March 24, 2023 2:35 am

தமிழரசுக் கட்சியின் மாநாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் | செல்வரட்னம் சிறிதரன்தமிழரசுக் கட்சியின் மாநாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் | செல்வரட்னம் சிறிதரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு சர்வதேச பிரசன்னத்துடன் கூடிய, ஆக்கபூர்வமான குறுகிய காலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு முக்கியமாக வலியுறுத்தியிருக்கின்றது.

கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை, முக்கியமான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்தத் தீர்மானங்கள் முதலில் பேராளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டபோது, காலத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து, அவைகள் திருத்திய வடிவத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றாடப் பிரச்சினையாகக் கருதப்படுகின்ற இராணுவ அடக்குமுறை, சிவில் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு, நிர்வாகச் செயற்பாடுகளில் அவர்கள் மேற்கொண்டுள்ள ஆதிக்கம் என்பவை மட்டுமல்லாமல் பெண்களும், இளைஞர்களும் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பற்ற நிலைமைகள், அடாவடித்தனமான திட்டமிட்ட சிங்களவர்களின் குடியேற்றம், இராணுவ குடியிருப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், தமிழர் தாயகப் பிரதேசத்தின் இன விகிதாசாரத்தைத் தலைகீழாக மாற்றியமைப்பதன் ஊடாக, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியமற்றது என்ற – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குப் பாதகமான ஒரு நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கின்றது. இதனை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் செய்யாவிட்டால், அடுத்த வருடம் ஜனவரி முதல் பல இடங்களிலும் சாத்வீகப் போராட்டம் வெடிக்கும் என்று தீர்மானத்தின் ஊடாகத் தமிழரசுக் கட்சிஅரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கின்றது.

அதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அனைத்து முற்போக்கு சக்திகளும் மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநாட்டில் கேரரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் இன்று தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அச்சுறுத்தல்கள், நெருக்குதல்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக முதலில் குரல் கொடுக்க வேண்டும். தமக்கு இழக்கப்படுகின்ற அநீதிகள் குறித்து, ஆதாரபூர்வமான தகவல்களை வெளியில் கொண்டு வர வேண்டும். அது மட்டுமல்லாமல், அவைகள் முறையாக – சட்ட வலுவுள்ள ஆவணங்களாக்கப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொடர் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய ஒரு செயற்பாட்டின் ஊடாகத்தான் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்து யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பவர்களுக்கு, ஓர் இறைமையுள்ள அரசு, மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ், முறையாகச் செய்ய வேண்டிய மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை, மாறாக அந்த மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது என்பதை – உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

அத்தகைய ஒரு நிலைநிறுத்தலின் பின்னணியிலேயே ஏனைய தரப்பினரினதும், இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினதும் உதவிகளை அந்தந்த மட்டங்களில் உரிய சந்தர்ப்பங்களில் கோரவும், கோரி பெறுவதற்கும் முடியுமாக இருக்கும்.

 

ஜனவரி மாதத்தில் பல இடங்களிலும் போராட்டமா?

பல்வேறு தலையீடுகள் காரணமாக, அன்றாட வாழ்க்கையையே மக்கள் இன்று ஒரு போராட்டமாகவே நடத்த வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம், காணாமல் போயிருப்பவர்கள், விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள், பொது மக்களுக்கே சொந்தமாக இருக்கின்ற போதிலும், பொதுத் தேவை என்றும் தேசிய பாதுகாப்புக்கான தேவையென்றும், பல்வேறு சட்டவிதிகளைக் காட்டி, மீள்குடியேற்றம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கும்.

இராணுவ குடியேற்றத்திற்குமாக மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு எதிராகப் பெரிய அளவிலும் சிறிய அளவிலும் மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

cxvbdt

அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை அவ்வப்போது அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இணைந்து மேற்கொள்ளத்தான் செய்கின்றார்கள். எனவே உரிமைகளுக்கும் வாழ்வதற்குமான போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் போராட்டங்களில் உண்மையிலேயே அரசியல் கட்சிகளிலும் பார்க்க, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகவும் தீவிரமாக இருப்பதைப் பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலைமையில்தான், பெரிய அளவில் – பரவலாகப் போராட்டங்களை நடத்தப் போகின்றோம் என்ற முன்னறிவித்தலை -இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தேசிய மாநாட்டில் பிரகடனமாக வெளியிட்டிருக்கின்றது.

அரசாங்கம் தனது அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்து, காலக்கெடு ஒன்றையும் குறித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தக் கைங்கரியத்தைத் தனித்திருந்து ஆரம்பிக்கப் போகின்றதா அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தன்னுடன் இணைந்துள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தொடங்கப் போகின்றதா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.

பல இடங்களிலுமான இந்த சாத்வீகப் போராட்டம் பற்றிய பிரகடனம் வருடத்தின் இறுதிக் காலாண்டு பகுதியாகிய செப்டம்பர் மாதத்தின் முதல் வாரப்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கின்றது. போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனவரி மாதத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில் பரவலான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இத்தகைய ஒரு நிலைமையில் பரவலான போராட்டத்தைத் தமிழரசுக் கட்சி என்ன வகையில் முன்னெடுக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

அவசரகாலச் சட்டம் இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்த நிலைமை கரணமாக நீண்டகாலமாக அமுல் செய்யப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டத்தின் முக்கிய சரத்துக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்த ஒரு செயலையும் அனுமதிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். காணாமல் போயிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, எந்தவிதமான பலனையும் காணாத நிலையில் வீதியில் இறங்கிப் போராடியமையும், இந்தப் பிரச்சினை குறித்து சர்வதேச மட்டத்திலான பிரமுகர்களிடம் எடுத்துக் கூறியமையும்கூட தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அரசாங்கத்தினால் கருதப்படுகின்றது.

இதன் காரணமாகவே, காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைத் தேடி அலையும் தாய்மார்களில் ஒருவராகிய ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

அவருடைய 14 வயது மகள் கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்றில், சுய அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில் பராமரிப்பதற்காக விடப்பட்டிருக்கின்றார். ஜெயக்குமாரிக்கு நேர்ந்தது போன்று பலருக்கும் பல்வேறு வழிமுறைகளில் நேர்ந்திருக்கின்றது. நேர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, பேரணியாகச் செல்வது என்பதெல்லாம், சிக்கலும், சிரமங்களும் நிறைந்த காரியமாக இருக்கின்றது. இதுதான் இன்றைய யதார்த்தம். இத்தகைய ஒரு சூழலில் பரவலாக சாத்வீகப் போராட்டங்களை நடத்துவதற்கு, தகுந்த முன்னேற்பாடுகளும், இறுக்கமான செயற்திட்டங்களும் அவசியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனைப் பழம்பெரும் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதன் பழுத்த தலைவர்களும் சிந்திக்காமல் விட்டிருப்பார்களா?

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான செயற்பாடுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் யெற்பட்டு வந்தார். தமிழரசுக் கட்சியின் இந்த்த தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு இப்Nபுhது 71 வயது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் செயற்பட்டு வந்த 81 வயதுடைய சம்பந்தன், அந்தக் கட்சியின் அரசியல் செயற்குழுவின் தலைவராகச் செயற்படவுள்ளதுடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்தும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

fgs

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றமானது, சம்பந்தன் படிப்படியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான ஆரம்ப நடவடிக்கையா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த சந்தேகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், தற்போது தமி;ழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் அரசியலில் இருந்து எவ்வாறு ஓய்வு பெறுவது என்ற தொனியில் பதிலளித்திருக்கின்றார்.

அதேநேரம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து செயற்படுவது என்பது, கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முடிவிலேயே தங்கியிருக்கின்றது என்றும் அவர் கூறியிருக்கின்றார். ஆனால், தமிழரசுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தமிழ் மக்களும்கூட, கூட்டமைப்பில் சம்பந்தனின் தலைமை தொடர வேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள்.

புதிதாகத் தமிழரசக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மாவை சேனாதிராஜா, அந்தத் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்ற சம்பந்தன் ஆகிய இருவருமே 50 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் அனுபவமிக்கவர்கள். பல்வேறு போராட்ட களங்களை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். மாவை சேனாதிராஜா 7 வருடங்கள் சிறைவாசனம் அனுபவித்தவர். கடந்த 1960 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட சம்பந்தன் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.

இருவருமே பழுத்த அரசியல்வாதிகள். இவர்களிடையே தமிழரசுக் கட்சியின் தலைமைப்  பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ள சூழலில், இருவருமே, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், தமிழரசுக் கட்சி என்னவிதமான முறையில் எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பங்களிப்பு செய்யப் போகின்றது, கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்தும், அதன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் வாய் திறக்கவில்லை.

புதிதாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மாவை சேனாதிராஜா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பங்களிப்பு குறித்து கருத்து வெளியிடாவிட்டாலும்கூட, கூட்டமைப்பின் தலைவராகத் தொடரப் போகின்ற சம்பந்தன் அதுபற்றிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றே பலரும் கருதுகின்றார்கள்.

பழம் பெரும் கட்சியாகக் கருதப்படுகின்ற தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அச்சிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றும் ஓர் அரசியல் கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கென ஒரு சின்னமோ, கொடியோ கிடையாது. அது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தையே, தேர்தல் காலச் செயற்பாடுகளில் தங்கியிருக்கின்றது.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் என்று வரும்போது, இலங்தைக் தமிழரசுக் கட்சியின் பெயர் அந்தக் கட்சியை அடையாளப் படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. தேர்தல் திணைக்களத்திலும், ஏனைய சட்டபூர்வமான ஆவணங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அடையாளப்படுத்துகின்றது. ஆனால், பொது மக்கள் மத்தியிலும், அதேபோன்று அரசியல் அரங்குகளிலும், சர்வதேச மட்டங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே, தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாக, தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகப் பிரகாசிக்கின்றது.

இத்தகைய ஒரு நிலைமையிலேயே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கவனத்தைப் பெறாமல் போயிருப்பது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.  கவலையடையச் செய்திருக்கின்றது

 

பேச்சுவார்த்தைகள்

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள், குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கருத்து தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் அழுத்தி உரைக்கப்பட்டிருக்கின்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அப்பால், மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து மூன்று முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.

இரண்டாவது விடயமாக, பேச்சுவார்த்தையானது 6 வாரங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய நிபந்தனையாகும். இனி;மேலும் பேச்சுவார்த்தை என கூறிக் கொண்டு பேச்சுவார்த்தை மேசையில் காலத்;தை இழுத்தடிக்க முடியாது. அதற்கு இடமில்லை. குறிகிய காலத்தில் ஆக்கபூர்மான முறையில் பேச்சுக்களை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

மூன்றாவதாக, நடக்கப்போகும் பேச்சுவார்த்தையானது, சர்வதேச பிரசன்னத்தில் நடைபெற வேண்டும் என்பதை மற்றுமொரு நிபந்தனையாக அவர் முன்வைத்திருக்கின்றார். இரு பகுதியினருக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுக்களில் என்னென்ன பேசப்படுகின்றது, அங்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதைப் பொதுமக்களும், உலகமும் அறிந்து கொள்வதற்கு இது அவசியமானது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானமாக தமிழர் பிரதேசங்களில் இப்போதுள்ள அடக்குமுறை நிலைமைகள் டிசம்பர் மாதமளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பிட்டட ஒரு காலப்பகுதிக்குள் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை அராசங்கத் தரப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஏற்க மறுத்திருக்கின்றார்.

அரசாங்கத்தைப் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே பேச்சுக்கள் நடத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.

இந்த நிலைமையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது, தமிழரசுக் கட்சி என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இனிவரும் நிலைமைகள் இந்த வினாக்களுக்கு விடையளிக்குமா என்பது தெரியவில்லை.

 

 

– செல்வரட்னம் சிறிதரன் –

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்