ஈழத்தில் எழுந்த சில ஆக்க இலக்கியங்களும் பிரதேச வரலாற்றுக் கூறுகளை முதன்மைப்படுத்தி வெளிவந்துள்ளன. கற்பனைகலந்த நாவல்களான போதிலும் அவற்றில் கதை நிகழும் மண் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் உண்மையானவையாக இருக்கின்றன. இதற்குப் பொருத்தமான உதாரணமாக அந்த நதியும் அதன் மக்களும்… என்ற நாவலைக் குறிப்பிடலாம். நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய இந்நாவல் அவரது குடும்பத்தினரால் நீர்கொழும்பில் 2005இல் வெளியிடப்பட்டது.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம் 09 ஜனவரி 2000 அன்று சுகவீனம் காரணமாக மறைந்தவர். அவர் மறையும் முன்னர் இறுதியாக எழுதிய இந்நாவல் தினக்குரலில் வாராந்தம் பிரசுரமாகிவந்த வேளையிலேயே அவரது மரணமும் நிகழ்ந்தது. கதை நிகழும் களம் சிலாபம், சித்தாமடம், மாயவன் ஆற்று மையம் என்பவையாகும். சி
லாபத்திலிருந்து புத்தளம் செல்லும் பாதையில் தெதுரு ஓயா என்ற மாயவன் ஆற்றின் ஒரு கரையை எல்லையாகக் கொண்டிருக்கும் சித்தாமடம் என்னும் கிராமமும் அக்கிராமத்து பால்பண்ணையும், அப்பண்ணையோடிணைந்த மக்களும் அப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்த 1957 பெருவெள்ளமும் நாவலை விறுவிறுப்பாக்கக் காரணமாகின்றன. இதன்வழியாக பின்னாளில் சிங்களமயப்படுத்தப்பட்ட அப்பிரதேசத்தின் தமிழ்ப்பாரம்பரிய வரலாற்றுச் செய்திகளை இந்நாவலும் பொதிந்து வைத்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
சில இலக்கியவாதிகள் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் சமூக வரலாற்றையும் தான் வாழ்ந்த காலத்தின் மலரும் நினைவுகளையும் நூல்களாகப் பதிவுசெய்துவைத்திருக்கிறார்கள். நடைச்சித்திரங்களாகவும், கட்டுரைகளாகவும் இவை பதிவிலுள்ளன. பின்னாளில் தமது சந்ததியினர் நூல்வழியாகவேனும் கடந்த காலத்தைக் கற்பனையில் கண்டு ரசிக்கட்டும் என்ற போக்கில் இத்தகைய படைப்புக்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.
அந்தக் காலக் கதைகள் என்ற நடைச்சித்திரம் தில்லைச்சிவன் (இயற்பெயர்: தி.சிவசாமி) அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாணம் மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1997இல் வெளிவந்தது. சரவணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தில்லைச்சிவன். மல்லிகை இதழ்களில் 1993களில் அவ்வப்போது பிரசுரமான அவரது விவரணக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்தது.
இத்தொகுப்பில் வேலணைத்தீவுச் சைவ இளைஞர் சபை, ஊரிமண்காடு, அன்பு வியாபாரி, தூக்கணாங்குருவி, புளிச்சாதம், எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார், பாட்டனார் சொன்ன தோம்புக்கதை, பண்டமாற்று, மாற்றம் வரும்போது, வண்டியின் பின்னால் வந்த பேய், திருமணங்கள் இரண்டு, ஐயனார் கோவில் திருவிழா, உமிரிக்கீரை, மீசை முளைத்தது, அராலிச்சந்தித் தண்ணீர்ப் பந்தல், வலம்புரிச் சங்கு, சித்திரை வெள்ளம், தேர்தல் வந்தது, கவிதை பிறந்த கதை, விசாலாட்சி விசுவநாதர் திருமணம், பாஞ்சாலி, பாட்டனாரின் கதை ஆகிய 22 தலைப்புக்களில் தில்லைச்சிவனின் பார்வையில் தான் வாழ்ந்த மண்ணின் விவரணங்கள் விரிகின்றன.
தாயக மண்ணைப் பிரிந்துவந்த வேதனையில் அதன் நினைவுகளை அழியாது காக்கும் பணியில் புகலிடத்தில் வாழும் எம்மவரும் மேற்குறிப்பிட்ட வகையிலான நடைச்சித்திரங்களை எழுதிவந்தள்ளார்கள். அந்தக் காலத்து யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் இன்று அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் சி.சு.நாகேந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநிலத்தில் இயங்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் காலாண்டு வெளியீடான கலப்பை காலாண்டிதழில் முதியோன் என்ற புனைபெயரில் தொடராக இதனை எழுதிவந்தார்.
இக் கட்டுரைத்தொடரின் நூல்வடிவமே தனிநூலாக 2004இல் வெளிவந்தது. 1920களிலிருந்து படிப்படியாக மாறிவந்த யாழ்ப்பாணத்துச் சமூகவாழ்க்கை முறையை, உள்ளது உள்ளபடி காய்தல் உவத்தலின்றி சி.சு.நாகேந்திரனின் கட்டுரைகள் வழங்குகின்றன.
ஒரு பிரதேச வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் இடப்பெயர் ஆய்வுகளும் முக்கியமானவை என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஈழத்தின் இடப்பெயர் ஆய்வு தொடர்பாகத் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கியவர் தற்போது கனடாவில் வாழும் கலாநிதி இ.பாலசுந்தரம். அவரது இடப்பெயர் ஆய்வு: காங்கேசன் கல்வி வட்டாரம் என்ற நூல் இளவாலை: பண்டிதர் அப்புத்துரை மணிவிழாக்குழுவினால் 1988இல் வெளிவந்திருந்தது. நீர்நிலைப்பெயர், நிலவியல்பு, நிலப்பயன்பாட்டு நிலை, குடியிருப்பு நிலை, ஊராட்சி நிலை, தாவரப்பெயர், சிறப்பு நிலைப்பெயர் ஆகிய தலைப்புக்களின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட, காங்கேசன் கல்விவட்டார எல்லைக்குள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள் இந்நூலில்ஆய்வு செய்யப் பட்டிருந்தன.
இலங்கை இடப்பெயர் ஆய்வு 2: வடமராட்சி, தென்மராட்சி என்ற மற்றொரு நூல் புலோலி, வல்லிபுரம் இந்து கல்வி கலாச்சார மன்ற வெளியீடாக, 1989இல் வெளிவந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகரையிலே தொண்டைமானாறு பிரிக்கும் வடபகுதியும், அதனோடு இணைந்த வடகிழக்குப்பகுதியும், தென்பகுதியும் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களாகும்.
தொடரும்……
நன்றி : என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் | பதிவுகள் இணையம்