செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்!

பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்!

5 minutes read

வெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப்  பின்னால் உள்ள குவி ஆடியைச்  சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.

குருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் புலம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.

கண் மருத்துவத்தில் இசுநெல்லின் கண் அட்டவணை (Snellen Eye Chart) பார்வைத் திறனைப் (Visual acuity)பரிசோதிப்பதற்கு  கண் பரிசோதனை  (Eye Exam) பயன்படுத்தப்படுகின்றது. இது அதிக ஒப்புமையுடைய எழுத்துக்களும், எண்களும் கொண்ட அட்டவணை. ஒரு தனிமனிதன் அதிக பட்சமாக 25 அடித் தொலைவில் பார்க்க முடிகின்றது. பெரும்பாலானவர்கள் அதே பொருளை 40 அடித் தொலைவில் காண முடிகிறதெனில் பார்வைத்திறன் 25/40 ஆகும். இதன் கருத்து பெரும்பாலான மக்களால் 40 அடித் தொலைவில் தெளிவாகப் பார்க்கும் பொருள் 25 அடித் தொலைவில் இந்த மனிதரால் காணமுடிகின்றது என்பதாகும்.

கண்புரை (Cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதல் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலை. இயல்பு நிலையில் இருந்து மாற்றமடைந்த ஒருவிதப் புரதத்தில் ஆனவை. கண்புரை என்றால் கண்ணில் திரை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுவதுண்டு. திரை என்பது இங்கு தோலில் ஏற்படும் சுருக்கத்தைக் குறிக்கின்றது. வயது சென்றவர்களில் ஏற்படும் கண்புரை ஒளிபுகாத்தன்மையுடன் ஆரம்பித்து முற்றாக ஒளிபுகா வண்ணம் ஏற்படும் சுருக்கம் ஆக உள்ளது. மார்காக்னிய கண்புரை (Margagnian Cataract) என்பது கண்வில்லையின் புறப்பகுதி (cortex)  பால்போன்ற திரவமாக மாறித் தடிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. இதனால் கண்வில்லையின் உறை உடைபடலாம். சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமோ என்ற கண்நோய் உருவாகலாம்.

கிட்டப் பார்வை (மையோபியா Myopia) என்பது கண்வில்லையின் புறவளைவுப் பகுதி அதிகரிப்பதனாலும், கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகின்றது. உட்செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் பொழுது ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகின்றது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகின்றது. இது கிட்டப்பார்வை எனப்படும். இந்தக் குறைபாட்டுக்குக் குழிவில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடிகள், தொடுவில்லைகள்(Contact Lenses) போன்றவற்றைப் பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம். சீரொளி(Laser Light)  மூலம் குறுதிருத்தும் அறுவையும் செய்து கொள்ளலாம். சீரொளி என்பது சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒளியாகும். இது ஏனைய ஒளிக்கதிர்கள் போலன்றி ஒரே அலைநீளம் கொண்டவையாக இருப்பதால் அலைமுகங்கள் ஒன்றாக ஒத்தியங்கக் கூடியவை.
எட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை (Hyperopia)) என்பது விழிக்கோளம் அல்லது விழிவில்லை செம்மையாக இல்லாமையால் உருவாகின்றது. இதனைத் தூரப்பார்வை (longsightedness or hypermetropia) என்றும் கூறுவர். இந்தக் குறைபாடு உள்ளவர்க்குப் பொருளின் படிமம் விழித்திரைக்குப் பின்னால் உள்ளதொரு புள்ளியில் குவியப்பட்டு தெரியும். இதனையும் குவிவுவில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடிகள் அல்லது தொடுவில்லைகள் மூலம் சரி செய்யலாம்.

மூப்புப்பார்வை (Presbyopia) அல்லது சாளேசுவரம் என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயது முதிர்ச்சியால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக்குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகக் கண்வில்லை மீட்சித்தன்மையை இழத்தல், கண்வில்லையின் அளவு பெரிதாகிக் கடினமாதல், கண்வில்லையின் வடிவத்தை மாற்றியமைக்கும் பிசிர்த்தசை வலுவிழத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

புள்ளிக்குவியமில் குறை (Astigmatism) என்பது விழிவெண்படலம் அல்லது வில்லையின் மேற்பரப்பு ஒழுங்கற்றதாகவோ அல்லது வீக்கமான துருத்தமாகவோ காணப்படுவதால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாட்டால் கண்ணின் ஒரு பகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாக அல்லது குறைவாக ஏற்படுகின்றது. இதனால் விம்பங்கள் சரியாகக் குவிக்கப்படுவதில்லை. பொருளின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னாலும் மறு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னாலும் குவிக்கப்படுகின்றன. இந்தக் குறைபாட்டினை கண்ணுக்கு முன் உருளைவில்லை வைத்துச் சரிசெய்து கொள்ளலாம். உருளைவில்லையின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இந்தக்குறைபாட்டைச் சரிசெய்து கொள்கின்றது.

விழித்திரை விலகல்(Retinal detachment)) என்பது கண்ணில் ஏற்படும் பாதிப்பாகும். விழித்திரையானது உட்சுவரில் இருந்து உரிவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்தப் பாதிப்பிற்கு உடனடியாகச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் பார்வையிழப்பு ஏற்படலாம். விழித்திரையில் சிறுதுளை ஏற்பட்டால் அல்லது கிழிந்தால் விழித்திரை விலக நேரிடும். இந்த இடைவெளியூடாக நீர்மம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகின்றது. இதனால் விலகிய விழித்திரையில் உள்வரும் ஒளிக்கதிர்களில் இருந்து தெளிவான படத்தைப் பெறமுடியாது. நீர்மம் என்பது நீர்வடிவில் உள்ள ஒரு பொருளைக் குறிக்கின்றது.
மாறுகண் என்ற குறைபாட்டை சோம்பேறிக் கண்நோய் என்றும் அழைப்பர். இந்தக் குறைபாட்டைச் சிறுவயதிலேயே சரிசெய்ய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. வயது வந்த பின்பு இந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதானால் மிகவும் செலவுமிக்க ஒப்பனைச் சத்திரசிகிச்சை (Cosmetic Surgery) முறையையே நாடவேண்டியிருக்கும். இந்தக் குறைபாட்டிற்கான அறிகுறியிருந்தால் உடனடியாகக் கண் வைத்தியரைப் பார்க்க வேண்டும். இந்தக் குறைபாடு இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் பார்க்க முடியாத தன்மையைக் குறிக்கின்றது. கண்விழியின் அசைவைச் செயற்படுத்தும் தசைநார்களின் குறைபாடே ஓரக்கண் பார்வையைக் கொடுக்கின்றன.
முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் ( Arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல் நிறம் கொண்ட ஒளிபுகாத வளையம் கருவிழிப்படலத்தைச் சுற்றிக் காணப்படுவதால் ஏற்படும் குறைபாட்டைக் குறிக்கும். இந்த வளையம் சிறுவயதில் காணப்பட்டுப் பின்னர் மறைந்து விடும். இது பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் காணப்படுகின்றது. குருதியில் அதிகமான கொழுப்பு அல்லது சீனித்தன்மை இருப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படலாம். இது கருவிழிப்படலத்தினைச் சுற்றிக் கொழுப்புப் படிவதால் ஏற்படுகின்றது.

மஞ்சள் காமாலை நோய் குருதியில் பிலிருபின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் சீதச்சவ்வு, விழிவெண்படலத்தின் மேல்பகுதியில் உள்ள கண் சவ்வு, தோல் பகுதிகள் மஞ்சள் நிறமடைதலைக் குறிக்கும்.

பனிக்குருடு(snow blindness) என்பது பனிபடர்ந்த பகுதிகளில் பனியால் எதிரொளிக்கப்படும் புற ஊதாக்கதிர்களை (UV Rays)  வெற்றுக் கண்களால் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கின்றது. கண்வலி, கண் எரிச்சல், கண்நீர் வழிதல், கண் கூசுதல் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

நீண்ட நேரம் கணினி பாவிப்பதால் கணினிப் பார்வை நோய்த் தொகுப்பு எனப்படும் தற்காலிக பாதிப்பு ஏற்படும். இதனால் தலைவலி, மங்கலான பார்வை, கண் சிவப்படைதல், கண் சோர்வு, கண்ணயர்ச்சி, உலர் கண் (dry eye) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கண் அழுத்த நோய் (Glucoma) என்பது பார்வை நரம்பு சேதமடைவதால் ஏற்படுகின்றது. இந்த நோயால் கண் தனது முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்தி விடுவதோடு முற்றான பார்வையிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த நோயினைத் திறந்த கோண கண் அழுத்த நோய், மூடிய கோண கண் அழுத்த நோய் என இருவகைப்படுத்துவர். மூடிய கோண கண் அழுத்த நோய் திடீரென ஏற்பட்டுப் பார்வை இழப்பைச் சடுதியாக ஏற்படுத்த வல்லது. திறந்த கோண கண் அழுத்த நோய் படிப்படியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

விழிப்புலனற்றவர்கள் அல்லது பாரிய பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரு ஏதனமாக வெள்ளைப் பிரம்பு (white cane)  விளங்குகின்றது. விழிப்புலனற்றவர்களின் ஒளிவிளக்காகவும், ஊன்றுகோலாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு உள்ளது. 1964ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 15ம் திகதியை சர்வதேச ரீதியில் வெண்பிரம்பு பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. பிறிஸ்ரலைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவரால் 1921ஆம் ஆண்டு வெள்ளைப் பிரம்பு கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஒரு விபத்தினால் பார்வையை இழந்த ஜேம்ஸ் பிக்ஸ் வீதியில் செல்லும் வாகனங்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு வெள்ளை நிறம் பூசப்பட்ட தடியைப் பயன்படுத்திக் கொண்டாராம். பத்து வருடங்களின் பின்பு வெள்ளைப் பிரம்புப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் இதன் தொழில்நுட்பம் அதிகரிக்கப்பட்டது. கலாநிதி றிச்சார்ட் கூவர் நீளமான வெள்ளைப் பிரம்பை உருவாக்கினார்.

1931ஆம் ஆண்டில் முரேல் குறூக், ரோசமன்ட் பொண்ட் என்ற இரண்டு பிரித்தானியப் பெண்களால் முதன் முதலில் நான்கு வழிகாட்டு நாய்களுக்கான(Guide Dogs)  பயிற்சி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 16ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியங்களில் வழிகாட்டு நாய்கள் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. வழிகாட்டு நாய்கள் பார்வையற்றவர்களின் வழிகாட்டிகளாக இன்றும் பயன்படுத்தப்படுகின்றது.

 

தொடரும்..

நன்றி : அகணி சுரேஸ் (சி.அ.சுரேஸ் B.Sc.Eng., MSC in Computing) | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More