பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூரில் அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணித்துள்ளனர்.
கட்டிடம் ஒன்று தீ பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டிடத்தில் பரவி இருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கட்டிடத்தின் ஒருபகுதி உருத்தெரியாமல் சிதைந்து விழுந்தது.
இது குறித்து தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தின் பேரில் தாக்குதல் இடம்பெற்றதா என்ற நோக்கத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.
எனினும், வீட்டில் திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பிரிட்ஜ் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் வீடு தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர். மேலும், முழுவதுமாக வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.