Monday, March 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை புதிய தலைவர் சொல்ல வரும் செய்தி என்ன? | இதயச்சந்திரன் புதிய தலைவர் சொல்ல வரும் செய்தி என்ன? | இதயச்சந்திரன்

புதிய தலைவர் சொல்ல வரும் செய்தி என்ன? | இதயச்சந்திரன் புதிய தலைவர் சொல்ல வரும் செய்தி என்ன? | இதயச்சந்திரன்

4 minutes read

தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில், அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மாவை.சேனாதிராஜா அவர்கள் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சராக யாரை முன்னிறுத்துவது என்ற கூட்டமைப்பின் உட்கட்சிப் போட்டியில் தேர்வாகாத மாவை அவர்கள், இப்போது தனது கட்சியின் தலைவராக பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

அம்மாநாட்டில் அவர் நீண்டதொரு உரையினை ஆற்றியிருந்தார். மேற்குலகின்  காலனித்துவ ஆட்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான நிகழ்வுகள் யாவற்றையும் பட்டியலிட்ட மாவை.சேனாதிராஜா அவர்கள், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படும் பொருளாதார- இராணுவ தந்திரோபாயங்கள் குறித்தும், அதில் சீனா கட்டமைக்கும் முத்துமாலை வியூகத்தினை மிகவும் பூடகமாக வெளிப்படுத்தியிருந்தார்.

அவரின் உரை குறித்து இங்கு முழுமையாக விவாதிப்பதாயின், பல வாரங்களுக்கு இப்பத்தி நீண்டு செல்லும். ஆகவே  உரையின் சாராம்சத்தை முன்வைத்து விவாதிக்கலாம்.

ஏற்கனவே முன்பு இப்பத்திகளில் எழுதப்பட்ட பல விடயங்கள் அவர் உரையில் இருப்பதால், சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றியதான தமிழரசுக் கட்சியின் பார்வை குறித்து பேசுவோம்.

தங்களிடம் ஒரு தெளிவான அரசியல்  தீர்வுத்திட்டம் எல்லாக்கால கட்டத்திலும் இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதனை நிறுவிட, பெருமுயற்சி எடுத்துள்ளார் மாவை அவர்கள்.

இருப்பினும், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், மாநாட்டில் எழுப்பிய அரசியல் முழக்கம், பெரும்பான்மையான தமிழ்  மக்களைக் கவர்ந்துள்ளதெனக் கருத முடியாது.

‘சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் அகிம்சை வழியில் போராடவுள்ளோம்’ என ‘மாவை’ அவர்கள் எழுப்பிய முழக்கம், பல கேள்விகளை மக்கள் முன் வைக்கிறது.

உரையின்  ஒரு இடத்தில், ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லை என்கிறார். அதேவேளை, இலங்கை இந்திய ஒப்பந்தப்படி, ‘வடக்கு கிழக்கு மாநிலங்கள் இணைப்பு மற்றும் ஒரே அரசியல் அலகு சட்ட ஒழுங்கு மற்றும் காணி அதிகாரம், நிதி அதிகாரங்கள் உள்ளன’ என்கிறார்.

‘நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்’ என, இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் வழங்கிய-நிலைமையை தற்காலிகமாகச் சமாளிக்கும் உறுதிமொழியினை நம்பி, இவ்வாறான இந்திய நிலைப்பாட்டினை ஆதரிக்கும் கருத்தினை மாவை அவர்கள் செருகி இருக்கலாம்.

இணைப்பு என்பது தற்காலிகமானது என்கிறது ஒப்பந்தம். கிழக்கில் கருத்துக்கணிப்பு நடாத்தப்பட வேண்டுமென்கிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மீறிய அதிகாரம், 13 இற்கு  இல்லை  என்கிற சாசுவதமான உண்மையை  இது தெளிவுபடுத்துகிறது. மாகாண நிதியத்தின் ‘சுக்கான்’ யார் கைகளில் இருக்கிறது என்பதனை இந்தியா உருவாக்கிய 13 இல், சகலரும் புரியும்படியாக தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரம் கூட, மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

அதியுச்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சிக்குள்தான் 13 வது திருத்தச் சட்டமும் இருக்கிறது. ஜே.வி.பியின் மூலம் வட- கிழக்கு இணைந்த தற்காலிக ( 13 அப்படித்தான் கூறுகிறது) நிர்வாகத்தினை, இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டந்தான் பிரித்தது.  இதனை ஏற்றுக்கொள்ளுமாறே இந்தியாவும், மேற்குலகும் தமிழ் மக்களை வற்புறுத்துகின்றன.

ஆகவே தமிழரசுக் கட்சியானது, சர்வதேசத்தின் ஒத்துழைப்பானது எந்த வடிவத்தில் அமைகிறது என்கிற விடயத்தை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிற்கு மேற்குலகும் இந்தியாவும் கொடுக்கும் அழுத்தமானது ,எமக்கான சர்வதேச ஒத்துழைப்பு என்றாகிவிடுமா?.

ஐ.நா.விசாரணையை எடுத்துக்கொண்டால், மாவை குறிப்பிடும் சர்வதேசமானது பிளவுண்டு கிடக்கிறது. இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள். அவரே இதனை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

இனப்படுகொலை விசாரணையில் கூட சர்வதேசத்தின் ஒருமித்த ஒத்துழைப்பு இல்லை. இனப்படுகொலை என்று சொன்னால் சர்வதேசத்திற்குப் பிடிக்காது என்பதால், அச் சொல்லினை இலாவகமாகத் தவிர்க்கும் இராச தந்திரங்கள், ஒடுக்கப்படும் மக்களின் அவலநிலையினை சர்வதேசத்திற்கு உணர்த்தாது.

இலங்கை அரசிற்கு அது பிடிக்காது என்பதால் அச்சொல்லினை இச் ச.சமூகம் தவிர்க்கிறது.

நிரந்தரமான தீர்வொன்றினை எட்டாமலே, நடைபெறும் நில ஆக்கிரமிப்பினைக் கவனத்தில் கொள்ளாமலே, ஒரு செயற்கையான நல்லிணக்கத்தினை  ஏற்படுத்திவிடலாம் என்று சிறில் ராமபோச தொடக்கம், யசூசி அக்காசி  வரை முயன்று பார்க்கின்றார்கள்.

இதுதான் இப்போதைக்கு இந்த சர்வதேசமானது ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களுக்கு நல்கும் ஒத்துழைப்பு.

அதேவேளை, தனது நீண்ட வரலாற்று உரையில்,  தமது தீர்வு குறித்தான முக்கியமான நிலைப்பாட்டினை தமிழரசுக் கட்சியின் தலைவர் விளங்கப்படுத்துகிறார்.

”இலங்கைக்கான அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு, ‘மாநிலங்களின் அல்லது பிராந்தியங்களின் ஒன்றியம்’ எனும் கூட்டாட்சித் தத்துவம் கொண்டுவரப்படவேண்டும். முழுமையான உச்ச அதிகாரப் பகிர்வொன்றில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களின் தன்னாட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும். ஆளை மாற்றுவதைவிட பேரினவாதக் கொள்கைகளும் அகற்றப்பட்டு தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும். 18 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு ஆகக் குறைந்தது 17 ஆவது திருத்தச் சட்டமாவது மீட்கப்படவேண்டும்” என்கிறார்.

அரசியல் அகராதியில் ஒற்றையாட்சியும், கூட்டாட்சியும் இரு துருவங்கள் என்பது பொதுவான உண்மை. இறைமையுள்ள தேசங்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையும் இருக்கிறது. விரும்பினால் ஏனைய தேசிய இனத்தோடு சேர்ந்து கூட்டாட்சி அமைக்கவும் உரிமை உண்டு.

தமிழ் மக்களின் பிரச்சினையில் ஒத்துழைப்பதாகக் கூறப்படும் சர்வதேசம், முதலில், ஈழத்தமிழ் மக்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளட்டும். அப் பிறப்புரிமையின்  அடிப்படையில் ஒத்துழைப்பினை அவர்கள் நல்கினால், மாவை அவர்களின் ‘கூட்டாட்சி’ மெய்ப்படலாம்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும், மாநிலங்களின் ( வட -கிழக்கு) ஒன்றியம் என்கிற ‘கூட்டாட்சி’ நிறுவப்பட வேண்டும், என்று தெளிவாகக் கூறும் தமிழரசுக் கட்சித் தலைவர், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும், 18 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு ஆகக் குறைந்தது 17 ஆவது திருத்தச் சட்டமாவது மீட்கப்படவேண்டும்” என்று சொல்லும்போதுதான் பெருங்குழப்பமாக இருக்கிறது.

இங்குதான் கருத்தியல்ரீதியான முரண்பாடே உருவாகுகிறது.

ஒற்றையாட்சி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறும் அதேவேளை, அந்த ஒற்றையாட்சி உருவாக்கிய 17 வது திருத்தச் சட்டம்  மீட்கப்பட வேண்டுமென்கிறார்.

18 இருக்கும்போது அதிகாரப்பகிர்வு சாத்தியமற்றது என்று வேறு கூறுகிறார். 18 வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் இந்த ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு ( அதிகாரப்பரவலாக்கத்தையே அவர் அதிகாரப்பகிர்வு என்கிறாரோ) சாத்தியமென்று சொல்லவருகிறாரோ யாமறியோம்.

18 அகற்றப்பட்டு , 17 ஐ திரும்பவும் கொண்டுவருமாறே அமெரிக்காவும் விரும்புகிறது. ஆகவே அந்த 17 மீட்கப்பட வேண்டும் என்கிற செய்தியை கூறினால், அமெரிக்காவின் ‘ஒத்துழைப்பு ‘கிடைக்குமென்று மாவை கணிப்பிடுகிறார் போல் தெரிகிறது.

சர்வதேசங்கள், தமது தேசிய, பிராந்திய நலன்களின் அடிப்படையில் சில விடையங்களை முன்வைக்கும். அதனோடு இணங்கிப் போவதனை, அது எமக்கு வழங்கும் ‘ஒத்துழைப்பு’ என்கிற வகையில் நியாயப்படுத்த முடியாது.

இவைதவிர, ‘தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை’ என்கிற சொல்லாடலும் கட்சித் தலைவரின் உரையில் கையாளப்பட்டுள்ளது.

இதைத்தான், ஒத்துழைக்கும் so -called சர்வதேசமும் விரும்புகிறது. நல்லிணக்கம்,நல்லாட்சி இதனை இலங்கையில் நிலைநாட்டப் பாடுபடுவதாகத்தான் பாதுகாப்பு மாநாடுகளிலும், பொதுநலவாய நாடுகளின் கூட்டங்களிலும், ஐ.நா.சபையிலும் இச் சர்வதேசம் பிரகடனம் செய்கிறது.

இவை ஒருபுறமிருக்க, சர்வதேசத்தின் இவ்வாறான நம்பிக்கைதரும் ஒத்துழைப்பு (?)இருக்கும்போது, எதற்காக சாத்வீகவழியில் அகிம்சைப் போராட்டமும் தேவை என்கிறார் மாவை.சேனாதிராஜா?.

‘தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமே , சர்வதேச அரங்கில் ஈழத்தமிழினத்தின் அரசியல் உரிமை முழக்கத்தினைக் கொண்டு சென்றது’ என்பதனை, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் அண்மையில் கூறியிருந்தார். அதுதான் இப்போது நினைவிற்கு வருகிறது.

 

 

இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர் | லண்டன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More