மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தோனேசியாவுக்கு திரும்பிய 39 இந்தோனேசிய தொழிலாளர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட 39 பேரில் 26 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள், மற்றும் 3 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தோனேசியாவின் வட சுமாத்ரா மற்றும் ஏசெஹ் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இப்படகு இந்தோனேசியாவின் Teluk Nibung கடல் பகுதியை கடந்த போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு முறையான ஆவணங்களின்றி சென்ற இவர்கள், அங்கு சட்டவிரோதமாக பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு படகு வழியாக திரும்பி இருக்கின்றனர்.
முறையான பயண ஆவணங்களின்றி இயந்திர படகு ஒன்றில், இந்தோனேசிய தொழிலாளர்கள் மலேசியாவிலிருந்து திரும்புகின்றனர் எனக் கிடைத்த உளவுத்தகவலைத் தொடர்ந்து 39 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.