இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்காக கனடா நாடாளுமன்றம் ஒரு நாளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஆக்குவதற்கான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி புதன்கிழமை இந்த பிரேரணையை முன்வைத்திருந்தார்.
Scarborough-Rouge Park இன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறானதொரு நாளை உருவாக்கிய உலகின் முதல் தேசிய நாடாளுமன்றம் கனடாவாகும் என தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கனடா அரசானது இலங்கையில் தமிழின அழிப்புக்கு தமிழருக்கு எதிரான அடடூழியங்களும் வெளி உலகுக்கு உறுதியாக தெரிவிக்கும் வண்ணம் உள்ளது. இந்த பிரேரணை மே 18 ஐ தமிழின அழிப்பு நினைவு நாளாகவும் பிரகடனப்படுத்துகிறது.
இது பலவருட கால தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களின் கடின உழைப்பு மற்றும் மனவுறுதி மூலமே சாத்தியமாகியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன அழிப்பில் இருந்து உயிர் தப்பி வாழும் தமிழ் மக்களுக்கு இது ஒரு நீதிக்கான ஒளிக்கீற்று ஆகவும் அவர்களின் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும் இருக்கும்.
அதேவேளை இன்னும் நிறைய வேலைகள் நீதிக்கான பயணத்தில் செய்யவேண்டியுள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரேரணை இன அழிப்பு செய்த இலங்கை அரசு கட்டுமானத்திற்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நீதிக்கான பொறிமுறை அவர்களை தண்டிக்கும் என்பதையும் காட்டி நிற்கின்ற அதேவேளை புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலும் தமிழின அழிப்பு பிரேணைகள் நிறைவேற்றுவதற்கு முதல் படியாக அமையவுள்ளது.
அத்துடன் கனேடிய அரசியல் கட்சிகளான பழைமை வாத கட்சி, கியூபெக் புளக் கியூபெக்குவா, புதிய குடியுரிமை கட்சி, பசுமை கட்சி என்பனவற்றுக்கு நன்றியும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியும் கூறப்பட்டுள்ளது.
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் பிரேரணை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி , மார்க் ஹொலண்ட் , கியூபெக் சமூக மையத்தின் தலைவர் வினோத் நவஜீவானந்தா , பேர்ல் அமைப்பின் பிரதிநிதி அபர்ணா அவர்களும் கலந்து கொண்டு பிரேரணையின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.