தலாய் லாமாவின் வருகை கோபத்தின் உச்சத்தில் சீனா !!!

திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவின் வருகையை வரவேற்பதாகவும், வருகை தொடர்பான எந்தவொரு அழைப்பும் பொருத்தமான விதிகளின் கீழ் கையாளப்படும் என தைவான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1959ல் சீனாவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து திபெத்திய தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பின்னர் தர்மசாலாவில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று தலாய் லாமாவின் 85வது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. திபெத்தில் உள்ள திபெத்தியர்கள் தலாய் லாமா பிறந்தநாளை கொண்டாட சீனா தடை விதித்த போதிலும், அதனை மீறி பிரார்த்தனை செய்தும், சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டும் வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க பார்லி.,ம் சபாநாயகர் நான்சி பெலோசி, நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தலாய் லாமாவுக்கு வாழ்த்தையும், ஆதரவையும் தெரிவித்தனர். கடந்த 2009ல் புத்தமத போதனைக்காக தலாய் லாமா முதல்முறையாக தைவானுக்கு சென்றார். அவரை பிரிவினைவாதியாக கருதும் சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் ஹாங்காங் போன்று தைவானும் தனது நாட்டின் அங்கமென சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் ஒரு சுதந்திர நாடு என்றும், சீனா எதார்த்ததை புரிந்து கொள்ள வேண்டுமென தைவான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு தலாய் லாமா, தைவான் மக்களுக்கு அனுப்பிய வீடியோ செய்தியில், ‘அரசியல் சூழ்நிலை மாறும்போது, விரைவில் உங்களை மீண்டும் தைவானில் பார்வையிட முடியுமென நம்புகிறேன்.

தைவான் அதிபர் சாய் இங்-வென் சமீபத்திய நகர்வுகள் குறித்து குறிப்பிட்டு, என்ன நடந்தாலும், நான் உங்களுடன் தான் இருப்பேன்’ என கூறினார்.

ஆசிரியர்