செப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி ஒருமக்கள் எழுச்சிக்கான எல்லாத் தேவைகளும் உண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை நடாத்தியிருப்பதால் இம்முறை ஏன் வன்னியில் நடத்தக் கூடாது? என்ற கேள்வியும் உண்டு. ஆனால் முன்னைய எழுக தமிழ்களோடு ஒப்பிடுகையில் இம்முறை ஓர் எழுக தமிழை ஒழுங்குபடுத்துவதில் பின்வரும் சவால்கள் உண்டு.

அது ஓர் அலுவலக நாள். அந்நாளில் அரச அலுவலர்களையும் மாணவர்களைம் முழு அளவுக்குத் திரட்ட முடியுமா? ஏற்கனவே கடையடைப்பு என்றால் அது மாணவர்களுக்கு மட்டும்தான் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் இல்லை என்று ஒரு வழமை உண்டு. இந்த வழமையைப் பேரவை எப்படி உடைக்கப் போகிறது? இது முதலாவது சவால்.

முன்னைய எழுக தமிழ்களின் போது தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டளவில் ஒரு பலமான அமைப்பாக காணப்பட்டது. அதற்குள் அங்கமாக இருந்த கட்சிகள் ஒன்றுபட்டு உழைத்தன. ஆனால் இம்முறை அப்படியல்ல. புளொட் இயக்கம் இம்முறை எழுக தமிழில் பங்கு பற்றுமா? கூட்டமைப்பையும் பேரவையின் முக்கியஸ்தர்கள் சந்தித்திருக்கிறார்கள். இச்சந்திப்பில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசா எதிர் மறையாக எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பில் பின்னர் பதில் தருவதாக அவர் கூறியதாகத் தகவல். ஆனால் சம்பந்தர் எழுக தமிழை ஆதரிக்கும் வாய்ப்புக்கள் குறைவு என்று கூறப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இதில் பங்குபற்றுமா? இது தொடர்பில் முன்னணியோடு உரையாடிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அக்கட்சி எதிர் மறை அர்த்தத்தில் பதில் கூறியிருக்கிறது. எழுக தமிழ் நிகழ்வு எனப்படுவது விக்னேஸ்வரனின் புதிய கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலானதென்றும் எனவே தமது கட்சி அதில் பங்குபற்றும் நிலைமைகள் இல்லை என்ற தொனிப்படவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. இது இரண்டாவது சவால்.

இவ்வாறு கட்சிகள் தங்களுக்கிடையே முரண்படும் ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பானது கட்சி சாராத ஒன்றாக அமைய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. கட்சி சாரா ஒரு வெகுசன எழுச்சியில் தாம் பங்கெடுக்கத் தயார் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இது மூன்றாவது சவால்.

அப்படிப் பார்த்தால் நடக்கவிருக்கும் எழுக தமிழ் நிகழ்வில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஈபிஆர்எல்எப் கட்சியும்தான் இறங்கி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களோடு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் உட்பட ஏனைய சிவில் அமைப்புகளும் சேர்ந்து வேலை செய்யும்.

முன்னைய எழுக தமிழ் நிகழ்வுகளின்போது தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அரங்கில் இருக்கவில்லை. இப்பொழுது அக்கட்சியே எழுக தமிழ் தமிழை முன்னின்று முழ மூச்சாக ஒழுங்குபடுத்துவது போல ஒரு தோற்றம் தெரிகிறது.

அக்கட்சியை விக்னேஸ்வரன் அறிவித்த விதம் பேரவைக்குள்ளேயே விமர்சனங்களை ஏற்படுத்தியது. இப்பொழுதும் அந்த விமர்சனங்கள் உண்டு. இணைத் தலைவர் பதவியை துறக்கத் தயார் என்று விக்னேஸ்வரன் எப்பொழுதோ அறிவித்து விட்டார். அந்த அறிவிப்பை பேரவைக்குள் ஒரு பகுதியினர் வரவேற்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. விக்னேஸ்வரனை மையமாக வைத்துக்கொண்டு பேரவையை முன் கொண்டு செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். இதுவிடயத்தில் பேரவைக்குள் இரு வேறு தரப்புக்கள் காணப்படுகின்றன. விக்னேஸ்வரன் ஓர் இணைத்தலைவராக இல்லாமல் பேரவையின் அங்கத்துவ கட்சி ஒன்றின் தலைவராக இருப்பதை ஒரு தரப்பு ஏற்றுக்கொள்கிறது. மற்றொரு தரப்போ விக்னேஸ்வரனே பேரவையின் மையமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

பேரவைக்குள் காணப்படும் இதுபோன்ற குழப்பங்களால் எழுக தமிழின் வெற்றி பாதிக்கப்படுமா? இது நாலாவது சவால்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்றால் எழுக தமிழை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு பெருமளவுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலையிலும் ஈபிஆர்எல்எப் இன் தலையிலும் ஏனைய சிவில் அமைப்புக்களின் தலைமையிலும் சுமத்தப்படும். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முன்னைய எழுக தமிழகளை விடவும் அதிக தொகை மக்களை முற்றவெளிக்குக் கொண்டு வர வேண்டிய ஒரு தேவை மேற்படி கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் கொழும்புக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் மட்டும் செய்தி சொல்வதாக அமையாது. அதோடு விலகி நிற்கும் ஏனைய கட்சிகளுக்கும் ஒரு செய்தி உணர்த்தப்படும் என்றும் கருதப்படுகிறது.

எனவே வரவிருக்கும் எழுத தமிழ் விக்னேஸ்வரனையும் பேரவையையும் பொறுத்தவரை ஒரு பலப் பரிசோதனை எனலாம். இப்பலப் பரிசோதனையில் தோல்வியுற்றால் அது கட்சி ரீதியாக விக்னேஸ்வரனுக்கும் சுரேசுக்கும் தோல்வி. அமைப்பு ரீதியாக பேரவைக்குத் தோல்வி. இவற்றைவிட முக்கியமாக எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் முன்னெடுக்கப்படுகிறதோ அந்தக் கோரிக்கைகளுக்கும் தோல்வி. எனவே எழுக தமிழை எப்பாடுபட்டேனும் வெற்றியாக நடத்தி முடிக்க வேண்டிய ஒரு சவால் வந்துவிட்டது.

இது மிகத் துயரமான ஒரு விடயம். தமிழ் மக்கள் தமது திரண்ட எதிர்ப்பைக் காட்ட வேண்டிய ஒரு சூழலில் உரிய கட்சிகள் திரளத் தயாராக இல்லை என்பது. கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கூர்மையான விதத்தில் எதிர்ப்பு எதுவும் காட்டப்படவில்லை. ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அரசுக் கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் தமது நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பு ஏதுமின்றி இடையறாது முன்னெடுத்து வருகின்றன. இதன் காரணமாக ஒரு பிரச்சினைக்காகத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்க அந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காமலேயே மற்றொரு புதிய பிரச்சினை அரங்கில் கிளம்பும். அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அதற்கும் தீர்வு கிடைக்காது. அதற்கான போராட்டமும் ஒரு கட்டத்தில் இறுகி நிற்கும். அல்லது தேங்கி நிற்கும். அல்லது சோர்ந்து நிற்கும். அப்பொழுது மற்றொரு பிரச்சினை கிளம்பும்.

கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் புதிது புதிதாக பிரச்சினைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மக்கள் போர்க் குற்ற விசாரணைகளைக் கேட்டார்கள். அரசியல் கைதிகளை விடுவிக்கக் கேட்டார்கள. ராணுவ மய நீக்கத்தைக் கேட்டார்கள். காணிகளைக் கேட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைக் கேட்டார்கள். ஆனால் எதற்குமே தீர்வு கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் தொள்ளாயிரம் நாட்களைத் தாண்டி விட்டது. காணிக்கான போராட்டம் சோர்ந்து போய் கிடக்கிறது. அரசியல் கைதிகளுக்கான போராட்டம் அவ்வப்போது யாராவது ஒரு அல்லது சில கைதிகள் உண்ணாவிரதம் இருக்கும் பொழுது பொங்கி எழும். ஆனால் கைதிகளைச் சாக விடக்கூடாது என்ற அடிப்படையில் அப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும். அண்மையில்கூட ஓர் அரசியல் கைதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நகர்த்தப் போவதாக கூறி அப்போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சரவைப் பத்திரம் இன்னும் முன் வைக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் போர்க் குற்றங்களுக்கு நீதி கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடியும் காணிகளை விடுவிக்க கோரியும் போராடி வந்தார்கள். தமிழ் மக்கள் பேரவை பல மாதங்களுக்கு முன்பு அரசியல் கைதிகளுக்காக ஒரு முழு நாள் கடையடைப்பை ஒழுங்குபடுத்தியது. அது மிகவும் வெற்றிகரமாக கடைபிடிக்கப்பட்டது. இதற்கு முன் ஒழுங்கு செய்யப்பட்ட எல்லா எழுக தமிழ் எழுச்சிகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை முன்வைத்தே நிகழ்த்தப்பட்டன.

ஆனால் அண்மை ஆண்டுகளாக புதிய புதிய பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மகாவலி எல் வலையம், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில், பழைய செம்மலைப் பிள்ளையார் கோவில் போன்ற புதிய பிரச்சினைகள் கிளம்பி இருக்கின்றன. இவற்றுக்காகவூம் தமிழ் மக்கள் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. காணிகள் முழு அளவு விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. அவர்களின் உறவினர்களுக்கு மாதம் 6000 ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் நிலைமை. இங்கு மகாவலி எல் வலையம் அல்லது கன்னியா பிள்ளையார் விவகாரம் அல்லது செம்மலைப் பிள்ளையார் விவகாரம் போன்றன புதிய பிரச்சினைகள் போலத் தோன்றலாம். ஆனால் அவை புதியவை அல்ல. ஒரு பழைய நிகழ்ச்சி நிரலின் கீழ் எதிர்ப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்ட புதிய எல்லைகளே அவை. அதாவது 2009க்கு பின்னரும் யுத்தம் தொடர்கிறது. அது வேறு வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்களிடம் சுய பாதுகாப்பு பொறிமுறைகள் இல்லை. எதிர்ப்புப் பொறி முறைகளும் இல்லை.

இருப்பதெல்லாம் எல்லாவற்றையூம் சட்டப் பிரச்சினையாகச் சுருக்கும் சில சட்டத்தரணிகளான அரசியல்வாதிகளும் பேரவை போன்ற சில மக்கள் அமைப்புக்களும்தான். இப்பொழுது பேரவையும் பலவீனப்பட்டது போலத் தோன்றுகிறது. பேரவையை தொடர்ந்தும் ஒரு மக்கள் இயக்கமாக கட்டியெழுப்புவதே பெரிய சவாலாகத் தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் வருங்காலத்தில் பேரவையின் மீதும் பாயலாம் என்றே தோன்றுகிறது.

யுத்தத்தை வேறு வழிகளில் தொடரும் அரசு கட்டமைப்புக்கு எதிராக அதன் உபகரணங்களுக்கு எதிராக ஒரு தமிழ் மக்கள் பேரவை போதாது அதைவிட வீச்சான ஒரு மக்கள் இயக்கம் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு பின்னணியில் இப்பொழுது தமிழ் மக்கள் பேரவையே தன்னைத் தூக்கி நிறுத்த வேண்டிய ஒரு தேவை வந்திருக்கிறது.

எழுக தமிழ் போன்ற ஒருநாள் போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்காது. அதை ஒரு தொடர் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். புதிய போராட்டப் பொறிமுறை ஒன்று தேவை. என்று விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு பின்னணிக்குள் இப்பொழுது ஒரு எழுக தமிழையாவது வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற சவால் எழுந்திருக்கிறது.

இது மிகக் கொடுமையான ஒரு நிலை. இது பாலஸ்தீனர்கள் மத்தியில் உள்ள ஒரு பழமொழியை நினைவூட்டுகிறது…….“நாங்கள் பீசாவை எப்படிப் பங்கிடுவது என்று சண்டை பிடித்துக் கொண்டிருக்க அவர்களோ (யூதர்கள்) பீசாவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ”.