Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் `ஏம்மா… இத்தனை நாளா வரலை?’ கதறிய சிறுவன்; 6 மாத பிரிவு கண்ணீர்வடித்த தாய்

`ஏம்மா… இத்தனை நாளா வரலை?’ கதறிய சிறுவன்; 6 மாத பிரிவு கண்ணீர்வடித்த தாய்

5 minutes read

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தாயைப் பிரிந்து தவித்து வந்த தருண் என்ற சிறுவன் இன்று அம்மாவிடம் சேர்க்கப்பட்டான். `என்னை ஏன் இத்தனை நாள்களாகக் கூட்டிப்போக வரவில்லை?’ எனக் கூறி அவன் அழுதது நெகிழ வைத்தது.

அம்மாவுடன் தருண்

அம்மாவுடன் தருண் ( ம.அரவிந்த் )

தாயைப் பிரிந்து தவித்து வந்த சிறுவனை குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டுப் பாதுகாத்து வந்தனர். ஆறு மாதகால பிரிவுக்குப் பிறகு தாயுடன் அனுப்பப்பட்டார் சிறுவன்.

தருண்
தருண்

கரூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் நலக் குழுவால் மீட்கப்பட்ட தருண் என்ற 5 வயதுச் சிறுவனின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. `சிறுவனைப் பற்றிய விவரம் தெரிந்தவர்களோ, உறவினர்களோ உரிய ஆவணங்களுடன் வந்து அழைத்துச் செல்லலாம்’ எனக் குழந்தைகள் நலக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.இதைப் படித்த வாசகர்கள், வாட்ஸ்அப், முகநூல் என சமூக வலைதளங்களில் செய்தியைப் பரவச் செய்தனர். இதையடுத்து தருணின் பெற்றோர் யார் என்பது பற்றிய விவரம் தெரியவந்தது. அத்துடன் சிறுவனை அவனின் அம்மாவிடம் ஒப்படைக்கும் நெகிழ்ச்சி சம்பவமும் நடைபெற்றது.

அம்மாவுடன் தருண்
அம்மாவுடன் தருண்

குழந்தைகள் நலக் குழுவின் தஞ்சை மாவட்டத் தலைவர் திலகவதியிடம் பேசினோம். “தருண் உட்பட மூன்று குழந்தைகளைக் கரூரில் இருந்து மீட்டு எங்களிடம் அனுப்பி வைத்தனர். நாங்கள் அவர்களிடம் அன்பாகப் பேசி விசாரித்ததில், மூன்று குழந்தைகள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை ஒப்படைத்தோம். ஆனால், தருண் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. பாசத்துக்காக ஏங்கிய அவன் கண்களில் நீர் கசிய, `என்னைக் கூட்டிட்டுப் போக அம்மா வரலையா?’ எனக் கேட்டது எங்களை வேதனையடைய வைத்தது.

தருண் பற்றிய செய்தி முதலில் விகடனில் வெளியானது. அவை சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவியது. இதையடுத்து அடுத்த சில மணிநேரங்களிலேயே தருணின் பெற்றோர் பற்றிய விவரம் தெரியவந்தது. அவனின் அம்மா, பாட்டி லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலர் தருணை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, உரிய ஆவணங்களைப் பெற்று கொண்ட பிறகு ஹோமில் இருந்த தருண் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டான்.

தருண்
தருண்

தருண் நடந்து வரும்போதே, `இன்றைக்காவது அம்மா என்னை அழைக்க வந்திருப்பாரா?’ என்ற தவிப்பும் ஏக்கமும் அவன் முகத்தில் தெரிந்தது. ஒரே கூட்டமாக இருக்கவே, தாயைத் தேடிக்கொண்டே வந்தவன் அவரைப் பார்த்ததும் `அம்மா’ எனக் கத்தியபடியே ஓடிவந்து கட்டிக்கொண்டான். `ஏம்மா இத்தனை நாளா வரலை?’ எனக் கலங்கினான். மகன் கிடைத்த சந்தோஷத்தில் தருணின் அம்மாவுக்குப் பேச்சே வரவில்லை தருண் முகத்தில் அப்படியே அவர் முகத்தை புதைத்து கதறினாள்.

கிட்டத்தட்ட 6 மாத காலம் தன் மகன் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாமல் ஏங்கி தவித்த அந்தத் தாயின் முகத்தில் மகிழ்ச்சியும் அழுகையும் ஒரு சேர கரைபுரண்டன. இதைக் கண்ட அனைவரும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கினர். `இனிமேலாவது மகனை நல்லா பார்த்துக்கங்க’ எனக் கூறி தருணை அவன் அம்மாவிடம் ஒப்படைத்தோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
திலகவதி
திலகவதி

தருணின் அம்மா வசந்தியிடம் பேசினோம். “எனக்கு 2 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் கடைசி மகன் மாசானிக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளது. இதனால் என் தங்கையிடம் தருணை ஒப்படைத்தேன். என் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். அடிக்கடி பிரச்னை செய்து வந்தார். தருண், அப்பாவுடனேயே அதிகம் இருப்பான். அவர் வேலைக்குச் செல்லும் இடத்துக்கு எல்லாம் அவனை அழைத்து செல்வார். அடிக்கடி வெளியூர் வேலைக்குச் செல்லும்போதும் அழைத்துச் செல்வது வழக்கம். மாசானியைப் பார்த்து கொள்வதற்காக, `இவன் அப்பாவிடமே இருக்கட்டும்’ என்று நானும் விட்டுவிட்டேன்.

இந்தநிலையில்தான் தருண் காணாமல் போய்விட்டான் என குடிபோதையில் வந்து என் கணவர் கூறினார். குடிப்பதற்கு பணம் வாங்குவதற்காக பல பொய்களைக் கூறுவது அவர் வழக்கம் என்பதால் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் அத்தை லட்சுமிதான் வீட்டுவேலை செய்து என்னையும் மூளை வளர்ச்சி குன்றிய என்னுடைய மகனையும் பிள்ளைகளையும் கவனித்து வருகிறார். மகனைக் கவனிப்பதிலேயே நேரம் சரியாகிவிடுவதால் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எப்படியாவது தருணை அழைத்துக்கொண்டு கணவர் வருவார் என இருந்தேன். ஆனால், தருண் காணாமல் போனது உண்மையென செய்தியில் வந்ததைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

தருண்
தருண்

என் புள்ளை இத்தனை நாளா எப்படி தவிச்சுப் போயிருப்பான். என் கணவரால இவ்வளவு கஷ்டத்தையும் இந்தப் பிள்ளைகளுக்காகத்தானே தாங்கிக்கொண்டு உசுற கையில் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இனிமேல் என் பிள்ளையை எங்கும் விடமாட்டேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் கூடவே வைத்திருப்பேன். பிள்ளையை மீட்டுக் கொடுத்த கடவுள், நாங்க நல்லா வாழ்றதுக்கும் ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் என நம்புகிறேன்’ எனக் கலங்கியபடியே பேசி முடித்தார்.

எழுதியவர் – கே.குணசீலன். புகைப்படங்கள் ம.அரவிந்த். நன்றி – ஆனந்த விகடன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More