அழகிகள் வரிசையில் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு அவள் ஒன்றும் அழகானவள் அல்ல. நிறமும் குறைவுதான். நீண்ட தலைமயிரை எண்ணை வைத்து அழுத்தமாய் வாரி பின்னியிருப்பாள். எப்போதும் நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பாள். அவள் அதிகம் படித்தவளுமல்ல. ஊர் பள்ளிக்கூடத்தில் பத்தாவது வரையே படித்தாள். ஐந்தாம் வகுப்பு இரண்டு தடவை படித்தவள் என்பதும் அவனுக்குத் தெரியும்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளும் அல்ல. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அவர்கள் ஊருக்கு வந்து வாழுகின்ற குடும்பம். அப்பா வயல் செய்பவர். ஐப்பசி கார்த்திகையில் நெல் விதைத்தால் தை மாசியில் அறுவடையாகி நெல் வீடு வரும் போதுதான் கையில் காசு இருக்கும். அதுவரை பட்ட கடன்களை அடைத்து விட்டு மிகுதிப்பணத்தில் தேவையானவற்றை வாங்கிக்கொள்வார்கள். புதுத் துணி எடுப்பதாயினும் அப்போதுதான் சாத்தியப்படும். மற்றைய நாட்களில் சிரமப்படும் வாழ்வுதான்.
அவளின் அம்மா அவன் வீட்டுக்கு வந்து பல சமயங்களில் அம்மாவுக்கு உதவியாக இருந்திருக்கிறாள். உறவினர்களின் வருகையின் போது சமையலறையின் முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டு அம்மாவை ஆறுதலாக இருக்கச்செய்வாள். அவளின் அம்மா விதம் விதமான பலகாரங்களை அவர்களுக்கு செய்து தருவாள். பனம்பழம் விழும் காலங்களில் அவனும் அக்காவும் எடுத்து வந்து கொடுக்கும் பனம்பழங்களை அடுப்பு நெருப்பில் சுட்டு தோல் உரித்து கழி பிசைந்து மா, சீனி போட்டு பனங்காய் பணியாரம் சுட்டு தருவாள். அவள் சுட்டு தரும் பனங்காய் பணியாரம் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும். அப்படி ஒரு ருசியை வேறு யாரும் சுட்டுத் தருவதில் உணர்ந்ததில்லை. அம்மாவும் பார்த்தும் பாராமல் பணமாகவோ பொருளாகவோ நிறைய உதவி செய்வாள். உதவி செய்ய வருபவள்தானே என்று மதிப்பு குறைவாய் நடத்தியதில்லை.
அக்கா ஓரிரு தடவை அணிந்த தன் உடைகளை அவளுக்கு கொடுத்திருக்கிறாள். அவற்றை சந்தோஷமாய் வாங்கி உடுத்திக் கொள்வாள். வருஷாவருஷம் வருகின்ற முருகன் கோவில் ஆனி உத்தர திருவிழாவுக்கு அக்கா கொடுத்த சரிகை போட்ட சில்க் பாவாடை சட்டை போட்டு வருவாள். இரட்டைப் பின்னல் போட்டிருப்பாள். ஆரம்ப நாட்களில் பெற்ரோமாக்ஸ் வெளிச்சத்திலும் சரி பின் நாட்களில் மின்சார வெளிச்சத்திலும் சரி கோவிலுக்குள் நிற்கும் அவளைத்தான் அவன் பார்த்துக்கொண்டிருப்பான். இருட்டுப் பகுதியில் ஆண்கள் பக்கத்தில் நின்று அவன் தன்னைப் பார்ப்பதை அவள் அறிய வாய்ப்பில்லை.
அழகு, படிப்பு, வசதி என்று எல்லாவற்றிலுமே நடுத்தரத்திலும் கொஞ்சம் குறைவாகவே இருந்த அவளை எப்படிப் பிடித்துப்போனது என்று அவனுக்கே தெரியாமல் தான் இருந்தது. பல விஷயங்களுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாதது போலவே இதற்கான காரணத்தையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
யோசித்துப் பார்த்தால் அவளின் கண்கள்தான் அவனை ஈர்த்திருக்க காரணமோ என்று தோன்றியது . சதைப்பிடிப்பற்ற அவள் முகத்தில் கண்கள் மட்டும் அழகானதாய் அமைந்திருந்தது. அடர்த்தியான இமைகளுடன் சேர்ந்த அகன்ற கண்கள். எதிரே நிற்பவரின் கண்களைத் தாண்டி மனதை ஊடுருவும் பார்வை. பட படவென்று அடித்துக் கொள்ளும் இமைகள் எதிராளியை வசப்படுத்தும் தன்மை வாய்ந்ததோ என்று பல நேரங்களில் யோசித்திருக்கிறான்.
அம்மா அக்கா எல்லோருமே அவள் மீது அன்போடு தான் நடக்கிறார்கள். அதுதான் அவனுக்குள் இருந்த விருப்பத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்க வேண்டும். சின்ன வயதிலிருந்தே அவளைப் பார்த்திருக்கிறான் . அவளின் அம்மா அவன் வீட்டுக்கு உதவி செய்ய என்று வந்தால் சிலவேளைகளில் அவளும் கூடவே வந்து நிற்பாள். அவன் வீட்டு பின் கிணற்றடியில் கொய்யாமரம் நிறை காய்களுடன் இருக்கும்.
“ அண்ணா. இரண்டு கொய்யாப்பழம் பிடுங்கித் தாங்கோ.” என்று கேட்பாள்.
அண்ணா என்ற வார்த்தை அப்போதிருத்தே அவனுக்கு உவப்பானதாய் இருந்ததில்லை.
“ அண்ணா எண்டு கூப்பிடாதை.” ரகசியமாகச் சொல்லுவான்.
“ பின்ன எப்பிடி கூப்பிடுறது. நீங்கள் என்னை விட பெரிய ஆள் தானே.”
இதற்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. வளர வளர அவளின் அண்ணா என்ற அழைப்பு இன்னமும் பிடிக்காமல் போனது.
அவள் பத்தாவது வகுப்புடன் பாடசாலையிலிருந்து நின்று விட்டாள். அந்த நேரம் அம்மா மிகவும் சுகயீனம் அடைந்திருந்த நேரம். அக்காவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போய் விட்டதால் அவள் தான் வந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டாள். அவளின் பொறுமையும் கனிவும் பெற்ற தாயையே கவனிப்பது போன்ற அக்கறையும் அவன் மனதை இன்னமும் அவள் மீது நெருங்க வைத்தது.
அவன் பெரதேனியா பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய நேரம். படிக்க போவதற்கு முன்பாக தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லி விட நினைத்தான். அவளை நினைக்கும் போது ஏற்படும் பரவசம், அவளை ஒரு நாளேனும் பார்க்கா விட்டால் ஏற்படுகின்ற வெறுமை, எல்லாம் அவனுக்குள் இருந்த அவள் மீதான விருப்பத்தை மேலும் உறுதி செய்ய உதவியது. அவள் தவிர இந்த உலகத்தில் வேறேதும் பெரியதாய் இல்லை என்று நம்ப வைத்தது.
அவள் மீதான விருப்பத்தையும் அவன் தடுமாற்றத்தையும் அக்கா எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாள். அவனிடம் கேட்டபோது அவனால் மறைக்க முடியவில்லை.
“ ஓம் அக்கா. உனக்கு அவளைத் தெரியும் தானே. நல்ல குணம் எல்லாம் இருக்கு. “
அக்கா திகைத்துப் போய் பார்த்தாள்.
“ உனக்கு என்ன விசரே. நல்ல பிள்ளை தான். அதுக்கு கல்யாணம் செய்யிற வரைக்கும் போறதே. உது எல்லாம் சரி வராதடா. பேசாமல் இரு. முதல்ல படிச்சு முடிக்கிற வழியைப் பார்.”
அக்காவின் மறுப்பு கவலையைத் தந்தது. ஆனாலும் பொருட்படுத்த தோன்றவில்லை. அந்த இருபது வயதுக் காலத்தில் அப்படித்தான் இருக்க முடிந்திருக்கிறது. இது சரியா பிழையா என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவளுக்கு அது புரிந்திருக்கிறது . அவன் விருப்பத்தை கிணற்றடிக்கு தண்ணீர் அள்ள வந்தவளிடம் கொய்யாமரத்தின் கீழ் நின்று சொன்னபோது அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ என்ன அண்ணா நீங்கள்… என்ன சொல்லுறீங்கள்.”
“ அண்ணா எண்டு சொல்லாதை”. பதட்டத்துடன் சொன்னான்.
அவள் சிறிது நேரம் பேசாமல் நின்றாள். மனதின் அதிர்வை கண்கள் காட்டித் தந்தன.
“இதெல்லாம் சரியாய் வராது… தேவையில்லாமல் பிரச்சனையள் தான் வரும். “
அவன் முகத்தை நேராய் பார்த்து சொன்னாள். அந்தக் கண்களும் பார்வையும் மனதை ஆழமாய் வந்து தாக்கியது. அந்தக் கண்களில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாளா என்று தேடினான். உள்ளூர விருப்பம் இருந்து அதை சொல்ல தயங்குகிறாளா என்று ஆராய்ந்தான். எதுவுமே புரியவில்லை.
“ இதெல்லாம் இப்பவே விட்டிடுங்கோ அண்ணா.. ஒருதரிட்டயும் சொல்லிப்போடாதேங்கோ. என்னைத்தான் பிழையாய் நினைப்பினம்.”
அவள் விறு விறுவென்று போய்விட்டாள். அந்த வினாடியில் அவன் மனம் முழுவதுமாய் நொறுங்கிப் போனது. அதன் பின் அவள் வீடு வருவதையும் அவனை எதிர் கொள்வதையும் இயன்ற வரை தவிர்த்துக் கொண்டாள்.
அந்த மன வலியுடனேயே அவன் பெரதேனியா பல்கலைக்கழகத்திற்கு போனான். லீவுக்கு வரும் நாட்களிலும் அவளை அதிகம் பார்க்க முடிவதில்லை. இன்னொரு தடவை கதைத்துப் பார்க்கலாம் என்றாலும் அதற்கும் அவள் சந்தர்ப்பம் தரவில்லை. அவள் நினைவும் அந்த கண்களும் பல நாட்கள் அவனை வருத்திக் கொண்டிருந்தது.
படிப்பு படிப்பு என்று நாட்கள் நகர்ந்தது. படிப்பு முடிய லண்டன் வந்து விட்டான். தொடர்ந்து ஏற்பட்ட இடப்பெயர்வினால் அவள் குடும்பம் வேறெங்கோ போய் விட்டதாகவும் அவளுக்கு அங்கே திருமணம் நடந்ததாகவும் அக்கா சொன்னாள். சொல்லத் தெரியாத தவிப்பில் கொஞ்சக் காலம் மூழ்கிக் கிடந்தான். அவளின் கண்கள் நினைவுப் பரப்பில் நீண்ட காலம் தங்கியிருந்தது. லண்டனின் யந்திர வாழ்வில் அதுவும் சிறிது சிறிதாக மறைந்து போயிற்று.
லண்டனுக்கு படிக்க என்று வந்த நித்தியாவை திருமணம் செய்து கொண்டான். இரண்டு குழந்தைகள். இன்னொரு உலகம் அவனுக்காய் திறந்து கொண்டதாய் உணர்ந்தான். நித்தியா இனிய குணம் வாய்த்தவள். ஊரில் நடக்கும் பிரச்சனைகளை நினைத்து கவலை கொள்பவள். தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ளவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்பவள்.
இங்குள்ளவர்களிடமிருந்து பாவித்த உடுப்புக்களை சேகரித்து பெட்டி பெட்டியாய் ஊருக்கு அனுப்புவாள். வீடு முழுக்க பெட்டிகளும் உடுப்புகளுமாக இருக்கும். நாலைந்து பேர் சேர்ந்து நின்று அடுக்கிக் கொண்டிருப்பார்கள். எந்நேரமும் யாருக்காவது உதவி செய்வது பற்றியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பாள்.
“ ஹலோ ராகவி. தகப்பனில்லாத குடும்பம் ஒண்டு இருக்கு. நாலு பிள்ளையள். அதுகளை பொறுப்பெடுக்கிறியா. கோழி வளர்க்க உதவி செய்யலாம். உழைப்புக்கு ஏதும் வழி செய்து குடுத்தா அதுகள் சீவிச்சுக் கொள்ளுங்கள். நீ ஓமெண்டால் அதுகளின்ர போன் நம்பர் தாறன். இதுகளிட்ட போன் இல்லை. பக்கத்து வீட்டாக்களின்ர நம்பர்தான். நேர கதைச்சு ஏலுமானதைச் செய்.”
“ ஹலோ.. மிஸிஸ். சிவச்சந்திரன் . உங்களுக்கும் ஒரு குடும்பம் உதவி செய்ய வேணும் எண்டு பவித்ராவிட்ட சொன்னனீங்களாம். சில குடும்பங்களின்ர விபரம் உங்களுக்கு மெயில் பண்ணி விடுறன். பாருங்கோ.”
இப்படி ஊரில் உள்ள அவலப்பட்ட குடும்பங்களின் விபரங்களை எடுத்து இங்குள்ளவர்களுக்கு கொடுத்து தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுப்பாள்.
“ பாவங்கள் அப்பா. செட்டிகுளம் காம்ப்பிலயிருந்து மீள் குடியேற்றம் எண்டு வந்து வெறும் ஆட்களாய் நிற்குதுகள். எத்தனையோ சனம் உதவியில்லாமல் அந்தரிக்குதுகள். கண் இல்லாமல் கை கால் இல்லாமல் எத்தினை சனம். தாயை தகப்பனை இழந்து எத்தினை பிள்ளையள்.. அதுதான் எங்களால ஏலுமானதை செய்யிறம். பாருங்கோ அந்த சனங்களுக்கு உதவி வேணும் எண்ட உடன இங்க எத்தினை பேர் முன் வந்திருக்கினம் எண்டு.”
“ உண்மைதான். நல்ல விஷயம்தானே செய்”
அவள் எதைச்செய்தாலும் சரியாய் செய்வாள் என்பதால் அவன் எதிலும் தலையிடுவதில்லை. ஒரு விதத்தில் அவளின் இந்த இயல்பு அவனுக்கு பிடித்திருந்தது.
ஒரு குடும்பத்துக்கு மாடு வாங்கிக்கொடுக்கப் போகிறேன் என்று ஒரு நாள் சொல்லி காசு அனுப்புவாள் . அடுத்த மாதம் தாயுமில்லை தகப்பனுமில்லை படிக்க ஒரு பிள்ளைக்கு உதவி செய்யப்போறன் மாதாமாதம் ஐயாயிரம் அனுப்ப வேணும். பாவம். என்பாள்.
“மனுசன் ஷெல் பட்டு செத்துப்போயிட்டுதாம். ரெண்டு பிள்ளையள். ஓலெவலும் எட்டாம் வகுப்பும் படிக்குதுகள். சொந்தக்காணியும் இல்லாத்தால வீட்டுத்திட்டமும் இல்லையாம். அதுகளுக்கு பாதுகாப்பாய் இருக்க ஒரு அறையோட ஒரு வீடு கட்டிக் குடுக்கப் போறன். எனக்கு இண்டைக்கு காசு எடுக்க போக நேரமில்லை. ஒரு ஐநூறு பவுண்ஸ் வித்ரோ பண்ணித் தாங்கோ . நாளைக்கு வெம்பிளி போறன். அப்பிடியே குளோபல் எக்ஸ்சேஞ்ச்சில குடுத்து அனுப்பி விடலாம்” அவன் எடுத்து வந்து கொடுக்க நித்தியா மறுநாளே போய் அனுப்பி வைத்தாள்.
ஊரில் இருந்த அவர்கள் வீடும் இடிந்து போய் விட்டதால் அக்காவுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள்.. வீட்டில் உள்ள மரங்கள் கூட அழிந்து விட்டதாய் அக்கா கவலைப்பட்டாள். கொய்யாமரம் நிற்கிறதா இல்லையா என்று அவன் கேட்கவில்லை. கொய்யாமரத்துடனான நினவுகள் அவன் மனதை ஒரு கணம் அசைத்து விட்டுச் சென்றது.
ஊரில் அக்காவின் மகளுக்கு திருமணம் என்பதால் இலங்கை போவதாய் முடிவெடுத்தார்கள். பிரயாணத்துக்கு ஆயத்தமான போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்சல் கொண்டு வந்து தந்தார்கள். தாங்கள் பார்க்கும் குடும்பத்தினருக்கான உடுப்புகள், பிள்ளைகளின் படிப்புக்கான உபகரணங்கள் கொண்ட பொதிகள்.
“ நாங்கள் பார்க்கிற குடும்பத்துக்கு இதைக் குடுத்து பார்த்திட்டு வா நித்தியா. இந்தக் காசையும் கையில குடுத்து விடு.”
ஒவ்வொருவரும் தந்த பொதிகளால் பிரயாணப் பைகள் நிரம்பி விட்டன.
“ அங்க உள்ளதுகள் பாவங்கள் எண்டு ஆசையாய் தருகுதுகள். என்னெண்டு வேண்டாம் எண்டு சொல்லுறது. சமாளிச்சு கொண்டு போவம். நாலு பேரின்ர வெயிற் இருக்குத் தானே.”
நித்தியாவும் ஒரு பெரிய பொதியை உள்ளே வைத்தாள்.
“ நாங்கள் பார்க்கிற குடும்பத்து பிள்ளையளுக்கும் உடுப்புகளும் வேற பொருளும் வாங்கின்னான்.”
எல்லாவற்றையும் சீராய் அடுக்கி வைத்தாள்.
ஓகஸ்ட் மாதம் ஊருக்கு வந்தார்கள். வீட்டின் பின் பக்கம் கிணற்றடிக்கு அருகில் இப்போது கொய்யாமரம் இல்லை. புதிதாய் ஒரு மாதுளை மரம் செழிப்பாய் நின்றிருந்தது. இடப்பெயர்வு நேரங்களில் கவனிக்க ஆட்களற்று கொய்யாமரம் பட்டுப் போயிருக்கலாம். அந்த இடத்தைப் பார்த்ததும் அவளின் நினைப்பு வந்தது. . அவளின் முகமும் பெரிய கண்களும்தான் மனதுக்குள் வியாபித்து நின்றது.
இப்போது எங்கே இருக்கிறாளோ…
அக்காவின் மகளின் திருமணம் நல்லபடி நடந்து முடிந்தது. அந்த ஆரவாரம் முடிய இன்னொரு ஆரவாரம் தொடங்கியது. ஒவ்வொரு குடும்பமாக வீட்டுக்கு அழைத்த நித்தியா அவர்களுக்காக தந்து விட்டிருந்த பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களை புகைப்படமும் எடுத்துக் கொண்டிருந்தாள்.
“ உங்களுக்கு உதவி செய்யிறவையிட்ட கொண்டு போய் காட்டுறன். அவைக்கு சந்தோஷமாய் இருக்கும் .”
“ அவையளுக்கு தாங்ஸ் எண்டு சொல்லி விடுங்கோ அன்ரி. அவையளாலதான் பசி பட்டினி கிடக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். “ என்று அழுதவர்கள் தான் அதிகம்.
அன்று மதிய வெயில் சற்று தணிந்திருந்த நேரம்.
“ அப்பா ஒருக்கா இங்க வாங்கோ.”
நித்தியா அழைத்ததால் அவன் முன் அறைக்கு வந்தான்.
“ இவை தானப்பா நாங்கள் உதவி செய்யிற ஆட்கள். வீடு போட உதவி செய்து சீவியத்துக்கு கோழி வளர்க்கவும் படிக்கிறதுக்கும் உதவி செய்தம். இவைக்குத் தான்.”
எதிரே பார்த்தவன் ஒரு கணம் விக்கித்து நின்றான்.
அவள்….. அவள் தானா….
கலைந்து போன தலைமயிருடன்…. பொட்டு இல்லாத முகத்துடன்… மெலிந்து ஒடுங்கிப் போன தோற்றத்தில் நைந்து போன ஒரு சேலை கட்டி….. கடவுளே.. இதென்ன கோலம்..
கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இந்த வீட்டுக்கு வந்த பின் தான் உதவி செய்வது தாங்கள் தான் என்று தெரிய வந்திருக்கும்.
அவளின் கண்களில் நிறைந்து போயிருந்த நீர் கோடு கீறிக்கொண்டு கன்னங்களில் வழிந்தது.
என்றோ ஒரு காலம் அவன் கனவுகளை ஆக்கிரமித்திருந்த அந்த அழகான கண்களை இப்போது கண்ணீர் நிரம்பிய கண்களாக பார்க்க அவனால் தாங்க முடியாதிருந்தது.
பக்கத்தில் சின்ன வயது அவளாக அந்த சிறு பெண். தாய் அழுவதை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றது. அருகில் ஊன்றுகோலுடன் பன்னிரண்டு வயது சிறுவன்.
“ அப்பா. இவனுக்கு செயற்கைக்கால் பொருத்த ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறன். செலவை நாங்கள் தாறம் எண்டனான். ஓடி ஆடி விளையாட வேண்டிய பிள்ளை. பாவம். இவையின்ர கதையளைக் கேட்க எனக்கு தாங்குதில்லை.”
அவன் மௌனமாய் நின்றான். அவளை அந்த நிலையில் பார்த்த வினாடியிலிருந்து அவன் மிகவும் கலங்கிப் போயிருந்தான். அவளின் அழுத முகம் அவன் கண்களையும் கசிய வைத்தது.
நித்தியா அவனைப்பார்த்து “என்னப்பா நீங்களும் கவலைப்படுறீங்களா… இங்க பக்கத்திலதான் முந்தி தாங்களும் இருந்தவையாம். அந்தக் காலத்தில தங்களுக்கு நிறைய உதவியள் நீங்கள் செய்தனீங்களாம்.” என்றவள் அவளிடம் திரும்பி “அழாதேங்கோ. உங்களுக்கு நாங்கள் இருக்கிறம்.” என்றாள்.
“ இந்தாங்கோ” என்று கொண்டு வந்த பொருட்களைக் கொடுத்தாள்.
அவள் இரு கரத்தாலும் வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கைகளைக் கூப்பினாள்.
“தாங்ஸ் அக்கா.” என்றவள் அவனைப் பார்த்து கண் கலங்க “தாங்ஸ் அண்ணா“ என்றாள்.
அந்தப் பார்வையும் வார்த்தையும் அவனை அதிர வைத்தது.
பரிதவிப்போடு அவள் முகத்தைப் பார்த்தான்.
இவளுக்கு தான் ஒரு அண்ணனாகவே இருந்திருக்கலாமோ என்ற நினைப்பு எழுந்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஏனோ இப்போதும் மனசுக்குள் வலித்தது.
இந்த வலி வேறு.
நிறைவு..
– கதையும் ஓவியமும் தாமரைச் செல்வி
நன்றி. ஜீவநதி சஞ்சிகை