ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் (Vladimir Putin) தெரிவித்தார்.
ரஷ்யாவின் மாஸ்கோ மன்றத்தில் பேசிய ரஷ்ய ஜனாதிபதிபுதின், “புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் மிக அருகில் நெருங்கி விட்டோம்.
“விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
அதே சமயம், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், விரைவில் பயன்படுத்தப்பட உள்ள தடுப்பூசிகள் எந்த வகையான புற்றுநோயைத் தடுக்கும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் பல நாடுகளும், நிறுவனங்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு, இங்கிலாந்து அரசாங்கம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனத்துடன் இது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மாடர்னா மற்றும் மெர்க் & கோ மருந்து நிறுவனங்கள் சோதனை புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. இந்த சோதனை புற்றுநோய் தடுப்பூசி மிகவும் கொடிய தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதால் மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வரும் அல்லது இறப்புக்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.