டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த மிகப்பெரிய பணக்காரப் பயணியின் தங்கக் கைக்கடிகாரம் 1.17 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இடம்பெற்ற ஏலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் அந்தக் கைக்கடிகாரத்தை வாங்கினார்.
அது 100,000 முதல் 150,000 பவுண்டு வரை விற்பனையாகும் என எதிர்பார்த்ததாக ஏலத்தை நடத்திய Henry Aldridge & Son நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜேக்கப் ஆஸ்டருக்கு அந்தக் கைக்கடிகாரம் சொந்தமானது என்பதுடன், அதில் “JJA” எனும் அவரின் பெயரின் முதல் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது ஆஸ்டருக்கு வயது 47 வயது என்பதுடன், அப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் அவரும் ஒருவர்.
ஆஸ்டரின் மனைவி மேடலின் இந்த விபத்தில் உயிர்பிழைத்த நிலையில், கப்பல் மூழ்கிய ஒரு வாரத்துக்குப் பிறகு ஆஸ்டரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, கைக்கடிகாரம் அவரின் குடும்பத்திடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதுடன், அதனை ஆஸ்டரின் மகன் அணிந்திருந்ததாக ஏல நிறுவனம் தெரிவித்தது.