இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் – பாரிஸ் நகருக்கு இன்று (10) திடீர் விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) சந்தித்து, சுமார் அரை மணி நேரம் அவர் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தில் பிரதமர் ரிஷி சுனக்குடன் உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman) மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர் தெரேஸ் காஃபி (Therese Coffey) ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இங்கிலாந்துக்குள் சிறிய படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாகவே இந்த விஜயம் பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாய் ஊடாக புகலிடக் கோரிக்கையாளர்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, பிரான்ஸ் கடற்பரப்பில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இரு நாடுகளும் எவ்வாறு நிதியளிப்பது என்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தக் கலந்துரையாடலின் முழு விவரம் வெளியிடப்படவில்லை.
ஆனால், இங்கிலாந்தை அடைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை, பிரான்ஸுக்கு அனுப்பும் அல்லது ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள் – புதிய புகலிடத் திட்டம் ‘கவலைக்குரியது’ – ஐ.நா
புலம்பெயர்வோருக்கு ‘வாழ்நாள் தடை’
இதேவேளை, சிறிய படகுகளில் கால்வாயைக் கடப்பதை தடுத்துநிறுத்த இங்கிலாந்திடமிருந்து பிரான்ஸ் அதிக பணம் பெறும் என்று, அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறு இருக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் 200 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து பிரான்ஸுக்கு கொடுத்துள்ளதாக த டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கிலாந்தின் புதிய புகலிடத் திட்டத்தின் படி, சட்டவிரோதமாக சிறிய படகுகளில் இங்கிலாந்துக்குள் நுழைந்த எவரும் 28 நாட்களுக்குள் இங்கிலாந்தில் இருந்து அகற்றப்படுவதோடு, எதிர்காலத்தில் இங்கிலாந்துக்குத் திரும்புவது அல்லது குடியுரிமை கோருவதும் தடுக்கப்படவுள்ளது.
இங்கிலாந்தின் கடற்கரைகளுக்கு வருபவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் அல்லது ருவாண்டா போன்ற மற்றொரு பாதுகாப்பான நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
Close neighbours. Great friends. Historic allies. 🇬🇧🇫🇷
It's great to be in Paris @EmmanuelMacron. pic.twitter.com/s7eRLY80Zk
— Rishi Sunak (@RishiSunak) March 10, 2023