Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை வால் நட்சத்திரத்தின் வரலாறு!வால் நட்சத்திரத்தின் வரலாறு!

வால் நட்சத்திரத்தின் வரலாறு!வால் நட்சத்திரத்தின் வரலாறு!

2 minutes read

பண்டைக் காலத்திலேயே வால் நட்சத்திரங்களின் (Comet) வரவு உலகத்தில் பயத்தை ஏற்படுத்தியது. சில வால் நட்சத்திரங்கள் தோன்றியபோது உலகில் முக்கியமான சில துயரச் சம்பவங்கள் நடைபெற்றன என்பதே அந்த பயத்துக்குக் காரணம். ஆனால் உலகத்தையே புரட்டிப் போட்ட இரண்டு உலக மகா யுத்தங்களின்போது வால் நட்சத்திரங்கள் எதுவும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வால் நட்சத்திரங்களும் கோள்களைப் போலவே சூரிய மண்டலத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் கோள்களின் பாதை போல் இல்லாமல், இவற்றின் பாதை மிகவும் வேறுபட்டது. பெரும்பாலும் சூரியனுக்கு மிகவும் அருகில் இவை செல்கின்றன; பிறகு சூரியனுக்கு வெகு தூரத்தில் போய் விடுகின்றன. ஒழுங்கற்ற நீள்வட்டப் பாதையில் இவை சுற்றுகின்றன. சூரியனை ஒரு முறை சுற்றிவரச் சில வால் நட்சத்திரங்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிடிக்கின்றன.

ஏறக்குறைய பாதி வால் நட்சத்திரங்கள் மேற்கிலிருந்து கிழக்குப் புறமாகவும் மற்றவை கிழக்கிலிருந்து மேற்குப் புறமாகவும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பயங்கர பாகமாக நினைக்கப்படும் நீண்ட வால், உண்மையில் சேதம் ஒன்றும் விளைவிக்க இயலாதது. வால் நட்சத்திரங்களுக்கு மூன்று பாகங்களுண்டு.

இவற்றின் தலை அல்லது உட்கரு (Nucleus) பெருவாரியான சிறுசிறு பொருள்களால் உருவானது. தலையைச் சுற்றிலும் புகை போன்ற ஒரு மண்டலம் சூழ்ந்துள்ளது. இதுவே வால் நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. சூரிய வெப்பத்தால் தலையின் பொருள்கள் சில வாயுக்களை வெளியிடுகின்றன. அவையே தலையைச் சுற்றிப் புகைபோல் சூழ்ந்திருக்கின்றன.

இந்தப் புகை மண்டலத்தில் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களும், சூரியனுக்கு மிக அருகில் இவை செல்லும்போது சோடியம், இரும்பு, நிக்கல் முதலிய உலோகங்களின் ஆவிகளும் இருப்பதாக நிறமாலைக் காட்டியின் உதவியால் கண்டிருக்கிறார்கள். சூரியனின் ஒளி இந்த வாயுக்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதால், வாயுக்களும் அவற்றுடன் சேர்ந்த துகள்களும் தூசிகளும் சூரியனுக்கு எதிர்ப் புறமாகத் தள்ளப் பெற்று நீண்ட வாலாகத் தோற்ற மளிக்கின்றன.

சூரியனுக்கு அருகில் வால் நட்சத்திரம் நெருங்கும்போது ஒளியின் அழுத்தம் அதிகரிப்பதால் வால் நீளமாகிறது. இந்த வால் இருக்கும் திசை எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறது. சில சமயம் பல கோடிக்கணக்கான மைல் நீளத்துக்கு வானத்தில் இந்த வால் காட்சியளிக்கலாம். வால் நட்சத்திரத்தின் எடை முழுவதும் அதன் தலையிலேயே உள்ளது. அது ஏறக்குறைய ஒரு சிறு கோளின் எடைக்குச் சமமாக இருக்கலாம்.

ஜெர்மானிய கணித வல்லுநர் கௌஸ் கண்டுபிடித்த ஒரு முறையைக் கொண்டு இந்த வால் நட்சத்திரங்களின் முழுப் பாதையையும் கணித்துவிடலாம்.வால் நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை பெரிய கிரகங்களான வியாழன் அல்லது  சனி ஆகியவற்றிலிருந்தோ சூரியனிடமிருந்தோ இவை தள்ளப் பெற்றிருக்கலாம்.

2004ம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ரோஸெட்டா என்னும் விண் பெட்டகம் 67 பி -கரியுமோ கரசிமங்கோ என்னும் வால் நட்சத்திரத்தை ஆராய ஏவப் பட்டது. கடந்த பத்தாண்டு களுக்கு மேலாக ரோஸெட்டா விண் பெட்டகம் சூரியனைச் சுற்றியுள்ள வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தது.கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 14ம்தேதி ரோஸெட்டா விண்கலத்திலிருந்து பிரிந்த பிலே லேண்டர் எனும் ஆய்வுக்கலம் 67 பி – கரியுமோ கரசிமங்கோ வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் மூலம் ஒரு வால் நட்சத்திரத்தில் இறங்கும் முதல் விண் ஆய்வுக்கலம் எனப் புகழ் பெற்றது பிலே லேண்டர்.

ரோஸெட்டாவிலிருந்த மற்றொரு ஆய்வுக்கலமான ரோ ஸெட்டா ஸ்பேஸ் புரோப் ஆய்வுக்கலம் வால் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது.பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் சென்று இறங்கியது. பூமியிலிருந்து 51 கோடி கி.மீ. தொலைவில் மணிக்கு 55,000 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தில் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்ட அகில்கியா என்னும் இடத்தில்தான் மிகப் பாது காப்பாக பிலே லேண்டர் தரை இறங்கியது.

வால் நட்சத்திரப் பரப்பை ஆராய்வது, அதில் அடங்கியுள்ள தனிமங்கள் மற்றும் தாதுக்களைப் பற்றிய ஒரு வேதியியல் அட்டவணை தயாரிப்பது  போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட பிலே லேண்டரின் ஆய்வுப் பணி 2015ம் ஆண்டிலும் தொடர்கிறது.பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து CIVA (Comet Infrared and Visible Analyser) என்ற புகைப்படக் கருவி மூலம் அனுப்பிய அபூர்வ புகைப்படம் வால் நட்சத்திரத்தின் இரண்டு தோற்றங்களை சித்தரிக்கின்றது.

வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசருக்கு கெடுதல் என நம்பிய காலம் மாறி, இப்போது வால் நட்சத்திரத் திலேயே மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது அறிவியல் அதிசயமே!

 

 

 

நன்றி : தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More