விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வேலைநிறுத்தங்களினால் பாதிக்கப்படுவது நாட்டிலுள்ள அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகள், இலவச சுகாதார சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள் நாட்டின் அப்பாவி ஏழை மக்களேயன்றி வசதிபடைத்தவர்கள் அல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற புகையிரத வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் பிள்ளைகள் உட்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக எந்தவொருவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த அரசாங்கத்தை போன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.