உயரியதாக இருந்ததால்தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் உருவானது. ஒழுக்கமான அரசியல் சிந்தனைகளும் உலகம் முழுவதும் பரவின. “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என வள்ளுவரும் அதைதான் வலியுறுத்துகிறார்.

உங்கள் எண்ணம் உயரியதாக இருந்தால் உங்கள் செயல்பாடுகளும் உயரும். செயல்பாடுகள் உயர உயர உங்களுக்கு நீங்கள் ஒரு நாள் உயர்ந்து விடுவிர்கள்…

 

 

நன்றி : தமிழ்நாதம் |  தமிழ்மாறன்  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More