இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், 1937 முதல் 1943 வரை, காஷ்மீரின் பிரதமராக இருந்தவர் கோபாலசாமி ஐயங்கார். இவர் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.
சென்னை மாநிலக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரியில் படித்தவர். சிறிதுகாலம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1905ல் மெட்ராஸ் குடிமைப் பணியில் தேர்வாகி, 1919ல் துணை வட்டாட்சியராக பணியைத் துவங்கி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை செயலாளர் என பணியாற்றி உள்ளார்.
பின்னர் 1937 முதல் 1943 வரை காஷ்மீரின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு, காஷ்மீர் விவகாரங்களை கவனிக்கும் பணிக்கு பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்டார்.
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் 370ஆவது பிரிவு எழுதப்பட்டதும், அதற்கு அரசியல் நிர்ணய சபையில் ஒப்புதல் பெறும் பொறுப்பும் கோபாலசாமி ஐயங்காருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1953ல் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.