சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? இன்றைய நோக்கில் பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும்.
சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய இனம் பெண்ணினம். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்ஸிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
காவிய நாயகியான கண்ணகி தனக்குத் துரோகமிழைத்து, தன்னை விட்டுப் பிரிந்து ஆடல் மாதுவிடம் சரச சல்லாபம் புரியச் சென்ற தன் கணவன் உயிரிழக்கக் காரணமானவன் பாண்டிய மன்னன் என அறிந்து, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள்.
‘தேரா மன்னா செப்புவதுடையேன்’ என வீர முழக்கமிட்ட கண்ணகியின் கோபாக்கினி மதுரையை எரித்தும் அடங்கவில்லை. நீதிமுழக்கமிடும் பெண்ணவளைக் காவியச் சிலம்பில் இவ்வாறு காண்கிறோம்:
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்’
என்று நீதியின் தீர்ப்பில் ஆத்ம திருப்தியைக் காணச் செய்கிறார், காவிய ஆசிரியர் இளங்கோ.
சமுதாய அமைப்பில் பெண்ணின் பங்கு எனும் நோக்கில் ஆதிகாலத்தில் ஆண்-பெண் இருபாலாரும் சம அந்தஸ்துடையோராகக் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நிலப்பிரபுத்துவத் தொடக்க காலத்தில், பெண்கள் ஆண்களின் உடைமைப் பொருளாகக் கொள்ளப்பட்டனர். சமுதாயம் வளர வளர பெண் வீட்டுக்கே உரியவளானாள். சமுதாய அமைப்பில் சமயத் தாக்கமே பெண்களுக்கு இடப்பட்ட முதல் தளை. சமத்துவத்தில் சமயமானது பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. மதக் கோட்பாடுகள் பெண் பின்தள்ளப்பட வழிகோலாய் அமைந்தன. மதங்களில் பெண்களின் கடமை தர்மமாக்கப்பட்டது. அடுத்து வந்த காலங்களில் முக்கியமாக வேதகாலத்தில் பெண்கள் கல்வி கற்றனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பின்னர் புராண இதிகாச காலத்தில் பெண் தன் சகல உரிமைகளையும் இழந்த நிலையில் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என வாழவேண்டிய நிலையும், தர்மபத்தினியாக விளங்க வேண்டுமெனவும் கற்பொழுக்கம் பேணி நடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில் பெண்விடுதலைக்காகக் குரலெழுப்பியவன் பாரதியாவான்.
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனமுழக்கமிட்டான்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்’
என்று சமத்துவக் குரல் எழுப்பி,
‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம், வீரசுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.’ என அறைகூவி, உயர்குடிப் பெண்ணின் பண்பினை உலகறியச் செய்தான். கற்பொழுக்கம் பெண்ணுக்கு மட்டுமே என்று பெண்களை அடக்கி ஒடுக்கிய பாரத சமுதாயத்தை நோக்கி,
‘ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ? நாணமற்ற வார்த்தையன்றோ?’ என முழங்கியதுடன்,
‘கற்பு நிலையென்று சொல்லவந்தார் -இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ எனவும் அடித்துக் கூறினான்.
‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்கிறது வள்ளுவம்.
பொய்யா மொழிப் புலவனின் இக்கூற்றே பெண்பிள்ளை பிறந்தால் பொய்த்துவிடுகிறது. ஆண்குழந்தை பிறந்தால் மாத்திரமே ‘மழலை இன்பம்’ என்கின்றனர். பிறக்கும் சிசு பெண்ணாக இருந்துவிட்டாலோ, ‘ஐயோ பெண்ணா?’ என்று இழப்பு இழையோடிய ஆதங்கம் ஒலிக்கிறது.
பெண் பருவமடைந்தால், வெளி உலகிற் சென்று புழங்கக் கூடாது. அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும். அன்னைக்கு அடுத்தபடி வீட்டிலிருந்து தந்தை, சகோதரர்களுக்குக் குற்றேவல் செய்யவேண்டும். இது சமுதாயம் பெண்ணுக்குப் போட்டுள்ள கால்கட்டு. ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்ற கல்விக் கட்டுப்பாடுகள் இன்றும் நிலவிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
சிலப்பதிகார நாயகி கண்ணகி, தனக்குத் துரோகமிழைத்த கணவனுக்கு அடங்கியொடுங்கிய மனைவியாகச் சித்திரிக்கப்படுகின்றாள். தேவ அடியாளாகிய மாதவி விலைமாதாக விமரிசிக்கப்படுகின்றாள். சீதா பிராட்டியின் கற்பொழுக்கம் தீக்குளித்து நிரூபிக்கப்படுகின்றது. கற்புக் கனல் தமயந்தி நடு இரவில் கானகத்தே தனித்து விடப்படுகின்றாள். கற்பின் நாயகி சந்திரமதியின் கற்பு சுடலையில் புடம்போடப்படுகிறது. கற்பின் செல்வி திரௌபதி அரசவையில் துகிலுரியப்பட்டு காட்சிப் பொருளாகின்றாள். இவ்வாறு காவியங்களில் பெண்ணுக்கு நடைபெற்ற சோதனைகளும் வேதனைகளும் எத்தனையெத்தனையோ!
தொடரும்…
நன்றி : ஷர்மிலா ஜெயினுலாப்டீன் | நீதிமுரசு 1995 | நிலாப்பெண் இணையம்