Friday, May 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா?

எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா?

7 minutes read

“நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை………

அன்பார்ந்த தமிழ் மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது. இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான எழுகை. உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது……”

இது தமிழ் மக்கள் பேரவையின் அறிவிப்பு. கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் கொதிப்பையும் கொந்தளிப்பையும் ஒரு பேரெழுச்சியாகத் திரட்டி எடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை முன்வந்திருக்கிறது. பேரவை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் ஒரு காலச்சூழலில் பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொள்ளும் ஓர் அரசியல் சூழலில் பேரவையின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கிறது.

கூரான வார்த்தைகளை சொன்னால் பேரவை காலாவதியாகி விட்டதா என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படும் ஒரு காலச்சூழலில் பேரவை மற்றொரு எழுக தமிழுக்கான அறிவிப்பை விடுத்திருக்கிறது.
முதலில் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் பேரெழுச்சி தேவை. 2009-க்கு பின் யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரசின் உபகரணங்களான திணைக்களங்களுக்கு எதிராக ஒரு பேரெழுச்சியை காட்ட வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே பேரவையின் மேற்படி அறிவிப்பை வரவேற்க வேண்டும். அதேசமயம் பேரவையின் இயலாமைகள் தொடர்ப்பிலும் விமர்சிக்க வேண்டும்.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் பேரவையை எந்த நோக்கு நிலையில் இருந்து விமர்சிக்கிறோம் என்பதுதான். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலை முன்னகர்த்தும் ஓர் இடை ஊடாட்டத் தளம் என்ற அடிப்படையில் பேரவையை விமர்சிப்பது வேறு. கூட்டமைப்பின் நோக்கு நிலையிலிருந்து அல்லது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் கையாளாக இருந்து பேரவையை விமர்சிப்பது வேறு.

ஏனெனில் பேரவை ஒரு காலகட்டத்தின் தேவை. அது அக்காலகட்டத்தின் தேவையை ஓரளவிற்கு நிறைவேற்றியது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதனால் பாய முடியவில்லை. ஏனெனில் அதன் பிறப்பிலேயே அதற்குரிய வரையறைகள் காணப்பட்டன. அது முதலாவதாக ஒரு விக்னேஸ்வரன் மைய அமைப்பு. இரண்டாவதாக ஒரு பிரமுகர் மைய அமைப்பு. மூன்றாவதாக கூட்டமைப்புக்கு எதிராகக் காணப்பட்ட உணர்வுகளை அபிப்பிராயங்களை திரட்டி எடுப்பதற்குரிய ஓர் இடை ஊடாட்ட தளம். நிச்சயமாக அதுவே இறுதித் தரிப்பிடம் அல்ல.

பேரவை வெற்றிடத்திலிருந்து தொடங்கவில்லை. அது ஏற்கனவே அனைத்துலகக் கவனிப்பை பெற்றிருந்த தமிழ் சிவில் சமூகம் அமையத்தின் ஒரு கிளைத் தொடர்ச்சிதான. 2009 மே க்குப் பின் தமிழ் பகுதிகளில் நிலவிய யுத்த வெற்றிவாதத்தின் கீழான அச்சச் சூழலில் தமிழ் சிவில் சமுக சமூக அமையமானது குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தது. அது அந்தக் காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்தது. அதில் சமூகத்தின் பிரமுகர்களாக காணப்பட்ட பலரும் மதகுருக்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்து இயங்கினார்கள். அதுவும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் அமைப்புத்தான். ஆனால் அது தவிர்க்க முடியாததும் கூட. ஏனெனில் 2009-க்கு பின் யுத்த வெற்றிவாதத்தின் கீழ் அரசியல் செய்வது என்பது ஆபத்தானதாக இருந்தது. முன்னைய காலங்களில் ரிஸ்க் எடுத்த பலரும் யுத்த வெற்றிவாதத்தின் கீழ் செயற்பட முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் சமூகத்தின் பிரமுகர்களாக காணப்பட்டவர்களே அரசியல் பேசக் கூடியதாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய சமூக அந்தஸ்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக காணப்பட்டது.

ஆனால் 2015ந்தில் ஆட்சி மாற்றத்தோடு சிவில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்தது. இந்த வெளிக்குள் செயற்படுவதற்கு தமிழ் சிவில் சமூக அமையத்தை விட அரசியல் அடர்த்தி கூடிய ஒரு மக்கள் இயக்கம் தேவைப்பட்டது. அத் தேவையின் அடிப்படையில் உருவாகியதே பேரவை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் அரங்கச் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார் “ஒரு பொருத்தமான மக்கள் அமைப்பு தோன்ற வேண்டிய இடத்தில் இப்படி ஒரு பிரமுகர் அமைப்பு தோன்றியிருக்கிறது. இது இக்காலகட்டத்துக்கு உரிய பொருத்தமான அமைப்பொன்று தோன்றுவதை பின் தள்ளப் போகிறதா? ” என்று.
தமிழ் சிவில் சமூக அமையத்துக்குள் காணப்பட்ட அல்லது அதற்கு ஆதரவான ஒரு பகுதி செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து விக்னேஸ்வரனை மையமாகக் கொண்டு பேரவையை கட்டியெழுப்பினார்கள்.

விக்னேஸ்வரனை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பாக காணப்பட்டமைதான் தொடக்கத்தில் அதன் பலமாக காணப்பட்டது. ஏனெனில் அப்பொழுது விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தார் . அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த தலைமைக்கு எதிராக ஒரு புதிய தலைமையாக அவர் மேல் எழுவதற்குரிய இடை ஊடாட்டத் தளமாக பேரவை இயங்கியது. ஆனால் அது விக்னேஸ்வரனைச் சுற்றி கட்டப்பட்டிருந்தமைதான் அதன் பலவீனமாகவும் காணப்பட்டது. விக்னேஸ்வரன் பேரவைக்குள் காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க பின்னடித்தார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அவர் தலைமையில் பேரவையானது தன்னுள் அங்கங்களாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொது ஐக்கிய முன்னணியை உருவாக்க தவறியது. விக்னேஸ்வரன் அவருடைய பதவிக்காலம் முடியும் வரையிலும் அப்படி ஒரு தலைமையை வழங்க தயாராக காணப்படவில்லை. இதுதான் பேரவையைப் பெருமளவுக்கு முடக்கியது. இதுதான் இப்பொழுது மாற்று அணிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்களுக்கும் காரணம். பொருத்தமான கால கட்டத்தில் சரியான முடிவை எடுத்து தலைமை தாங்கத் தவறியது.

இப்படிப் பார்த்தால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலோடு பேரவையானது பெருமளவிற்கு காலாவதியாகத் தொடங்கிவிட்டது. அதன்பின் அதற்குள் அங்கமாக காணப்பட்ட இரண்டு கட்சிகளும் ஒன்று மற்றதை எதிர்த்து விமர்சிக்கத் தொடங்கின. இது அதன் ஆகப்பிந்திய வடிவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது விக்னேஸ்வரனுக்கும் பேரவைக்கும் எதிராக கருத்துக்களை முன் வைக்கும் ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. தன்னுள் அங்கமாக காணப்பட்ட கட்சித் தலைவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த பேரவையால் முடியவில்லை.

அதிலும் குறிப்பாக விக்னேஸ்வரன் தனது கட்சியை அறிவித்த பொழுது அது தொடர்பில் பேரவைக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதுவும் பேரவையின் செயற்பாடுகளை தேங்க வைத்தது. இவ்வாறு கடந்த பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த பேரவை கடந்த வாரம் மற்றொரு எழுக தமிழுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
விக்னேஸ்வரனின் கட்சி தொடங்கப்பட்டபின் பேரவை பெரிய அளவில் செயற்படவில்லை. வழமைபோல அதன் கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு தனது தலைமையை தான் கைவிடத் தயார் என்றும் அறிவித்தார். எனினும் பேரவைக்குள் ஒரு பகுதியினர் விக்னேஸ்வரனை பேரவைக்கு வெளியே விடத் தயாரில்லை. அதேசமயம் அவருடைய கட்சியை வெளிப்படையாக ஆதரித்து அதைக் கட்டியெழுப்பவும் தயாரில்லை. இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் தேர்தலில் ஈடுபடாத பொதுமக்கள் அமைப்பு என்ற கனவுக்கும் இடையே பேரவை தொடர்ந்தும் ஈரூடக அமைப்பாகவே காணப்படுகிறது. இக்கால கட்டத்தில் அது பெரிய அளவில் பெருந்திரள் மக்கள் அரசியலை முன்னெடுக்கவில்லை.

அந்த அமைப்புக்குள் பிந்தி இணைக்கப்பட்ட சில செயற்பாட்டாளர்கள் பேரவையை மறுபடியும் முடுக்கிவிட முயற்சித்தார்கள். பேரவைக்கென்று ஒரு யாப்பைத் தயாரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் பேரவைக்குள் ஏற்கனவே ஸ்தாபித்தமாகக் காணப்பட்ட சிலர் பேரவைக்குள் பிந்தி இணைந்தவர்கள் மேலெழுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது.

இவ்வாறான பின்னணியில் கடந்த பல மாதங்களாக யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள பேரவை கட்டடத்தில் ஓர் அரசியல் பள்ளி இயங்கிவருகிறது. அதில் அரசறிவியல் மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் வாரந்தோறும் கூடிக்கதைக்கிறார்கள். வகுப்புகள் நடக்கின்றன. கலந்துரையாடல்கள் நடக்கின்றன. எனினும் கட்சி சார்ந்த செயற்பாட்டாளர்கள் அவ்வரசியற் பள்ளியில் பங்குபற்றுவதற்கு பின்னடிக்கிறார்கள் . இது பேரவையானது எல்லாத் தரப்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரவணைக்கும் ஓர் இடை ஊடாட்டத் தளமாகச் செயற்படுவதில் உள்ள வரையறைகளை காட்டுகிறது.

இவ்வாறானதோர் தேக்கத்தின் பின்னணியில்தான் மறுபடியும் பேரவை ஒரு பேரெழுச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அப்படியொரு மக்கள் எழுச்சிக்கான எல்லாவிதமான தேவைகளும் இப்பொழுது உண்டு. கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசாங்கத்தின் மீதான கோபம் திரண்டு வருகிறது. அனைத்துலக சமூகத்தின் மீதான அதிருப்தி திரண்டு வருகிறது. அரசின் உபகரணங்களாக உள்ள திணைக்களங்கள் யுத்தத்தை வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்களோ அந்த யுத்தத்தை எதிர்ப்பதற்குத் தேவையான கூட்டுப் பொறிமுறை எதுவுமின்றி காணப்படுகிறார்கள்.

இயலாமையும் விரக்தியும் கோபமும் கொதிப்பும் அதிகரித்து வரும் இவ்வரசியற் சூழலில் எழுக தமிழுக்கான தேவை உண்டு. ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் முதலாவதாக அது ஒரு நாள் நிகழ்வாக இருப்பதின் போதாமை. இரண்டாவதாக, முன்னைய எழுத தமிழ்களின் போது பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை என்பது.

முன்னைய எழுக தமிழ் நிகழ்வுகளின் போது ஆட்களைத் திரட்டி வீதிக்குக் கொண்டு வந்ததில் மேற்படி கட்சிகளுக்கும் பங்குண்டு. ஆனால் நடக்கவிருக்கும் எழுக தமிழில் மேற்படி காட்சிகள் அவ்வாறு முழுமனதோடு செயல்படுமா என்ற கேள்வியுண்டு. அதாவது ஒரு பேரெழுச்சிக்கான பொதுஜனக் கூட்டு உளவியல் தயாராகக் காணப்படுகிறது. ஆனால் ஒரு கூட்டுக் கட்சி உளவியல் தயாராக இருக்கிறதா? இப்படிப் பார்த்தால் நடக்கவிருக்கும் ஏழுக தமிழானது கூட்டமைப்புக்கு மட்டும் அல்ல, அரசாங்கத்துக்கு மட்டும் அல்ல. பேரவைக்குள் முன்பு ஒன்றாக காணப்பட்ட கட்சிகளுக்கும் சில செய்திகளை உணர்த்தும்.

அதேசமயம் பேரவையானது அதன் இயலாமைகளையும் வரையறைகளையும் ஈரூடகப் பண்பையும் குறித்து தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். 2009க்கு பின் அக்காலகட்டத்தின் தேவையாக தமிழ் சிவில் சமூக அமையம் தோன்றியது. 2015 இல் அப்போது அதிகரித்த சிவில் ஜனநாயக வெளிக்குள் பேரவை தோன்றியது. அதாவது தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்ட கிளைக்கூர்ப்பே தமிழ் மக்கள் பேரவை ஆகும். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு பேரவையும் தேங்க தொடங்கிவிட்டது. இப்பொழுது பேரவை அதன் அடுத்த கட்டக் கூர்ப்பிற்குப் போக வேண்டியிருக்கிறது.
அது தேர்தலில் ஈடுபடாத ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்பட வேண்டியிருப்பது ஏன் ? எப்படி?

தேர்தல் மையக் கட்சிகள் தேர்தல் வெற்றிகளுக்காகத் தமது கனவுகளை யதார்த்தத்தை நோக்கி வளைக்க கூடும்.அவ்வாறு வளையாத ஓரமைப்பே கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யமுடியும். தார்மீக அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். சனங்களின் கொதிப்பை கனவை நோக்கி நொதிக்கச் செய்ய முடியும். ஆயின் பேரவை இதுவரைக் காலமும் அவ்வாறான ஓரமைப்பாகச் செயற்பட்டதா?

இல்லையெனில் ஏன்? இனிமேலாவது அவ்வாறு செயற்படுவதென்றால் எங்கிருந்து தொடங்க வேண்டும்? அது பேரவையின் அடுத்த கட்டக் கூர்ப்பா? அல்லது முற்றிலும் புதிதான வேறொன்றா?

தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஒரு பகுதித் தொடர்ச்சியாக பேரவை தோன்றிய போது அதில் முழு அளவு இணைய மறுத்த தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் அப்பொழுது கூறிய கருத்துக்கள் பல இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த விமர்சனங்களையும் உள்வாங்கி பொருத்தமான தரிசனமும் அரசியல் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் கொண்ட தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணையும் பொழுது பேரவைக்குப் பின் எதுவென்பது தெரியவரும்.

Image may contain: 1 person

கட்டுரையாளர், நிலாந்தன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர் மற்றும் கவிஞர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More