0
மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியநிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பவதிகள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மீள்குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறன ஒரு நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல்தடவையாகும். இந்த நிலையில் இன்றைய (31-08-2018) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை பத்து மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தின் போது பெண்நோயியல் மத்திய வைத்தியசாலையாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் நீங்கள் செய்வது சரியா? சுகாதார அமைச்சே உயரதிகாரிகளின் பாரபட்சத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், மத்திய அரசே கிளிநொச்சி மக்களின் வறுமையை உங்களால் அறிய முடியுமா?
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சிடம் வினவியபோது கடந்த இரண்டு மாதகாலத்தினுள் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்த 4 மகப்பேற்றியல் நிபுணர்களில் மூவர் பருத்தித்துறை முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கே நியமிக்கப்பட்டதாகவும்
அவ்வாறு நியமிக்கப்பட்ட நிபுணருடன் சேர்த்து கிளிநொச்சி வைத்தியசாலையில் மொத்த மகப்பேற்றியல் நிபுணர்கள் எண்ணிக்கை 03 ஆக காணப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு (02) மேலதிகமாகும்.
அந்த நிலையில் மகப்பேற்றியல் நிபுணர்களது மீள்சுழற்சி இடமாற்றத்தில் பொலநறுவ மாவட்டத்திற்கு செல்லவேண்டிய மகப்பேற்றியல் நிபுணரை உடனடியாக விடுவிக்குமாறும் அவ்வாறு விடுவித்தால் மட்டுமே சுகாதார அமைச்சினால் பதிலீடாக ஒரு மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சிக்கு நியமிக்கமுடியும் எனவும் வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆனால் அந்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டு மூன்று மகப்பேற்றியல் நிபுணர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சியில் சேவையில் இருந்ததாலேயே தற்போதைய குழப்ப நிலை நேரிட்டதாகவும் இதற்கான முழுப் பொறுப்பும் மாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத்துறையையே சாரும் எனவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வாரம் தனது வெளிநாட்டுக் கற்கையை பூர்த்தி செய்து நாடு திரும்பியுள்ள ஒரு மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சிக்கு நியமிக்க அமைச்சு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.