Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இலங்கையில் இணையவழிக்கல்வியிலுள்ள  சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

இலங்கையில் இணையவழிக்கல்வியிலுள்ள  சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

6 minutes read

இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசியகல்வி நிறுவகமும் கல்வியமைச்சும் இணைந்து தொலைக்காட்சியூடாகக் கற்பித்தலை நடாத்துகின்றது. இதை தவிர மாகாணக்கல்வித் திணைக்களங்களும், வலயக்கல்வி அலுவலகங்களும், பாடசாலைகளும், தனியார் கல்விநிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இணையவழிக்கற்றல், செயலட்டை, மாதிரிக்கற்பித்தற்காட்சிகள் என்பவற்றை நடாத்துகின்றன. இருந்தபோதிலும் இவற்றினை பயன்படுத்தல், தயாரித்தலில் பல்வேறுபட்ட சவால்கள் காணப்படுகின்றன.

முதலாவதாக மாணவர் சார்ந்த சவால்களை நோக்குகின்றபோது மாணவர்களுக்கிடையே காணப்படும் வசதி வாய்ப்புக்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே வேறுபடுகின்றன. பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் பொருளாதாரநிலையில் பின்தங்கியவர்களாக அன்றாடக் கூலி வேலைகளை மேற்கொள்பவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களிடம் சாதாரண தொலைபேசி ஒன்று இருப்பது கூட அரிதாகவே காணப்படுகிறது. இந் நிலையில் அவர்கள் வட்ஸ்அப். வைபர் குழுக்களிலும், நிகழ்நிலை வகுப்புகளிலும் கற்றலில் ஈடுபடுவது எவ்வாறு சாத்தியமானது என்பது முதலாவது வினாவாகும்? இதேவேளை நடுத்தரக் குடும்பங்களில் பிறந்த மாணவர்களிடம் ஓரளவு தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசி காணப்பட்டாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தொலைபேசிக் கட்டணங்களைச்  செலுத்தும் வசதியுடன் பெரும்பாலான குடும்பங்கள் காணப்படுவதில்லை. ஓரளவு வசதியுள்ள மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கற்கின்றனர் என்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதே சமயம் வசதியுள்ள மாணவர்கள் உள்ள குடும்பங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள போது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப வசதியுள்ள தொலைபேசிகள் தேவை இதுவும் ஒரு பாதகமான விடயம் ஆகும்.

இது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் இணைய வேகம் நகர கிராமப் புறங்களுக்கு இடையில் வேறுபாடுகளைக் கொண்டமைந்துள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புக்கள் இலங்கையில் எல்லாப் பிரதேசங்களுக்கும் இன்றும் வழங்கப்படவில்லை என்பதுவும் ஒரு சவாலான விடயம் ஆகும்.

இதேவேளை இடர்காலச் சூழலில் மாணவர்கள் தமது குடும்பத் தொழில்களில் ஈடுபடுகின்றமையால் கற்றல் கற்பித்தல் மேலும் ஒரு சவாலாகவே காணப்படுகிறது. இலங்கை கரையோரப் பிரதேசங்களைக் கொண்ட ஒரு விவசாய நாடாக இருப்பதனால், பாடசாலைகள் இயங்காத இடர்காலங்களில் மாணவர்கள் தந்தை மற்றும் உறவினர்களுடன் இணைந்து மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவதன் ஊடாக தமது குடும்பங்களின் பொருளாதார உயர்ச்சிக்கு உதவிபுரிகின்றனர். இவர்களை இணையவழிக்கல்வியின்பால் திருப்புதல் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் பாடசாலை இடைவிலகலும் அதிகரிக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை இணையவழிக்கற்றலை மேற்கொள்கின்ற மாணவர்கள்  கூடுதலாக தொலைபேசியூடாகவே கற்கின்றனர். தொலைபேசியின் திரை சிறியதாக இருப்பதால் தொடர்சியாக அதனை அவதானிப்பதன் மூலம் கண் காது போன்ற உறுப்புக்களில் கோளாறு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்கள்   பெரிய திரைகளையுடைய கணனிகளில் கற்கும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. இது ஒரு சவாலான விடயமாகும் அத்துடன்  மாணவர்கள் இணையத்துக்கு அடிமையாகக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் பெரிய திரைகளைக் கொண்ட கணனிகளை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முயற்சி எடுத்தது அரசியல் காரணங்களுக்காக அது கைவிடப்பட்டு இருந்திருக்காவிட்டால் இன்று இணையக்கல்வி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கும்  என்பது வெளிப்படையானது.

மாணவர்கள் தொடர்ச்சியாக இணைய இணைப்பை பயன்படுத்துவதன் ஊடாக தேவையற்ற இணையத்தளங்களுக்கு நுழையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ள போதும் பெற்றோருக்கு இவை தொடர்பான தொழில்நுட்ப அறிவு குறைவாகவே இருப்பது இணையம் மூலமான கற்றலில் ஒரு சவாலான விடயம் ஆகும்.

இதேவேளை இன்று ஆரம்ப இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கும் இணையம் மூலமான பரீட்சைகள் நடைபெறுவது அவர்களின் மனநிலையப் பாதிக்கின்ற விடயம் ஆகும். தொடர்ச்சியாகக் கற்றலில், ஈடுபடாமையினால் பாடத்தை மறந்து விடுவார்கள். எனவேதான் இணையவழிப் பரீட்சை என்கிறார்கள். கல்வி என்பது மனப்பாடக் கல்வியாக இருப்பதனையே இது குறிக்கின்றது. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு சூழலுடன் இணைந்த கற்றலே முக்கியமானது. உண்மைப் பொருட்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் ஊடாக கற்றல் அனுபவங்களை வழங்குகின்ற போதே ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு எண்ணக்கரு விருத்தி ஏற்படும். இங்கு குழந்தைகளுக்கு கல்வி இயற்கையின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்கின்ற இயற்கைவாதியான ரூசோவின் கருத்தும் நோக்கத்தக்கது.

இன்று இலங்கையில் நடைபெறும் இணையவழி வகுப்புக்கள் கால நேரம் அற்று காலை 3 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை நடைபெறுகின்றது. வசதி வாய்ப்புள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்தும் போது களைப்படைகின்றனர் பொருத்தமான ஆசிரியரை தேர்ந்து எடுப்பதிலும் இடர்படுகின்றனர். அத்துடன் சில பிரபல ஆசிரியர்கள் இதை சாட்டாக வைத்து பெற்றோரின் உழைப்பை சுறண்டுகின்றனர். அதே வேளை தேசியகல்விநிறுவகம், மாகாணக்கல்வித் திணைக்களங்கள், வலயக்கல்வி அலுவலகங்கள் போன்ற அரச நிறுவனங்கள் தமக்குள் ஒரு இணைந்த நேர அட்டவணையின்றி சம நேரத்தில் இணையவழி வகுப்புக்களை நடாத்துவதால் மாணவர்கள் எந்த வகுப்பில் கலந்து கற்பது என்பதில் இடர்படுகின்றனர். அத்தோடு அரச நிதியும் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

அடுத்ததாக ஆசிரியர் சார்ந்த சவால்களை நோக்குகின்ற போது இன்றைய ஆசிரியர்கள் பலர் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இது இணையவழிக் கல்வியின் ஒரு சவாலாக் காணப்படுகின்றது. ஓர் ஆசிரியர் ஒவ்வொரு நாளும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஏன் எனில் கற்கும் மாணவர்கள் வேகத்துடன் இருக்கின்றனர். நவீன தொழிநுட்பங்களை வேகமாக உள்வாங்கிக் கொள்கின்றனர். எனவே ஆசிரியர் அதே வேகத்துடன் ஓடியாக வேண்டும். ஆசிரியர் மட்டுமல்ல ஏனைய தொழில்துறையினரும் அதே வேகத்துடன் ஓடவேண்டும். ஒரு தையல்காரன் 2000 ஆண்டு தைத்தது போல் இன்று தைத்துக் கொண்டிருக்க முடியாது. இன்றைய சூழலில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ப அவர் தைக்கவில்லை எனில் அவருக்குத் தொழில் இல்லை. ஒரு தையல் வேலைக்கே புதிய நுட்பம் அவசியமாகின்ற போது அடுத்த தலைமுறைக்கு அறிவை போதிக்கும் ஆசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவு தேவையானது. ஒரு தையல் காரன் நவீன நுட்பங்களைப் பயன்படுத்தாவிடின் அது அவனது நஷ்டம் ஆனால் ஆசிரியர் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தாவிடின் ,காலத்தால் பின்தங்கியிருப்பின் அது அந்த மாணவர் சமூகத்துக்கு தான் நஷ்டம். எனவே ஆசிரியர் தன்னை சார்ந்த துறைகளை அறிந்து இருப்பதும் எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராக இருப்பதும் அவசியமானதாகும்.

ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறையும் இணையவழிக் கல்வியில் ஒரு சவாலே இன்று இணையக்கல்வி மூலம் நடாத்தப்படும் அநேக பாடங்கள் விரிவுரை முறையிலேயே நடைபெறுகின்றன. பின் நவீனத்துவ கல்விச்சிந்தனையாளர் போலே பிறைறி கூறுவது போல் ஆசிரியர்களுக்கு விபரிப்பு நோய்யுள்ளது என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு மாணவர்களும் வேறு வேறானவர்கள் அவர்களின் தனித்தன்மையினை கருத்தில் கொண்டே கற்றல்  கற்பித்தல் திட்டமிடப்பட வேண்டும். ஆனால் இன்றைய இணையவழிக் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையிலேயே கற்பித்தல் நடைபெறுவதனையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான கற்றல்  கற்பித்தலின் விளைவுகள் சந்தேகத்துக்குரியதே.

இதேவேளை ஆசிரியர்களின் உளப்பாங்கும் இணையவழிக் கல்விக்கு சவாலாகவே காணப்படுகின்றது. இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில் தாம் நேரடியாகக் கற்பிப்பதைத் தவிர்த்து மாற்றுக் கல்விமுறை தொடர்பான எதிர்மனப்பாங்குடனேயே பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் மனப்பாங்கில் வயது, அனுபவம், தொழிற்தகமை, பயிற்சியின் தரம் என்பன தங்கியுள்ளதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இன்றைய ஆசிரியர்களில் சிலர் தாம் வேலைக்குப் பாடசாலைக்குச் செல்வதனையே தியாகம் செய்வதனைப் போல் உணர்கின்றனர். அவர்கள் மேலதிகமாகத் திட்டமிட்டு இணையக்கல்வியில்  ஈடுபடுவது என்பது கற்பனைக்குரியதாகவே காணப்படுகின்றது.

இன்றைய ஆசிரியச் செயலமர்வுகள், பயிற்சிகளில் கற்றல் கற்பித்தல் தொடர்பான உளவியல்,சமூகவியல் கோட்பாடுகளுடன் இணைந்து தொழில்நுட்பம் தொடர்பான கற்கைகளையும் பயிற்சிகளையும் இணைப்பதன் ஊடாக இவ் சவால்களை வெற்றி கொள்ளமுடியும்.

இன்றைய சூழலில் சுயமாகவும், மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவும் பாடசாலை மட்டங்களில் வகுப்பறை மட்ட வைபர் குழுக்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகின்றது. இவ் செயலிகளின் தகவல் பாதுகாப்பு சிந்திக்க வேண்டிய விடயம் அத்துடன் பெண் ஆசிரியைகளின் தொலைபேசி  இலக்கங்கள் சமூகமட்ட வைபர் குழுக்களில் காணப்படுவதனால் பெண் ஆசிரியர்கள் தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இவை போன்ற பல்வேறு பட்ட சவால்கள் இணையவழிக் கற்றலில் காணப்படுகின்றது.

கற்றல் பரந்துபட்டது அதை வகுப்பறையில் அடைக்கக் கூடாது மாணவனுக்கு தனது வகுப்பறையையும் தாண்டி கற்றலுக்கு பல வழிகள் உண்டு என இவ் காலம் உணர்த்துகின்றது. அவற்றில் ஒன்று தான் இணையவழிக்கல்வி. எவற்றை பயன்படுத்தியும் மாணவர்கள் கற்க முடியும் ஆனால் மாணவர்களை எதன் முன்பும் தொடர்சியாக உட்கார வைப்பதால் மாத்திரம் முழுமையான கற்றல் நடைபெறுவதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இணையவழிக்கல்வி அனைத்து மாணவருக்கும் சமனான வாய்ப்பைத் தராது. பாகுபாடு உடையது. வசதியுடையவர் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறவும் வசதி குறைந்தவர்கள் பின்தங்கி நிற்கவும் வழிவகுக்கும். முதலில் வசதியுள்ள வசதிகுறைந்த அனைத்து மாணவர்களுக்கும் சமனான கற்றல் சூழலை உருவாக்க வேண்டும். கன்னங்கராவால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் சமத்துவமான இலவசக்கல்வி என்ற எண்ணக்கருவையே இணையக் கல்வி ஆட்டங்காண வைத்துவிடும். இன்றைய உலகில் சமத்துவத்தை விட ஒப்புரவுக்கு உயர்ந்த இடம் வழங்கப்படுகின்றது. வசதி வாய்ப்பு குறைந்தவர்களுக்கு மேலதிக வசதிகளை வழங்கி கல்வியினூடாக வசதி வாய்ப்பு உடையவர்களாக மாற்றுதல் வேண்டும். பின் நவீனத்துவ கல்விச்சிந்தனையாளர் இவான் இலிச் கூறுவது போல சமத்துவம் என்பது வசதியுடைவர்களை வசதியுடையவர்களாகவும் வசதியற்றவர்களை வசதியற்றவர்களாகவும் வைத்திருக்கவே பயன்படும் இதேயே இணையவழிக் கல்வியும் மேற்கொள்கின்றது.

கற்றல் பெரும்பாலும் வகுப்பறையில் நடைபெறுவதில்லை. சகபாடிகள், சூழல்கள் மூலமாகவே கூடுதலான கற்றல் இயற்கையில் நடைபெறுவதாக இவான் இலிச் கூறுகிறார்.

எது எவ்வாறு இருந்த போதும் மாணவர்களை ஏதோ ஒரு வழிமுறை மூலமாக ஆவது கற்றலுடன் தொடர்புபடுத்தி வைத்திருத்தல் நல்லது. எனவே ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், கல்வியியலாளர்கள் இணைந்து செலவில்லாத தொழில்நுட்பத்துடன் பாடங்கள் மாணவர்களைச் சென்றடையும் சாத்தியம் குறித்து சிந்திக்க வேண்டும்.

இராமச்சந்திரன் நிர்மலன்

கட்டுரையாளர் இராமச்சந்திரன் நிர்மலன் வ/கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.        

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More