Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பகுதி 2 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்பகுதி 2 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்

பகுதி 2 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்பகுதி 2 | ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்

3 minutes read

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் பெயர்விளக்கம், புவியியல் அமைவு, மழைவீழ்ச்சி, குடியேற்ற வரலாறு, கிராமங்களின் தோற்றம், சமூக வாழ்வியல் அமைப்பு, குடும்ப அமைப்பு, பொருளாதாரமும் போக்குவரவும், கல்வி, இலக்கியச் செழுமை, வணக்கஸ்தலங்களும் ஸியாறங்களும், அரசியல் மேடை, ஆயுதப் போராட்டத்தில் அக்கரைப்பற்றின் பங்களிப்பு ஆகிய தகவல்கள் விபரமாகத் தரப்பட்டிருந்தன. அப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளை இப்பிரதேச வரலாறு இரண்டறக் கலந்து உள்ளடக்குகின்றது.

ஒரு பிரதேசத்தில் எழுந்தருளியிருக்கும் கோவில்களின்; கும்பாபிஷேக மலர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கத்தலங்களின் வரலாறுகளைப் பதிவுசெய்யும் நோக்கில் எழுதப்பட்ட தனி நூல்கள் போன்றவற்றிலும் அப்பிரதேசத்தின் வரலாற்றுக் கூறுகளைக் காணமுடிகின்றது. ஆழ்கடலான் என்ற நூல் முருக.வே.பரமநாதன்அவர்களால் சிங்கை ஆழியான் என்ற புனைபெயரில் எழுதப்பெற்று கனடாவிலிருந்து நெய்தலங்கானல் வெளியீடாக 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் மூலப்பதிப்பு யாழ்ப்பாணம் திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பெற்று ஏற்கெனவே 1983இல் வெளியாகியிருந்தது. வெளிப்படையான ஆவணங்களோ, போதிய தொல்லியல் சான்றுகளோ

இல்லாத நிலையில், ஈராயிரம் ஆண்டு வழிபாட்டு மரபொன்றைக் கொண்ட யாழ்ப்பாணம் வல்லிபுரம் ஆழ்வார்சுவாமி கோவிலின் வரலாற்றை மக்கள் பேணிவந்த மரபுகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றிலிருந்து பெற்று இக்கோவில் வரலாற்று நூலை முருக.வே.பரமநாதன்ஆக்கியுள்ளார். இவ்விரண்டாம் பதிப்பில், யாழ்ப்பாண மாவட்டத்துச் சாசனங்களில் இடப்பெயர்கள் (கலாநிதி இ.பாலசுந்தரம்), The Vallipura Alvar temple dedicated to the worship of God Vishnu (Puloly V.Arumugam)ஆகிய கட்டுரைகளும் வல்லிபுரக் கோயில்மீது பாடப்பெற்ற பாடல்களும் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் திருமதி வி. பாலசுந்தரம் இம்மூலநூலுடன் பின்னிணைப்புகளையும் சேர்த்து கனடாவில் இரண்டாம் பதிப்பினை பதிப்பித்துள்ளார்.

இது போலவே ஈழத்துக் காரைநகர் திக்கரை முருகன் திருத்தலப் பாமாலை என்ற நூலையும் குறிப்பிடலாம். பொன்.பாலசுந்தரம் அவர்கள் இதனைத் தொகுத்து, காரைநகர் திக்கரை முருகன் தேவஸ்தான வெளியீடாக, 2006 இல் வெளியிட்டிருந்தார்.  ஈழத்துக் காரைநகர், களபூமியில் கோயில்கொண்டருளியிருக்கும் முருகன்மீது  இயலிசைவாருதி, யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்கள் 1953ம் ஆண்டில் பாடிக்கொடுத்த நூறு அந்தாதிக் கீர்த்தனைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக் கீர்த்தனைகளில் முருகனது தலப்பெருமைகளும் இணைந்துள்ளன. இசையோடு பாடுவதற்கேற்ப ராகம் தாளம் ஆகியவற்றுடன் இயற்றப்பட்ட இந்நூல் பக்தர்களுக்குச் சிறந்த தோத்திரத் தொகுதியாகவும், இசைத்துறையில் வல்லவர்களுக்கு ஏற்றதொரு கீர்த்தனைத் தொகுதியாகவும் வெளிப்படையாக அமைகின்றது. மேற்படி கோவில்சார்ந்த  அரிய பல பிரதேச வரலாற்றுக் குறிப்புகளும் இக்கீர்த்தனைகளில்  பொதிந்துள்ளமையையும் அவதானிக்கமுடிகின்றது. இந்நூல் – பிரதேச வரலாறுகள் உரைநடையில்தான் இருக்கவேண்டுமென்பதில்லை என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தின் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1895-1995 என்ற நூல் எஸ்.எம்.யோசெவ்  அவர்களால் தொகுக்கப்பெற்று 1995 இல் வெளியிடப்பட்டது. காவலூர் புனித மரியாள் ஆலய நூற்றாண்டை முன்னிட்டு வெளியான இந்நூல், காவலூரின் இன்றைய நிகழ்வுகளையும், நிலவரங்களையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாய் மலர்ந்துள்ளது.

ஊர்காவற்றுறை பற்றிய வரலாற்றைக் கத்தோலிக்க மறை வளர்ச்சியின் பின்னணியில் நான்கு ஆலயங்களின் வரலாற்று விபரங்களுடன், அங்கு பணியாற்றிய குரவர்கள், துறவிகள், முதலியோரின் சேவைகள் உட்பட பல தகவல்களையும் திரட்டி இயன்றளவு கோவைப் படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையின் பிரதேச வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக இந்நூல் கருதப்படுகின்றது.

ஈழத்துப் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் உலகெங்கும் பரந்து வாழும் அதன் பழைய மாணவர்களால், உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் சந்திப்புகளை மேற்கொண்டு அச்சந்திப்பகளின் வழியாகப் பெறும் நிதியுதவிகளை தமது பாடசாலைக்கு வழங்கும் நற்பணியினையும் ஆற்றி வருவதை புகலிடத்தில் ஆங்காங்கே காணலாம்.

இவ்வமைப்புகள் சில சமயங்களில் தரமான சிறப்பு மலர்களையும் வெளிக்கொணர்வதுண்டு. அருணோதயம் என்ற பெயரில் நான் கண்ட ஒரு மலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 1995இல் கனடாவிலுள் அளவெட்டி அருணோதயக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், இத்தகைய  சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரி 1994ம் ஆண்டு நூற்றாண்டுவிழாவை தாயகத்தில் கொண்டாடியது.

அதனையொட்டி கனடா அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட நூற்றாண்டுவிழா மலர், கல்லூரியின் வரலாறு, வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளை மட்டுமின்றி அக்கல்லூரியின் அமைவிடமான அளவெட்டி ஊரைப்பற்றிய சிறப்புக்களையும் இம்மலர் பேசுகின்றது.

2000ஆம் ஆண்டிலும் இதே அமைப்பு மற்றுமொரு பிரதேச வரலாற்றுப்பதிவை பூச்சொரியும் பொன்னொச்சி மரம்: அருணோதயம் 2000 என்ற பெயரில் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சொந்த ஊர் வரலாற்றைப் பதிவுசெய்யும்வகையில், மண்ணின் மைந்தர்களான தட்சிணாமூர்த்தி (தவில்), பத்மநாதன் (நாதஸ்வரம்), வி.பொன்னம்பலம் (அரசியல்), மஹாகவி (இலக்கியம்), செ.சிவப்பிரகாசம் (சிற்பம்), அருட்கவி விநாசித்தம்பி (சமயம்), ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான மண்ணின் மக்களது செய்திகள் கலைநயத்துடனும் புகைப்பட ஆவணங்களுடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஊர் உரைத்தமை, ஊர் இழந்தமை, ஊர் நினைந்தமை, ஊர் மீண்டமை, ஊர் விளைந்தமை, ஊர் விரிந்தமை, என்று ஐந்து பிரிவுகளில் ஆக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

தொடரும்…… 

 

 

 

நன்றி : என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More