கொழும்பு நகரத்தில் கால்வாய்கள் (Cannals) அனேகமுண்டு என்றால் பலர் நம்பமாட்டார்கள். இலங்கையின் மேற்கு கரையோரத்தில் அமைந்த கொழும்பு நகரம் மேற்கு கடலில் கலக்கும் வடக்கில் களனி, கங்கைக்கும் தெற்கில் களு கங்கைளுக்கு இடையில் சதுப்பு நிலமாக ஒரு காலத்தில் இருந்தது. அதனால் காலப் போக்கில் பல ஒன்றோடு ஒன்றாக இணைந்த தேஹிவல, கிரிலப்பனே, கொலனாவ, கிந்த, தெமொடகொட, ஹீன்ம, செயின்ட்செபஸ்தியான் ஆகிய பல கால்வாய்கள் (Cannals). தோன்றின.
இவற்றில் 4 கி மீ நீளமுள்ள தெஹிவல கால்வாய், கிரிலப்பன கால்வாயோடு இணைந்தது, தெஹிவல கால்வாயின் ஒரு முடிவு வெள்ளவத்தையில் கடலோடு சங்கமிக்கிறது. செபஸ்தியான் கால்வாய் கொழும்புக்கு வடக்கே உள்ள களனி கங்கையோடு கலக்கிறது. வெள்ளவத்தை பகுதியில் உள்ள தெஹிவல கிரிலப்பொன கால்வாய்களைத் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் அதை நிற்சயம் அவர்கள் அறிந்து இருப்பார்கள்.
அனேகமாக நகரத்தில் உள்ள அகன்ற பாதை ஓரத்தில் உள்ள உயர்ந்த கட்டிகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு கால்வாய் ஓரங்களில் வறுமையில் வாழ்பவர்களின் தகர கூரைகள் உள்ள குடிசைகளைக் காணலாம், கழிவு நீரைப் பாச்சுவதுக்கும் மல சலம் கழிக்க கால்வாய் உதவுகிறது. நுளம்புகளின் குடும்பப்பெருக்கத்துக்கு ஏற்ற இடம் கால்வாயாகும்.
அதனால் குடும்பக் கட்டுப்பாடு இல்லாத குடிசை வாழ் மக்கள் பால் உறவால் ஏற்படும் நோய்களை தவிர்த்து மலேரியா தடைக்காப்பு (Immunity) உள்ளவர்களாக கால்வா கரையோரத்தில் வாழ்கிறார்கள். மழை காலத்தில் கால்வாயில் வெள்ளம் நிரம்பி ஓடும் சிறுவர்கள் காகிதப் படகு விட்டு மகிழ்வார்கள்.
பிரித்தானியர் ஆட்சி முடிவில், வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு காலி பிரதான A2 பெரும் பாதையில் இருந்து தெஹிவல கால்வாயை நோக்கி நோக்கிச் செல்லும் குறுகிய அகலம் உள்ள ஒழுங்கை விஹாரா லேன் (Vihara Lane) என்ற நாமத்தில் இருந்தது. அதற்கு அந்த பெயர் வந்த காரணம் அந்த ஒழுங்கை ஒரமாக ஒரு பெளத்த விஹாரை இருந்ததே.
விஹாராவில் நடக்கும் பெரஹராவை காரணம் காட்டி வீடு வீடாகப் போய் தெண்டல் மூலம் பணம் சம்பாதிப்பது அந்த ஒழுங்கையில் வாழந்த காடையர்களுக்கு சௌகரியமாக இருந்தது. விஹார லேன் பெயரை அறியாத கொழும்புத் தமிழர் இல்லை.
தமிழ் குடும்பங்களின் சொத்துக்களை அடிக்கடி நடந்த இனக்கலவரத்தின் போது தாக்கிக் கொள்ளை அடித்த கும்பல்கள் வசிக்கும் இடம் விஹாரா லேன். காலப் போக்கில் விஹாரா லேன் பதவி உயர்வு பெற்று அகன்ற ஸ்ரீ பொதிருக்கராம மாவத்த (Sri Bodhirukkarama Mawatha) என்ற உச்சரிக்க முடியாத நீண்ட பெயரைப் பெற்றது. அந்த வீதியில் ஒரு பௌத்த விஹாரை இருப்பதும் அப்பகுதியில் பல குற்ற செயல்களுக்கு குறைவில்லை.
அந்த வீதியில் தமிழர்கள் வசிப்பது மிகக் குறைவு. கொழும்பு தமிழர்கள் நிகர் வாழும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் வெள்ளவத்தையில் இனக்கலவரம் விஹார லேனில் வாழும் காடையர்கள் கூட்டத்தினால் ஆரம்பிக்கும். விஹார லேமனுக்கு எதிர்பக்கத்தில் கொழும்பு காலி வீதியைக் கடந்து மேற்கு பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் வாழும் இராமகிருஷ்ண வீதியும் விவேகானந்தர் வீதியும் உண்டு. இராமகிருஷ்ண வீதியில் கொழும்பு இராமகிருஷ்ணா மீஷன் உண்டு. அதுவும் இனக்கலவரத்தின் போது பல தடவை விஹாரா லேன் காடையர்களால் தாக்கப் பட்டது.
****
தெஹிவல கால்வாய் ஓரத்தில் உள்ள ஒரு குடிசையில் பிறந்து வளர்ந்தவன் நந்தமித்ரா. துட்ட கைமுனு பக்கத்தில் தமிழ் வீரர்கள் தமிழ் சேனாதிபதிகளில் நந்தமித்ராவும் ஒருவன். விஹாரா லேனில் வசிப்வர்கள் அவனை மித்திரா என்றுகூப்பிடுவார்கள். மித்திரா என்றால் நண்பன் என்று அர்த்தம். அவன் பெயருக்கு ஏற்ற நல்ல இரக்க குணம் உள்ளவன். அந்த வீதியில் வாழும் காடையர்களோடு சேர்ந்து அவன் குற்ற செயல்கள் புரிவது கிடையாது.
தினமும் விஹார லேனில் உள்ள பெளத்த விஹரவுக்கு போகத் தவற மாட்டான். மித்திரா வறிய குடும்பத்தில் பிறந்தாலும் இனிமையான குரல் வளம் உள்ளவன். மித்திரா நீரழிவு நோய் பாதிப்பினால் இளம் வயதில் அவனின் இரு கண்களும் குருடாயிற்று.
தான் குருடு என்பதை மறக்க இனிமையாக சிங்களத்தில் “போர்த்துக்கீசு காரயா” போன்ற பிரபல சிங்களப் பொப்பிசை விருது கிராமப் பாடலகளை கையில் ரப்பான் என்ற சிறு மத்தளம் அடித்தபடியே தன் குரல் திறமையை வைத்து கொழும்பு காலி பிரதான வீதி ஓரத்தில் இருந்து பாடிப் பிழைத்தான்.
சில சமயம் எம் ஜி ஆர் நடித்த தமிழ் சினிமா பாடல்களும் முக்கியமாக திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடலை அடிக்கடி பாடுவான். அவனுக்கு கண் தெரிந்த காலத்தில் எம் ஜி ஆர் படங்களை அருகில் இருந்த ரோக்சி தியேட்டரில் பார்க்கத் தவறமாட்டான். விகாரலேனுக்கு அருகே உள்ள ஒரு பெரிய நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவனின் இசையில் மயங்கி நின்று இரசித்து, பணம் கொடுத்து செல்வார்கள். சேரும் பணத்தில் ஒரு பகுதி விஹாரா லேன் காடையர் கூட்டத்துக்கு அவன் கப்பம் கட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் அவனை காடையர் கூட்டம் ஹோட்டல் அருகே பாட விடமாட்டார்கள்.
மித்திராவுக்கு நான்கு வயது மூத்தவள் அவளின் தங்கை மாலினி. தொடர்மாடி குடியிருப்புகளில் சுத்தம் செய்தல், வீடுகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடுதல், பழைய இரும்பு மற்றும் போத்தல்கள் கார்ட்பொட் மட்டைகளை சேகரித்து விற்றல் போன்ற தொழில் செய்து அவள் உழைத்தாள். தம்பிக்கு வாய்க்கு சுவையான உணவு சமைத்து கொடுப்பாள். இரு சிறு அறைகள் உள்ள குடிசையில் அவர்கள் இருவரினதும் உலகம் இருந்தது.
தந்தை பண்டா ஒரு குடிகாரன். அவனின் மனைவி போடிஹமியின் மறைவுக்குப் பின் இன்னொருத்தியோடு வேறு ஓரு குடிசையில் வாழ்ந்தான். பல தடவை மகனிடம் வந்து அவன் ஊதியத்தில் குடிக்க பண்டா பணம் வாங்கிச் செல்வான். மாலினி பண்டாவோடு பேசுவதில்லை.
மித்திராவின் மேல் கருணை கொண்ட ஒரு சுற்றுலாப் பயணி ஒருவர் கண் தெரியாதவர்கள் பிறர் உதவியின்றி நடக்க பாவிக்கும் வெள்ளை நிறக் கைக்கோல் ஒன்றினை மித்திராவுக்கு பரிசாகக் கொடுத்தார். அவனுக்கு அது பிறர் துணை இல்லா மல் நடக்க பெரும் உதவியாக இருந்தது.
மித்திரா தினமும் இருந்து பாடும் வீதி ஓரத்தின் பக்கத்தில் சக்தி பவன் என்ற உணவகம் இருந்தது. அங்கு அவன் சில சமயம் பணம் கொடுத்து உணவு வாங்கி உண்பான். மித்திரா ஒரு நாள் தமிழ் சிறுமி தமிழில் பிச்சை எடுப்பது அவனின் காதில் விழுந்தது. அவளிடம் தனக்கு தெரிந்த தமிழில் மித்திரா பேசினான்.
“பிச்சை எடுக்கும் உன் குரலைக் கேட்டால் தங்கச்சி நீ ஒரு தமிழ் சிறுமி போல் இருக்கிறது. நான் சொலவது சரியா?”
“ஓம் அண்ணா”
“அது சரி உன் பெயர் என்ன?”
“வள்ளிநாயகி. என் அம்மா என்னை வள்ளி என்று கூப்பிடுவா”
“உன் அப்பா பெயர் என்ன?”
“என் அப்பா யார் என்று எனக்குத் தெரியது”
“உன் அம்மா யார்?”
“கண்டி தேயிலை தோட்டத்தில் இருந்து கொழும்புக்கு வந்து யாரோ ஒருவனால் ஏமாற்றப்பட்ட முத்தம்மா அவ பெயர்”
“அவ இப்போ எங்கே?”
“யரோ ஒருவன் என் அம்மாவுக்கு வேலை எடுத்துத் தருவதாகக் கூட்டி சென்று விட்டான். அவள் திரும்பவில்லை”
“இப்ப நீ ஒரு அனாதைப் பெண்ணா?”
“ஓம் அண்ணா பிச்சை எடுத்து வாழ்கிறேன். தெரு ஒதுக்குப் புறத்தில் படுக்கிறேன் . எனக்கு ஒருவரும் இல்லை அண்ணா”
“உனக்கு பாவாடை சட்டை யார் வாங்கி தருவது?”
அவளின் சிரிக்கும் குரல் அவனுக்குக் கேட்டது.
“ஏன் சிரிக்கிறாய் வள்ளி?”
“எனக்கு இப்ப வயது பதின்ரெண்டு இன்னும் சில வருடத்தில் அம்மாவை போல் யாரும் ஒருவர் வந்து என்னை கூப்பிட்டால் நான் அவரோடு போய்விடுவேன். எனக்கு பலரைக் கவரும் புது பாவாடை சட்டை வாங்கித் தருவார்கள். என்னை பாதுகாப்பவர்கள் உண்ண நேரத்துக்கு உணவு தருவார்கள் நான் பிச்சை எடுக்கத் தேவையில்லை”
மித்திராவுக்கு புரிந்து விட்டது இன்னும் சில வருடங்களில் விலைமாது வேலைக்கு தன்னை வள்ளி தயார் படுத்திக் கொள்கிறாள் என்று.
சுபாவத்தில் இரக்கம் குணம் உள்ள மித்திரா கடை முதலாளியிடம் பணம் கொடுத்து அந்த சிறுமிக்கு மூன்று நேரமும் உணவு கொடுக்கும் படி சொன்னான்.
அதை கேட்ட அந்த சிறுமி “மிகவும் நன்றி அண்ணா” என்றாள்.
“வள்ளி நீ இனி பிச்சை எடுக்கக் கூடாது. யார் வந்து கூப்பிட்டாலும் உன் அம்மாவைப் போல் நீ போகக்கூடாது. இனி என்னை மித்திரா அண்ணா என்று கூப்பிடு. நானும் உன்னைப் போல் அம்மா இல்லாதவன்.. கடவுள் எனக்கு பாடும் திறமையைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்கிறேன் அது சரி நீ பாடுவியா?”
“ஓரளவுக்கு எனக்குத் தெரிந்த தமிழ் சினிமா பாடல் பாடுவேன்”
“எங்கே ஒரு பாட்டு பாடு உன் குரலைக் கேட்பம்”
வள்ளி ஒரு தடவை இருமி விட்டு “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற சினிமாப் பாடலைப் பாடத் தொடங்கினாள்.
அவள் பாடி முடிந்ததும், “வள்ளி உனக்கு ஓரளவுக்கு நல்ல குரல் இருக்கு. கவனமாக அதை பாதுகாத்துக்கொள். என் அக்கேயோடு பேசி உனக்கு இன்னொரு உதவியும் செய்யப் பாக்கிறேன்” மித்ரா வள்ளிக்குக்குச் சொன்னான்.
மித்ராவின் மனித தன்மையைக் கண்டு சக்தி கபே முதலாளி சிறுமியின் மதிய போசனத்துக்கு மட்டுமே அவனிடம் பணம் வாங்கினார். ஒரு முடிவோடு மித்ரா வீடு திரும்பினான்.
****
குடிசையில் தன் தம்பி மகிழ்ச்சியோடு வந்ததை கண்ட மாலினி, “என்ன தம்பி இன்று சந்தோசமாக இருக்கிறாய். பணம் அதிகம் இன்று உனக்கு கிடைச்சுதா?”
“பணத்தை விட ஒரு விலை மதிப்பு கூடிய சந்திப்பு எனக்கு கிடைத்தது அக்கே”
“யார் அந்தச் சந்திப்பு?”
“12 வயது உள்ள ஒரு ஏழை தமிழ்ச் சிறுமியின் சந்திப்பு”
“தமிழ் சிறுமியா”? “ஒவ் (ஆம்) அக்கே, என்னைப் போல் நன்றாகப் பாடக் கூடியவள். பாவம் அவளின் தாய் யாரோடோ போய் விட்டாள். அந்த சிறுமிக்கு தந்தை பெயர் தெரியாதாம்”
“அவளுக்கு என்ன பெயர்?”
“வள்ளியம்மா”
“ஒகரு” தேயிலை தோட்டத்து தமிழ் வாசியின் பெயர் போல் இருக்கிறதே?”
“வள்ளியின் தாய் முத்தம்மா கண்டியில் பிறந்து வளர்ந்தவளாம். வேலை தேடி கொழும்புக்கு வந்தபோது ஒருவனால் ஏமாற்றப்பட்டு விட்டாள்”
“சரி இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய் தம்பி?”
“அக்கே உன்னிடம் ஒரு உதவி கேட்கிறன். வள்ளியை எங்கள் வீட்டில் வந்திருக்க சம்மதிப்பாயா? அவளும் எங்கள் உணவை சாப்பிடட்டும். என்னோடு சேர்ந்து பாடி உழைக்கட்டும்”
“தம்பி உன் இரக்க குணம் எனக்குத் தெரியாதா.. அவள் எங்கள் வீட்டில் வந்து இருக்க எனக்கு ஆட்சேபனை இல்லை”மாலினி சொன்னாள்.
“வள்ளி கிழிந்த சட்டையும் பாவாடையும் போட்டு இருப்பதாக எனக்கு அவள் சொன்னாள். அவளுக்கு புது துணி வாங்க இந்தா பணம் அக்கா” மித்திரா மாலினியிடம் பணத்தைக் கொடுத்தான்.
மாலினியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தம்பியை கட்டிப் பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
– பொன் குலேந்திரன் (கனடா)