மருத்துவக் கழிவுகளால் ஆபத்தான இடமாக மாறும் யாழ் சரணலாயம்!

யாழ். சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளான.

சரசாலை பகுதியில் குருவிக்காடு என அழைக்கப்படும் குருவிகள் சரணாலயம் உள்ளது. அப்பகுதி ஊடாக செல்லும் வீதியின் இருமருங்கிலும் கழிவு பொருட்கள் வீசப்பட்டு வந்தமையால் , சரணாலய காடு துர்நாற்றம் வீசும் பகுதியாக காணப்பட்டதுடன் , அவ்வீதி வழியாக செல்வோரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

அது தொடர்பில் , பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வ அடிப்படையில் இளைஞர்களும் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் அப்பகுதியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்தனர்.

சிரமதான பணிகளின் போது தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளும் பெருமளவில் காணப்பட்டு அவை அப்புறப்படுத்தப்பட்டன

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் பொதுமக்கள் கழிவு பொருட்களை வீசாத நிலையில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வீசப்பட்டு வருகின்றன.

மருத்துவ கழிவுகள் உரிய பொறிமுறைகள் ஊடாக எரிக்கப்பட வேண்டும். அவற்றை வீதியோரங்களில் வீசுவது ஆபத்தானதாகும். அது அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கலந்து நீர் மாசடைவது மாத்திரமின்றி , சுற்று சூழலுக்கும் பெரும் ஆபத்தாக அமையும். எனவே பொறுப்பற்ற ரீதியில் அப்பகுதியில் மருத்துவ கழிவுகளை வீசும் தனியார் மருத்துவ மனையின் மீது சுகாதார அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்

ஆசிரியர்