கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் காட்டப்படுகிறது. சீனா இலங்கைத் தீவின் வரை படத்தை மாற்றி விட்டது. நாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் வழங்கியிருக்கிறது.

தாமரைக் கோபுரத்தைப் பற்றி வெளிவந்த பெரும்பாலான கார்ட்டூன்களில் கடன்காரர்களாக மாறியிருக்கும் இலங்கையர்களின் வறுமையின் பின்னணியில் எடுப்பாக நிமிர்ந்து நிற்கும் ஒரு கோபுரமாகவே அது சித்தரிக்கப்படுகிறது. அதேசமயம் சிறிய அழகிய இலங்கைத் தீவு பேரரசுகளின் குத்துச்சண்டை களமாக எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பதை உணர்த்தும் ஒரு கட்டடக்கலை சார் அரசியற் குறியீடாகவும் காணப்படுகிறது.

இவ்வாறு இலங்கைத்தீவு அதிகம் சீன மயப்பட்டதன் ஒரு குறியீடாக ஓர் உயர்ந்த கோபுரம் திறக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எழுக தமிழ் இடம்பெற்றது. பேரரசுகளின் உலகளாவிய மற்றும் பிராந்திய வியூகங்களிட் சிக்கி சின்னாபின்னமாகிய ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் சிறிய எதிர்ப்பே எழுக தமிழ் ஆகும்.

விரைவில் ஓர் அரசு தலைவருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து மேலும் இரு தேர்தல்கள் நடக்கக்கூடும்.இத்தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளே பெருமளவிற்கு தீர்மானிக்கும் வாக்குகளாக மாறக்கூடும். கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை பெற்ற மக்கள் தமிழர்கள். தமது கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து ஐக்கியப்பட்டு கட்டுறுதி மிக்க ஒரு திரளாக மாறி கேந்திர முக்கியத்துவம் மிக்க உபாயங்களை வகுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் எழுக தமிழ் இடம்பெற்றது.

ஆனால் இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்து மிஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்கள் அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தந்திரோபாயங்களை இப்போதைக்கு வகுக்கப் போவதில்லை என்று கருதும் அளவுக்கே எழுக தமிழ் நிகழ்வுக்கு முன்னும் பின்னும் நடந்து வரும் உரையாடல்களும் விவாதங்களும் வசைகளும் அருவருப்பான முகநூற் குறிப்புகளும் உணர்த்துகின்றன.

எழுக தமிழ் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை கூறியது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு புலமையாளர். யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியை வகிக்கும் இவருடைய ஆலோசனையை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டார். அதன் விளைவே எழுக தமிழ்2019 ஆகும்.

அதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் எழுக தமிழ் வெற்றி. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் அனேகமானவை சிறுதிரள் வடிவிலானவை. அவற்றோடு ஒப்பிடுகையில் கடந்த திங்கட்கிழமை சுமாராக ஐயாயிரத்துக்கும் குறையாத மக்கள் முத்த வெளியில் திரண்டார்கள். அப்படி ஒரு பெரிய திரட்சி ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பை காட்ட முடிந்தது என்பது வெற்றிதான்.

மேலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ எழுக தமிழுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இது விடயத்தில் ஓரளவுக்கேனும் பெருந்தமிழ் பரப்பில் ஓர் ஒருங்கிணைப்பு காணப்பட்டது. அதுவும் ஒப்பீட்டளவில் ஒரு வெற்றியே.

எனினும் எழுக தமிழை ஒழுங்குபடுத்திய பேரவையின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் அது காணாது.
அதை ஒழுங்கு படுத்திய கட்சிகளின் நோக்குநிலையில் இருந்து பார்த்தாலும் அதை எதிர்த்த, குழப்பிய தரப்புக்களுக்கு அது அதிர்ச்சியூட்டும் ஒரு திரட்சி அல்ல.

இம்முறை எழுக தமிழுக்கு பல பாதகமான அம்சங்கள் இருந்தன.
முதலாவது – பேரவை பலவீனமாக காணப்பட்ட ஒரு சூழலுக்குள் இம்முறை எழுக தமிழ் ஒழுங்கு செய்யப்பட்டது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்து பேரவை தனக்குள் அங்கமாக காணப்பட்ட கட்சிகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் பலத்தை இழந்து விட்டது. முன்னைய எழுக தமிழில் ஒன்றாக காணப்பட்ட கட்சிகள் இம்முறை பிரிந்து நின்றன. சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியையும் சித்தார்த்தனின் கட்சியையும் அகற்றினால்தான் எழுக தமிழில் இணைவோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியது. ஆனால் சித்தார்த்தன் ஏற்கனவே வெளியேறிவிட்டார். இந்நிலையில் ஈபிஆர்எல்எப்ஐ அகற்ற பேரவை விரும்பவில்லை. இதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அரவணைக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன.

மாற்று அணிக்குள் ஏட்பட்ட முரண்பாடுகள் சந்திக்கு வந்து இரு தரப்பும் மாறி மாறி குற்றச் சாட்டுக்களை முன்வைத்தபோது அது சனங்களைக் குழப்பியது. சனங்கள் மத்தியில் சலிப்பும் விரக்தியும் எற்பட்டது. இது முதலாவது பாதகமான அம்சம்.

இரண்டாவது பாதகமான அம்சம்- எழுக தமிழ் என்ற எதிர்ப்பு வடிவத்தின் போதாமையும் தொடர்ச்சியின்மையும். எழுக தமிழைத் தாண்டி புதிய போராட வடிவம் ஒன்றைக் கண்டுபிடித்திராத வெற்றிடத்திலேயே இம்முறை எழுக தமிழ் முன்னெடுக்கப்பட்டது. அதைக் கண்டு பிடிப்பதென்றால் பேரவை தன்னைப் புனரமைக்க வேண்டும்.

மூன்றாவது பாதகமான அம்சம் – பேரவை எல்லா மாவட்டங்களையும் முழுமையாக பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு. இதுவும் பேரவையின் புனரமைப்போடு சம்பந்தப்பட்ட விடயம். இதிலும் கடைசி நேர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழு வெற்றி பெறவில்லை. எனினும் வெளி மாவட்டங்களில் இருந்து கணிசமான தொகையினர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். கிட்டத்தட்ட அரைவாசிப் பேருக்கு மேல்

நாலாவது பாதகமான அம்சம்- இதுவும் பேரவையின் புனரமைப்போடு சம்பந்தப்பட்ட விடயம். பேரவைக்கு உள்ளேயே காணப்பட்ட சில பொது அமைப்புகள் எழுக தமிழில் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை. உதாரணமாக ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கம் அதில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. ஐங்கரநேசன் முதலில் ஒப்புக் கொண்டபடி சில பொது அமைப்புகளை எழுக தமிழில் ஒருங்கிணைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. ஐங்கரநேசனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான புரிந்துணர்வில் ஏற்பட்டுள்ள நெருடல் காரணமாகவே அவர் எழுக தமிழில் முழுமனதோடு ஈடுபடவில்லை என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் விக்னேஸ்வரனுக்கு அரணாக நின்ற காரணத்தாலேயே ஐங்கரநேசன் அதிகமாக தாக்கப்பட்டார். ஆனால் விக்னேஸ்வரன் கட்சி தொடங்கியதும் அதற்குள் அவர் ஐங்கரநேசனுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதிலிருந்து தொடங்கிய இடைவெளி மேலும் அதிகரித்து வருவதன் விளைவாகவே ஐங்கரநேசன் எழுக தமிழில் முழுமனதோடு பங்கேற்கவில்லை என்று கருதப்படுகிறது. எனினும் அவர் நல்லூரில் பேரணி தொடங்கிய போது அதில் காணப்பட்டார்.

ஐங்கரநேசன் போலவே பல்கலைக்கழகமும் பேரவைக்கு நிபந்தனைகளை முன்வைத்தது. அதன்படி கட்சிகளுக்கு முதன்மை வழங்கக் கூடாது என்று அவர்கள் கேட்டார்கள். பேரணிக்கு முதல் நாள் இரவு வரையிலும் நிலைமை சுமுகமாகவில்லை. மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதில் பேரவைக்கு சங்கடங்கள் இருந்தன. ஏனெனில் விக்னேஸ்வரனின் கட்சியும் ஈபிஆர்எல்எப் கட்சியும்தான் எழுக தமிழை ஒழுங்கு படுத்துவதற்காக கடுமையாக உழைத்தன. தொடக்கத்திலிருந்தே உழைத்த கட்சிகளை நீக்கிவிட்டு முடிவெடுக்க பேரவை தயங்கியது.

மாணவர்கள் தொடக்கத்திலிருந்தே பேரணியை ஒழுங்குபடுத்துவதில் முழுமூச்சாக பங்கேற்று இருந்திருந்தால் கட்சிகளை முந்திக்கொண்டு அவர்களே பேரணியை முன்னெடுத்திருப்பார்கள். மாணவர்கள் மிகவும் பிந்தியே பேரவையோடு ஒத்து வந்தார்கள். தவிர பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் இல்லை. ஏனெனில் கடந்த வாரத்திலிருந்து பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. ஆர்பாட்டப் பேரணியில் நூற்றியைம்பதுக்கும் குறையாத மாணவர்களும் ஆசிரியர்களுமே கலந்து கொண்டார்கள்.

பேரணி முடிந்த கையோடு யாழ் பல்கலைக்கழகத்தின் துறைசார் தலைவர் ஒருவர் என்னோடு பேசினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்திற்கு பேரவை வழங்கிய ஒரு வாக்குறுதியின்படி கட்சிகளுக்கு முதன்மை வழங்குவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது என்றும் அந்த அடிப்படையிலேயே ஆசிரிய சங்கம் பேரணியில் பங்கு பற்றியது என்றும் ஆனால் கடைசி நேரத்தில் மேடையில் கட்சித் தலைவர்களை பேச வைத்து விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பேரவை ஆதரவு கேட்டபோது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இரண்டு விரிவுரையாளர்கள் கடுமையாக எதிர்ப்புக் காட்டியதாகத் தெரிகிறது. அவ்வெதிர்ப்பை மீறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேரணியில் பங்குபற்றினார்கள்.

ஆனால் பேரவைக்காரர்கள் கூறுகிறார்கள் எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்ட பொழுது மேடையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளே நிறுத்தப்பட்டார்கள் கட்சிப் பிரதிநிதிகள் அல்ல அதேசமயம் பேரணிக்காக உழைத்த கட்சிகளுக்கு பின்னர் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்று.

ஐந்தாவது பாதகமான அம்சம் – அது ஓர் அலுவலக நாள் என்பது. அதிலும் குறிப்பாக தமிழ் மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பது. அது ஒரு அலுவலக நாள் என்பதனால் பேரவை கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. ஒப்பீட்டளவில் கடையடைப்பு வெற்றி. மன்னாரிலும் வவுனியாவிலும் அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. மற்றும்படி வடக்கிலும் கிழக்கில் சில இடங்களிலும் நகரங்கள் முடங்கின. இவ்வாறு நகரங்களையம் தெருக்களையும் முடக்கிவிட்டு ஒரு பேரணியை ஒருங்கிணைக்கலாமா என்ற கேள்வி உண்டு. ஒரு முழு நாள் கடையடைப்பைக் கேட்காமல் சில மணித்தியாலங்கள் மட்டும் கடைகளை அடைக்க கேட்டிருந்தால் கடைகளில் வேலை செய்பவர்கள் பெருந்தொகையாக பேரணிக்கு வந்திருப்பார்கள் என்று ஒரு வர்த்தகர் சொன்னார்.

மேலும் கடையடைப்பின் மூலம் பாடசாலைகள் இயங்கவில்லை. அதாவது மாணவர்கள் பாடசாலைக்குப் போகவில்லை அல்லது குறைந்தளவே போனார்கள். ஆனால் ஆசிரியர்களும் அதிபர்களும் போனார்கள் அவர்களில் எத்தனை பேர் பேரணிக்கு வந்தார்கள்? அவர்களை பேரணிக்குள் இணைப்பதற்கு பேரவை என்ன நடவடிக்கை எடுத்தது?

அடுத்தது தனியார் கல்வி நிறுவனங்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தொகையும் ஒரு பெரிய தொகை. கடையடைப்பு இல்லை என்றால் அதுவும் பேரணியில் சேரும். இம்முறை அப்படியல்ல. இது ஐந்தாவது பாதகமான அம்சம்.

ஆறாவது பாதகமான அம்சம்- மழை. வவுனியாவிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் அரைவாசி அளவே வந்து சேர்ந்தது என்று கூறப்படுகிறது. காலை ஏழு முப்பது வரை கடுமையான மழை காரணமாக மக்களை ஏற்றி இறக்குவது கடினமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. எனினும் பேரணிக்கு மழைவிட்டுத் தந்தது.

இவ்வாறாக பல்வேறு சவால்களின் மத்தியில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இப்படிப் பார்த்தால் இதற்கு முந்திய எழுக தமிழோடு ஒப்பிடுகையில் இம்முறை சவால்கள் அதிகம். இச்சவால்களையும் மீறி ஐயாயிரத்துக்கும் குறையாதவர்கள் பேரணிக்கு வந்தார்கள். அவர்களில் அதிகமானவர்கள் வழமையாக வருபவர்கள். பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் முதியோரும் குழந்தைகளுமாக பேரணியை அவர்களே அதிகம் நிரப்பினார்கள். எனவே பேரணி தோல்வி என்று சொன்னால் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தோற்று விட்டார்கள் என்று பொருள் அல்லது பேரணி தோற்க வேண்டும் என்று யாராவது உள்ளூர விரும்பியிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தோற்பதை ரசிக்கிறார்கள் என்று பொருள்.

வந்த தொகை காணாது என்பதற்காக எழுக தமிழை கீழ்மைப்படுத்தும் அனைவரும் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். அதாவது தமது சொந்த மக்களின் போராட்ட நெருப்பை அவமதிக்கிறார்கள். அதில் சிலர் வக்கிரமான முறைகளில் விமர்சிக்கிறார்கள். தமிழ் எப்பொழுது விழுந்தது இப்பொழுது எழுவவதற்கு? என்று சிலர் கேட்கிறார்கள். வேறு சிலர் தமிழின் எழுச்சியை ஆண்குறியின் எழுச்சியோடு ஒப்பிட்டு ஒரு மக்கள் எழுச்சியை கேவலப் ப்படுத்துகிறார்கள். அவ்வாறு தமிழ் எழுவதற்கு என்ன லேகியம் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்கிறார்கள். சிலர் வயாகரா கொடுக்கலாம் என்று முகநூலில் எழுதுகிறார்கள்.

இத்தனை தமிழ் வக்கிரங்களின் மத்தியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பார்த்திபன் வரதராஜனின் பதிவை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் எழுக தமிழை ஆதரிக்காத ஒரு கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அவர். ஆனால் மக்கள் எழுச்சிக்கு மதிப்பளித்து அதை கொச்சைப்படுத்தக் கூடாது என்று நிதானமாக முகநூலில் பதிவிட்டிருந்தார். ஓர் இளம் அரசியல்வாதியின் அந்த முதிர்ச்சியும் நிதானமும் முன்மாதிரியானவை. தமிழ் கட்சிகளில் இருப்பவர்கள் அதை பின்பற்றினாலே போதும் தமிழ் தானாக எழுந்து விடும்.

அன்று முத்த வெளியில் ஜனத்திரளைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தேன். அப்பொழுது புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார் “என்னைக் கைது செய்து விசாரித்த புலனாய்வு அதிகாரியும் வந்து நிற்கிறார்” என்று. அந்த அதிகாரி மட்டுமல்ல அவரைப் போல பலர் அங்கே வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாருமே ஒருவித ரிலாக்ஸான மனோ நிலையோடு எழுக தமிழைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய வேலையை தமிழ்த்; தரப்புக்கள் இலகுவாக்கிக் கொடுத்ததை உள்ளுர ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்களா?