புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூதூர் – கூனித்தீவில் விகாரை அமைக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சி?

மூதூர் – கூனித்தீவில் விகாரை அமைக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சி?

2 minutes read

தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சர்ச்சைக்குரிய நிலையில் காணப்படும் திருகோணமலை – மூதூர் கூனித்தீவு பிரதேசத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் பதில் துணைப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எச்.ஏ.சுமணதாச திருகோணமலைப் பிராந்திய அலுவலகத்திற்குப் பொறுப்பாக இருப்பதுடன், அவர் தற்போது பௌத்த விகாரையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலையின் தென் பகுதியில் அமைந்துள்ள கூனித்தீவு பகுதியில் உள்ள சூடைக்குடா என்ற இடத்தில் உள்ள மத்தள மலை உச்சியில், பௌத்த விகாரையை அமைப்பதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கவனமும் கன்னியா நோக்கித் திரும்பியிருப்பதனால், துணைப் பணிப்பாளர் சுமணதாச மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து பௌத்த விகாரைக்கான கட்டுமாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குன்றத்தூர் மத்தள மலை திருமுருகன் ஆலயத்தின் தர்மகர்த்தா தெரிவித்ததாக தமிழ் நெற் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் main photoபிரதேசத்தில் உள்ள சைவ ஆலயங்களின் தர்மகர்த்தாக்களுக்கும் சுமணதாசவுக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த மலை உச்சியில் பௌத்த விகாரை ஒன்று இருந்ததாக விஞ்ஞான முறையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த சந்திப்பின்போது பௌத்த மக்கள் இல்லாத பகுதியில் இந்த ஆலயத்தை அமைப்பதானது எவ்விதத்திலும் பிரயோசனமற்றது என்று சைவக் குருமார்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் கருத்து வெளியிட்ட துணைப் பணிப்பாளர், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பற்றித் தனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்று குறிப்பிட்டதுடன் தேவையேற்படின் பொலிஸாரின் துணையுடன் தன்னால் இந்தக் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நேரத்தில் ஆலய நிர்வாகத்தினர் இந்த முடிவை நீங்கள் எடுப்பீர்களாயின் இந்தக் கலந்துரையாடலுக்கான தேவை என்ன என வினவியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் ஒரு சில பௌத்த பிக்குமார் இந்த இடத்தில் கிராமிய சைவக் கோவில் இருப்பதனை எதிர்த்ததை அடுத்து இலங்கைப் பொலிஸார் ஆலயப் பரிபாலன சபையினரை இந்தக் காலத்தில் துன்புறுத்தியிருந்தனர்.

முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மூதூர் கிழக்குப் பகுதியிலிருந்து 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2013 ஆம் ஆண்டில் பகுதியளவில் குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நன்றி – கூர்மை 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More