Monday, February 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கையெழுத்து | சிறுகதை | இரா.நாறும்பூநாதன்

கையெழுத்து | சிறுகதை | இரா.நாறும்பூநாதன்

6 minutes read

ம்ஹும்..சரியாக வரவில்லை.

இந்த முறை கடைசியாக வரும் ‘ன்’ வரவில்லை.

சங்கரநாராயணன் சாருக்கு கை விரல்கள் லேசாக நடுங்கின.

“இன்னொருக்க போடுங்க சார்.. கடைசில ‘ன்’ வரணும்” என்றான் முருகேசு.

தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இன்னும் சற்று வசதியாய் உட்காரணும் போலிருந்தது அவருக்கு. புரிந்து கொண்ட முருகேசு, “நீங்க நல்லா ஒக்காந்துக்கோங்க..அவசரமில்லாம நிதானமாய் போட்டா போதும்..” என்றவன், தனது இருக்கை அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து சாரிடம் நீட்டினான்.

“கொஞ்சம் தண்ணீ குடிச்சுக்கிறீங்களா?”

அவருக்கு அப்போது தாகம் இல்லை என்றாலும், ஒரு சிறு இடைவெளி தேவையாக இருந்தது.

மனதுக்குள் எண்ணங்கள் ஓடின. “கடைசியாய் எப்போது கையெழுத்து போட்டோம்?”

தண்ணீர் பாட்டிலை எடுத்து அண்ணாந்து குடித்தார். கொஞ்சம் சட்டையில் சிந்தியது. தோளில் போட்டிருந்த அங்கவஸ்திரத்தால் துடைத்துக் கொண்டார்.

இப்போ என்ன வேலைக்கா போகிறார் ..அடிக்கடி கையெழுத்துப் போட.

ஆசிரியர் பணியில் இருந்து ரிட்டயர்டு ஆகி பதினைந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இந்த மாதிரி வங்கிக்கு வந்து பென்ஷன் பணத்தை எடுக்க… சமயங்களில் கார்பொரேஷன் ஆபீஸ் போனால் மனு எழுதிக் கொடுக்க .. ஹிந்து பேப்பர் படித்து விட்டு ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’க்கு எழுதிப் போட.. என்று தான் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது..கொஞ்ச காலம் அதுவும் குறைந்துபோய் விட்டது. குறைந்து என்ன… நின்றே போய் விட்டது என்றுதான் சொல்லணும்.

ஒருமுறை சாலையில் நடந்து சென்றவரை, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவன் தட்டி விட்டுச் சென்றான்.

“பெருசு.. நீயெல்லாம் இந்த வயசுல வீட்டில கெடக்க வேண்டியதானே..” என்று திட்டி விட்டு வேறு சென்றான். வலது கால் முட்டியில் நல்ல சிராய்ப்பு. பால் ஊற்றும் பரமசிவம் தான் அவரைத் தூக்கி விட்டான்.

“நீ ஒழுங்கா ஒட்டிட்டுப் போலே மூதி… பேசுறான் நல்லாப் பேச்சு..” என்று அவனை ஏசி விட்டு, இவரை கைத்தாங்கலாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். சிவந்த முட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வேட்டியை நனைத்தது.

மகன் சபாபதி பதறிப் போனான்.

“ஏன்பா… இன்னைக்கு வெளியே போனீங்க… ஊருல ஆயிரம் அநியாயம் நடக்கும். நீங்க மனு எழுதிப் போட்டா எல்லாம் சரியாயிருமா..? பேசாம வீட்ல இருங்க…” என்று சொன்னபோது, இரு சக்கர வாகனத்தில் திட்டி விட்டுப் போனவனுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று அவருக்குத் தோணியது. அதற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே போவதே இல்லை.

ஹிந்து பேப்பர் படிப்பதோடு சரி… லெட்டர் எழுதிப் போடுவது இல்லை. ஒருமுறை சபாபதியிடம் கார்டு வாங்கி விட்டு வரச் சொன்னபோது “கார்டு ஸ்டாக் இல்லையாம்பா..” என்றான்.

என்ன சொல்றான்? போஸ்ட் ஆபீஸ்ல போஸ்ட் கார்டு ஸ்டாக் இல்லாமல் போகுமா? தனது எழுபத்தைந்து வயது சர்வீஸில் இப்படி கேள்விப்பட்டதே இல்லையே… யாருமே போஸ்ட் கார்டு வாங்குவதில்லையா? இதை யாரிடம் கம்பளைண்ட் பண்ண? கை துறுதுறுத்தது.

“யாருப்பா இப்பல்லாம் லெட்டர் போடுறா? ஈமெயில் வந்தாச்சு… மொபைல்ல அனுப்பீருதாங்க… போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர்லாம், தந்தி மாதிரி சீக்கிரமே அழிஞ்சு போயிடும் பா..” என்று அவன் சொன்னபோது, அவர் உடல் அதிர்ந்து போனது.

கையால் எழுதுவது அவ்வளவு கேவலமா? போஸ்ட் கார்டு அழிஞ்சே போகுமா..? அவர் நண்பர்கள் எழுதிய கடிதங்கள் தான் எத்தனை எத்தனை… அவரது டிரங்க் பெட்டியில் பாதி இடத்தை போஸ்ட் கார்டுகளும், இன்லேண்ட் லெட்டர்களும் தானே அடைத்துக் கொண்டிருக்கின்றன.

“சார்… இப்போ வேற ஸ்லிப்பில் கையெழுத்துப் போடுறீங்களா?”

முருகேசு கேட்டபோது தான் நனவுலகிற்கு வந்தார் சங்கரநாராயணன் சார்.

மனம் கொஞ்சம் லேசானதுபோல இருந்தது. அவரது கருப்பு பவுண்டைன் பேனாவின் மூடியைத் திறந்து, பணம் எடுக்கும் ஸ்லிப்பில் கையெழுத்தைப் போடத் துவங்கினார்.

எல்லாம் சரியாகத்தான் வந்தது. ஆனால், நாராயணன் என்ற இரண்டாம் பகுதியில் ‘ன்’ போட்டு ஒரு நீண்ட இழுப்பின் முடிவில் ‘ன்’ உடன் முடியும். அந்த இழுப்பு மிஸ்ஸிங்..

சார் முருகேசுவின் முகத்தையே பார்த்தார் இப்போது, “சரியா வந்துட்டுதுல்ல இப்போ” என்பது போல.

முருகேசு, இப்போது வங்கி மேனேஜரின் முகத்தைப் பார்த்தான். அவர் திருப்தி அடையவில்லை என்பது தெரிந்தது.

“சார்.. எனக்கு ஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்.. நான் வேணும்னா தெரிந்தவர் என்பதற்கு ஒரு கையெழுத்துப் போட்டு தரேன் சார்..” என்றான் முருகேசு.

மேனேஜர் சிரித்தார். ” நீங்க போனவாட்டியே சொன்னீங்க முருகேசு… எத்தனை தடவை இப்படி வாங்குவது… நான் சொன்னமாதிரி செய்ங்க… அதுதான் நல்லது..” என்று அவர் இவனைப் பார்த்து சொன்னபோது, சங்கரநாராயணன் சார் “எனி பிராப்ளம் சார்?” என்றார்.

முருகேசு மீண்டும் ஆங்கில வாத்தியார் சங்கரநாராயணனை உற்றுப் பார்த்தான்.

* * * * * * * * * *

சங்கரநாராயணன் சார் இங்கிலீஷ் க்ராமர் எடுத்தால் தெளிவாய் புரியும்படி எடுப்பார். ஆக்ட்டிவ் வாய்ஸ், பேசிவ் வாய்ஸ் நடத்தும்போது கரும்பலகை முழுவதும் அவரது அழகான கையெழுத்தாகத்தான் இருக்கும். கூட்டெழுத்தில் ஆங்கில எழுத்துக்கள் தெளிவாய் தெரியும்.

கோபம் வந்து விட்டது என்றால், கையில் உள்ள சாக்பீஸ் துண்டை சட்டென ஒடித்து மேலே எறிந்து விடுவார். பிரம்பு அவருக்குத் தேவைப்படாது.

“படிக்காட்டி ஒரு நாயும் உன்னை மதிக்காது. எழுதப் படிக்க தெரியாத பயலுக மார்க்கெட்டில் மூட்டை தூக்கித்தான் பொழைக்கணும் பார்த்துக்க” என்று திட்டுவார்.

“ஒனக்குப் புரியணும்னு தான தமிழ்ல சொல்லி விளக்குறேன்.. அப்பவும் வகுப்பை கவனிக்காம, எங்கியாச்சும் பராக்குப் பார்த்துட்டு இருந்தேன்னா ஈரமண்ணால விளங்கும்”

சார் மாணங்கண்ணியாகத் திட்டுவார். அவர் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு ஜான்சன் சார் வந்தவுடன், கரும்பலகையை அழிக்கப் போகுமுன் கேட்பார்.

“போன பீரியட் சங்கரநாராயணன் சாரா?”

சாரின் அழகான கையெழுத்து பள்ளி முழுவதும் பிரபலம். இங்கிலீஷ் காம்போசிஷன் நோட்டு திருத்தும்போது சொல்வார்.

“டேய் பசங்களா.. பரீட்சை பேப்பர் திருத்தும்போது, அழகான கையெழுத்துல இருக்குற பேப்பரை பார்த்தாலே, மனசு நல்லா இருக்கும்டா.. தப்பாய் நீ எழுதி இருந்தால் கூட, சமயங்களில் அது தெரியாது.. கண்களை மயக்கும். மார்க்குகளை அள்ளிப் போடுவோம்.. கோழி கிண்டுன மாதிரி எழுதுனா, சரியாய் எழுதியிருந்தாலும் மார்க் போட மனசு வராது.. ரெட்டைக்கோடு நோட்டையே அதுக்குதாண்டா கண்டுபிடிச்சுருக்கான்.. ஒழுங்கா எழுதுங்க..” என்று போதனை செய்வார். எவன் கேட்டுருக்கான்!?

முருகேசு கையெழுத்து மேலே சொன்ன கோழி கிண்டுன கேஸ் தான். மணிக்கட்டு மொழியில் பலமுறை ஸ்கேலால் அடி வங்கியிருக்கிறான்.

ஒரு மழைக்காலத்தில், கீழே குனிந்தபடி வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகேசு, “சார் .எக்ஸ்கியூஸ் மீ..” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். ஒரு நிமிடம் வெலவெலத்துப் போய் விட்டான். எதிரே ஆங்கில வாத்தியார் சங்கரநாராயணன் சார் நின்று கொண்டிருந்தார். தலை நன்றாக நரைத்திருந்தாலும், சார் முகத்தை மறக்க முடியுமா?

“சார்.. நல்லா இருக்கீங்களா..?” என்று எழுந்தான்.

மழையில் வந்திருப்பார் போல. குடையை மடக்கி சுவர் ஓரத்தில் சாத்தி வைத்தார். தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

அவருக்கு இவனை எல்லாம் ஞாபகமாய் இருக்கப் போகிறது..?

“கொஞ்சம் நேரம் ஆயிட்டது.. பென்ஷன் பணம் இப்போ எடுக்கலாமா.. டைம் முடிஞ்சு போயிட்டுது.. லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும் சார்..” என்று தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

“சார்..சார்.. என்ன சார்.. நீங்க.. மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.. ஸ்லிப்பில எழுதிக் கொடுங்க.. பணம் வாங்கிக்கலாம்..” என்றபடி பணம் எடுக்கும் ஸ்லிப்பை நீட்டினான் முருகேசு.

“தேங்க் யூ சார்..” என்று புன்னகைத்தபடி எழுதத் தொடங்கினார் சார்.

சாரின் அந்த கையெழுத்தை ரசிக்கத் தொடங்கினான்.

டூ த்வசன்ட் ஒன்லி என்று கூட்டெழுத்தில் எழுதி விட்டு, சங்கர.. என்று துவங்கி, கூட்டுப்புழு போல சுருண்டு சுருண்டு இழுத்துச் சென்று பிறகு என்னில் முடியும் கையெழுத்தை நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்தான்.

அவனது இங்கிலீஷ் காம்போசிஷன் நோட்டில் பத்திற்கு நாலரைக்கு மேல் அவனுக்கு போட்டதில்லை. மார்க் போட்டு இறுதியில் இந்த கையெழுத்து இருக்கும்.

“நான் உங்க மாணவன் சார்..” என்றவுடன், சார் கண்கள் விரிந்தன.

“அப்படியா.. பெயர் என்னப்பா.. எந்த வருஷம் படிச்சே..” என்று உற்சாகமாய் விசாரித்தார்.

“1975 பேட்ச்ல படிச்சேன் சார்.. எனக்கு கிளாஸ் டீச்சர் நீங்க.. ஏழுல இருந்து பத்து வரைக்கும் நம்ம ஸ்கூல்ல தான் படிச்சேன்..” என்றான் முருகேசு.

உள்ளே வரச் சொல்லி நாற்காலி போட்டு உட்கார வைத்தான். அவன் நின்று கொண்டே பேசினான்.

“நீ உட்காருப்பா.. நல்லாப் படிக்குற ஸ்டூடென்ட் தானே.. எப்படி மறந்தேன்னு தெரியலையே..” என்றார் சார்.

“அப்படி சொல்ல முடியாது சார்.. சுமாரான ஸ்டூடென்ட் தான்.. பத்தாவது ரேங்க் எடுப்பேன்..” என்று நெளிந்தான் இவன். இன்னமும் அவரது வகுப்பில் இருப்பது போன்ற உணர்வு.

பக்கத்தில் இருந்த அதிகாரிகளிடம் சங்கரநாராயணன் சாரை அறிமுகப்படுத்தினான். காபி வாங்கிக் கொடுத்தான். அன்று முதல், வங்கிக்கு வந்தால், நேராக இவன் இருக்கும் இருக்கை அருகே வந்து நின்று விடுவார் சார்.

ஒரு நிமிடம் காக்க வைக்க மாட்டான் இவன். இன்னைக்கு ஓரளவு இங்லிஷ் ட்ராப்ட் போடுகிறான் என்றால் அது, சார் போட்ட பிச்சை அல்லவா..

* * * * * * * *

“சார்..உங்களுக்கு கையெழுத்து சரியா வர மாட்டேங்குது.. சில ஸ்ட்ரோக்குகள் மாறுதுன்னு மேனேஜர் சொல்றார்.. அதனால…” என்று முருகேசு சொல்லத் துவங்கும்போதே,

“மூணாவதாகக் கொடுத்த ஸ்லிப்பில் சரியா போட்டேனப்பா..” சார் பரிதவித்த குரலில் சொன்னார்.

“சரியாகத்தான் சார் இருக்கு… ஆனால், கொஞ்சம் வித்தியாசப்படுது.. நான் இருக்குறதுனால பிரச்னை இல்லை.. நான் ஒருவேளை லீவுல இருந்தேன்னு வையுங்க.. ஒங்களுக்கு சிரமம் தானே..” என்று முருகேசு சொன்னான்.

“இப்ப அதுக்கு நான் என்ன செய்யணும்பா..” அவர் குரல் படபடத்தது.

அவன் அவரிடம் ஒரு பாரத்தை நீட்டி, “இந்த கட்டம் இருக்குற இடத்தில உங்களோட இடதுகை பெருவிரல் ரேகையை மையில் தொட்டு வையுங்க..” என்றான்.

“கைரேகையா.. நானா.. என்னப்பா சொல்ற.. நான் அந்தக் காலத்து பி.ஏ.பி.டீப்பா… அசிஸ்டன்ட் எட்மாஸ்டரா ரிட்டயர்டு ஆனவன்..” சங்கரநாராயணன் சாரின் குரல் தழுதழுத்தது.

“எனக்குத் தெரியாதா சார் உங்களைப் பற்றி… எங்களுக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுத்ததே நீங்க தானே.. கையெழுத்து சரியா வரலேன்னா, பேங்குக்குன்னு சில நடைமுறைகள் இருக்கு சார்.. மேனேஜர் போன தடவையே இதைச் சொன்னார்… நான் தான் கேக்கலை… நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு விட்டுட்டேன். இப்போ மறுபடியும் சொல்லும்போது உங்க கிட்டே சொல்லாம இருக்க முடியாது..” என்றான் முருகேசு.

தனது கழுத்தில் கிடந்த அங்கவஸ்திரத்தை சரிசெய்து கொண்ட சார், “நான் வேணும்னா ஒன்னு செய்யுறேன்.. வீட்ல போயி என்னோட சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடி, நிதானமா பணம் எடுக்குற ஸ்லிப்பில் கையெழுத்தை போட்டுப் பார்க்கிறேன்.. கண்டிப்பா வரும். நாலைந்து ஸ்லிப்பில் வேண்டுமானாலும் பழசைப் பார்த்து தப்பில்லாம எழுதிப் பார்க்கிறேன்.. எனக்கு இப்போ அவசரமாய் பணம் தேவைப்படல.. நாளைக்கு வேணும்னா வரட்டுமா”

சார் குரல் கரகரத்தது. குரல் கெஞ்சுவது போல இருந்தது. சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த அவரது மகன் அருகில் வந்தான்.

“என்னப்பா.. என்ன பிரச்னை” என்று கேட்டபோது, முருகேசு கையெழுத்து விவகாரத்தை மெதுவாய் சொன்னான்.

“இதுக்கெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்கப்பா.. வயசாயிட்டுது.. கை நடுக்கம் இருக்கு.. எல்லாருக்கும் வர்றது தானே.. உங்க நல்லதுக்குத்தானே சொல்றாங்க.. சார் சொல்ற மாதிரி ரேகையே வச்சிருங்க..” என்றான் அவரது மகன்.

” டேய்.. நான் படிச்சவன்டா.. என்னைப்போய்…”

சங்கரநாராயணன் சார் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டார். யாரேனும் தான் கைரேகை வைப்பதைப் பார்த்து படிக்காத அறிவிலின்னு ஏளனமாய்ப் பார்ப்பது போல உணர்ந்தாரோ என்னவோ..

“உங்களைப் போல பலர் ரேகை வச்சிருக்காங்க சார்.. எல்லோரும் ரொம்ப படிச்சவங்க தான்” என்றபடி முருகேசு, சாரின் இடதுகைப் பெருவிரலை எடுத்து இங்க் பேடில் உருட்டினான். மையுடன் இருந்த விரலை எடுத்து பணம் எடுக்கும் ஸ்லிப்பில் அழுத்தமாய்ப் பதிவு செய்யும் போது, ஸ்லிப்பில் விழுந்தது அவரது கண்ணீர்த்துளி.

 

– இரா.நாறும்பூநாதன்

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More