Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் இலங்கை கிரிக்கேட் அணியும்: மதிசுதா

தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் இலங்கை கிரிக்கேட் அணியும்: மதிசுதா

9 minutes read

(இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன்.)

தமிழிழீம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும்.

யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை விட பாலிநகரில் எனது ஆரம்ப கால குருவான தவராஜா சேரால் ( Sepamalai Thavarasa ) ஒரு அணியும் முல்லைத் தீவில் சென்யூட் மற்றும் வித்யா அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்தன.

தேசிய மட்டத்தில் இடம்பெறும் மிக முக்கிய போட்டிகளாக 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியான சங்கர் கிண்ணமும் 20 ஓவரைக் கொண்ட T20 போட்டியான ரமணன் கிண்ணமும் மற்றும் NEC இன் T20 போட்டித் தொடரும் அடங்கும்.

கிளிநொச்சியில் 2007 இன் ஆரம்பங்கள் வரை இளந்தென்றல் அணியே கொடிகட்டிபறந்தது அதன் நிர்வாகப் பொறுப்பை புலனாய்வுத்துறையின் தலமைச் செயலகத்தைச் சேர்ந்த பிரசன்னா கவனித்துக் கொண்டார். அவர்களது பலத்தின் காரணமே கர்ண கொடூரமான ஆரம்ப வேகப்பந்து விச்சாளர்கள் தான்.

1) செந்தாமரை (எ) செந்தா 2) ராஜ்குமார் (புலிகளின் குரல் செய்திவாசிப்பாளரான அன்பரசியின் கணவர்)

Image may contain: 4 people, including MaThi Sutha, people smiling, people standing, outdoor and text

அதே 2007 காலப்பகுதியில் தான் எமது மருத்துவக்கல்லூரி அணி வைத்தியராக இருந்த அமுதனால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பொருட்கள் சேகரிப்பதற்கு மும்முரமாக இருந்தது சிவதரண்ணா ( Sivatharan Sivapathasundaram ) தான். மென்பந்து அணியாக இருக்கும் போது கற்கைகளுக்காக நான் அணித்தலைமையில் இருந்து விலத்திய பின் சிவதரண்ணா தான் அணியை வழி நடத்தினார் பின்னர் கடினப்பந்தான பின் என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பப் போட்டிகளிலேயே இளந்தென்றல் அணியை வெல்லாவிடினும் அவர்களுக்கு அச்சுறுத்தலாகப் போராடினோம்.

எங்கள் ஆட்டம் எமது தலைமை மருத்துவரும் கிரிக்கேட் வெறியருமான சுஜந்தன் டொக்ரரை கவர எமது அணியை நிரந்தரமாக்குவது என்றும் அணி வீரர்களின் கடமைகளுக்கு பிரதியீடாக ஏனையவரை அனுப்புவதும் என முடிவாகிறது. அதற்கு கற்கை நேரங்களை மாற்றியதுடன் வாமன் டொக்ரரும் மலரவன் டொக்ரரும் தமது கடமை தவிரந்த ஏனைய நேரங்களில் எங்களோடு செலவிட்டார்கள் பிற்பகுதியில் தூயவன் டொக்ரரும் இசைவாணன் டொக்ரரும் இணைந்து கொண்டனர்.

நட்புரீதியான ஆட்டம் ஒன்றில் இளம்தென்றல் அணியை வெல்கிறோம் அந்த வெற்றி மேல்மட்டங்கள் வரை கடத்தப்பட எம் நிகழ்வு ஒன்றுக்கு வந்த தமிழ்ச்செல்வன் அண்ணை மேலிடத்தின் வாழ்த்தை நேரடியாகப் பரிமாறிச் சென்றார். காலை , மாலை என தொடர் பயிற்சிக்கு நேரம் அளிக்கப்பட்டாலும் இடை நேரத்தில் கற்கையும் அது தவிர்ந்த நேரத்தில் மருத்துவக் கடமைக்கும் என ஒரு சுற்றுவட்டத்தில் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தோம். காரணம் அக்காலப்பகுதியில் பள்ளமடுப் பகுதியிலும் முகமாலையிலும் மணலாறிலும் உக்கிர சண்டை நடந்து கொண்டிருந்த நேரமாகும்.

கிளிநொச்சி முத்தவெளி விளையாட்டு மைதானத்தில் சங்கர் கிண்ண ஒருநாள் போட்டிகளின் தெரிவு அணிக்கான கிளிநொச்சி மாவட்ட இறுதிப் போட்டியில் இளந்தென்றல் அணியை எதிர் கொள்கிறோம். நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரமது. அதை வென்றால் தேசிய மட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது அணியான வித்தியாவை எதிர் கொண்டு இலகுவாக இறுதிப் போட்டிக்கு வரலாம்.

ஆனால் 8 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த தர்சண்ணா ( Sayeetharshan Kannan ) அடித்த அரைச்சதத்தால் அப் போட்டி தோற்கிறோம்.

அணித்தலைவரான நான் தோல்விக்கான முழுக் காரணத்தை ஏற்றாலும் அன்று அமுதன் டொக்ரரிடம் வாங்கிய தண்டனை என்பது மிகுதி 10 பேருக்குமான ரோசத்தைக் கிளறுவதற்காகவே எனக்கு வழங்கப்பட்டது.

Image may contain: 2 people, including MaThi Sutha, people smiling, people standing and outdoor

அடுத்த ஒருவாரத்தில் சென்யூட் உடனான அந்த அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கிறோம். முல்லைத்தீவின் சம்பியன் அணியான சென்யூட் ஐ வென்றால் தான் இறுதிப் போட்டியாகும். அதன் தலைவர் ஹாட்லிக் கல்லூரியின் தலைவராக இருந்த கோகுலன் ஆவார். தோற்ற எம் அணி மைதானத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற தண்டனையும் அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்குரிய இன்னொரு சோடி உடைகளும் பாடப்புத்தகங்களும் அளிக்கப்படுகிறது. குளிப்பதற்கும் கழிவுக் கடன் கழிப்பதற்கு மட்டும் விளையாட்டுத்துறையின் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 3 நேரச் சாப்பாடும் மைதானத்துக்கு தரன் மூலம் வரும். காலை 6-11 வரையும் பிற்பகல் 3-6 வரையும் பயிற்சி இடை நேரத்திலும் இரவிலும் மைதானத்தில் தான் கற்கை. இத்தண்டனைக்குரிய காரணம் எமக்காக கடமையேற்ற சக மாணவருக்கு நாம் கொடுத்த பரிசான தோல்வி என்பதை எவரும் ஜிரணிக்கவில்லை.

ஆனால் அடுத்தவார அரையிறுதியில் சென்யூட் அணியை வெல்கிறோம். ஆனால் மறுபக்கம் தேசிய இறுதிப் போட்டிக்கு மீண்டும் இளந்தென்றல் வந்தாலும் சென்யூட் உடனான வெற்றி எம்மை மைதானத்தில் இருந்து விடுதலை செய்கிறது. அவ்வெற்றிக்கும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைக்கிறது. இறுதிப் போட்டியில் இளந்தென்றலை வென்று அவர்களிடம் இருந்த கிண்ணத்தை பெறுகிறோம்.

NEC இன் T20 இன் தொடரின் ஆரம்பத்தில் எனக்கு காலில் ஏற்பட்ட என்பு வெடிப்பால் உதவித் தலைவராக இருந்த நிரோஷ் அணியை வழி நடத்த ஆரம்பிக்கிறான்.

அந்நேரம் எங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது. திருகோணமலையில் இருந்து இலங்கை A அணியின் குழுவுக்குத் தெரிவாகி பின் போராட்டத்தில் இணைந்திருந்த அருண் அண்ணையை அணிக்குள் அனுப்பவுதற்கான அனுமதியை தலைமைச் செயலகம் கொடுக்கிறது. அணியின் பலம் அதிகரிக்கிறது. அதன் பின் ரொசான், பார்த்தி ( Parthi Theepan) , அமலன் என புதிய வீரர்கள் உள்வாங்கப்பட அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பல வீரர்கள் வெளியேறி மருத்துவக் கடமையில் இணைந்து கொள்கிறார்கள்.

(சிவதரன் அண்ணை , கிரி , அரவிந்தன் , மயிலழகன் , சபேஷ் , ஜெயசீலன் , அசோக் என ஒரு பட்டியலே உள்ளது) அதன் பின் NEC இன் T20 இன் லீக் ஒன்றிலும் இறுதிப் போட்டியிலும் இளந்தென்றலை வெல்கிறோம். அவ் இறுதிப் போட்டிக்கு அணி மீண்டேன் ஆனா அவ் இறுதிப் போட்டிக்கு எந்த அணியிலுமே நடக்காத ஒன்று நடந்தது. இருவர் அணித்தலைவராக செயற்பட்டோம்.

அந்த போட்டியில் நான் எடுத்த 4 கடுமையான பிடிகளுக்காகவும். இறுதி விக்கேட்டான சதீசை மட்டும் வைத்துக் கொண்டு செந்தா அண்ணா வீசிய போட்டியின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தைப் பெற்று அணியை வெற்றி பெற வைத்ததற்காகவும் சிறந்த ஆட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டேன்.

மருத்துவப்பிரிவின் பொருப்பாளரான ரேகா அண்ணை தலைமையின் பாராட்டுடன் நேரடியாக வருகிறார். அவர் ஒதுக்கிய பணத்திலேயே அன்றைய ஐஸ்கிரீம் விருந்து வீரர்களுக்கு கொடுக்கப்பட்டாலும். ஒத்துழைத்த கல்லூரி மணவர்களுடன் A9 விடுதியில் பெரிய விருந்தளிக்கப்படுகிறது. எமது அணிக்கு இந்தளவு முன்னுரிமை கொடுக்கப்பட்டதற்குக் காரணம் எல்லோரும் சராசரி 22 வயதை கொண்டவர்கள். அதில் 8 வேகப்பந்து வீச்சாளர்கள். 9 பேர் சகலதுறை வீரர்கள். இந்த அணி தமிழீழ தேசிய அணியல்ல ஆனால் அப்படி ஒன்று உருவாகுவதற்கு இதில் உள்ளவர்களின் பயமே இல்லாத அந்தத் துணிவு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பினர்.

காரணம் பயிற்சியின் போது சுஜந்தன் டொக்ரர் இதைத் தான் சொல்வார். ”லேதர் போல் என்பது ரவுண்ஸ் அல்ல அதனால் உங்களைத் துளைக்க முடியாது அதால பயப்படாதிங்கோ” இந்த வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறது என இப்ப புரியாது ஆனால் சண்டைக்குள் குண்டு துளைக்கும் என தெரிந்தே இருப்பவர்களுக்கு இந்த துளைக்காத குண்டில் என்ன பயம் வந்துவிடப் போகிறது.

இவை எல்லாம் வரலாறுக்காக கூறினேன்.

இனி சொல்வது தான் மேலிடத்தின் தூர நோக்காகும். கேணல் ரமணன் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பிக்க இருந்த நிலையில் இராணுவம் ஒரு பக்கம் மல்லாவிக்கும் முழங்காவிலுக்கும் வந்து விடுகிறது. அதனால் போட்டித் தொடரை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரான ராஜா அண்ணா தலைமைச் செயலகத்துக்கு அறிவிக்கிறார். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் நாட்டிற்கு இதுவும் தேவையானது தான் போட்டித் தொடர் நடக்கட்டும் என்பதே.

ஆனால் கடமைகளுக்காக நானும் , கேசவனும் , சதீசும் சண்முகராஜா டொக்ரரால் முள்ளியவளை அழைக்கப்பட்டோம். அருண் அண்ணை சண்டை அணிக்குள் போன இடத்தில் வீரச்சாவடைந்து விடுகிறார். மற்றவர்களும் வெவ்வேறு பக்கம் கடமை நிமித்தம் சென்று விட போரும் உக்கிரமாக அந்த கனவு அணி உடைந்து போகிறது. அதன் பின் அமலனும் தலையில் ரவை ஒன்று பாய்ந்து இறந்து போகிறான்.

இலங்கை தேசிய அணியில் தமிழருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஏன் தலைவரின் சிந்தனையை பின்பற்ற தவறுகிறோம்.

எம் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அணியை உருவாக்கி போட்டிகளை வைத்து ஒரு மாகாண அணியை உருவாக்குவோம் அதைக் கொண்டு அத்தனை சிங்கள கழகங்களுக்கும் அடிப்போம். ஏன் வெளிநாட்டுக் கழகங்களுக்கும் போய் அடித்து எம்மை நிருபிப்போம். அயர்லாந்தைச் சேர்ந்த இயான் மோகனையும், இந்தியாவைச் சேர்ந்த நசீர் குசைனையும் அணித்தலைவராக்கிய இங்கிலாந்து அணி ஒரு ஈழத்தவனை அணிக்கு எடுக்காதா ? துரை சிங்கத்திற்கு இடம் கொடுத்த கனடா அணி எம்மவருக்குக் கொடுக்காதா ?

எல்லாவற்றுக்கும் முதல் சென் பற்றிக்ஸ் இல் மட்டும் புல்தரை ஆடுகளத்தை வைத்துக் கொண்டு தேசிய அணிக்கு ஆசைப்படும் நாம் எம் வீரர்களை மெட்டிங் இல் இருந்து புற்தரை ஆடுகளத்துக்கு மாற்றி விட்டு எம் கனவுகளைக் காணலாம் காரணம் மெட்டிங் இல் ஆடும் ஒருவரால் புற்தரைக்கு பழக்கமாகவே நீண்ட காலம் எடுக்கும்.

தீர்வுப் பொதிக்காக மட்டும் மேசைக்கு மேலால் போராடிக் கொண்டிருக்கும் எம் அரசியல் தலமைகளை எம் அடையாளங்களுக்காகவும் கொஞ்சம் போராடச் சொல்லுவோமாக ?

குறிப்பு – (அவர்களில் செந்தா அண்ணை சண்டை ஒன்றில் இறந்து விட்டார் அந் நேரம் சிறந்த வீரர்களாக இருந்த நவநீதன் , அச்சுதன் போன்றோர் இப்போதும் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களை விட சோலைக்கு விளையாடிய கீரன் மிகச்சிறந்த சகலதுறை வீரர்.)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More